தூத்துக்குடி மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அமைச்சர் பி.கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என்று கூறி எதிர்கால தமிழ் சமுதாயத்தை உருவாக்கக்கடிய கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பெருமிதம்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2023-2024ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கவிழாவினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் , மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று (28.10.2023) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது: நமது மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழாவில் வட்டார அளவில், மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் தனது திறமையை வெளிக்காட்டி கலையரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்தான். கலையரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு சுற்றுலாவிற்கு விமானம் மூலம் சென்று வந்தார். அதேபோல் இந்த ஆண்டு கலைசரன், கலையரசி பட்டங்களை நமது மாவட்டத்திற்கு நீங்கள் பெற்றுத்தர வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளி மாணவர்களை இன்னும் மிளிரச்செய்ய வேண்டும், எல்லா துறைகளிலும் சாதனை புரிய வைக்க வேண்டும் என்று வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்களிடம் ஒளிந்துகொண்டுள்ள தனித்திறமைகளை வெளிக்காட்ட இந்த கலைத்திருவிழாவை வழங்கியுள்ளார்கள். மாநில அளவில் போட்டிக்கு செல்லும்போது உங்களை மிகவும் நேர்;த்தியாக தயார்செய்து கொள்ள வேண்டும்.
கலைத்திருவிழாவானது, உங்களை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து உங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.
புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற நீங்கள் சேரும் கல்லூரியிலேயே விண்ணப்பம் அளித்தால் உங்கள் வங்கி கணக்;கிற்கே மாதம் ரூ.1000 வந்துவிடும். இத்திட்டத்தில் கல்லூரிகளில் 2, 3ம் ஆண்டு படிக்கும் 2.25 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளார்கள். தற்போது முதல் வருடம் படிக்கும் 95000 மாணவிகள் விண்ணப்பித்துள்ளார்கள்.
அதேபோல், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு உயர்கல்வியில் 52 சதவீதம் என்பதை இன்னும் மென்மேலும் உயர்த்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திட்டம் தீட்டி வருகிறார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என்று கூறி எதிர்கால தமிழ் சமுதாயத்தை உருவாக்கக்கடிய கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
நீங்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த வயதில் படிப்பது எளிது. எதிர்கால தலைவர்களாக, பொறியாளர்களாக, ஆசிரியர்களாக வரப்போகிறீர்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. அதை பெற்ற பயனடைய வேண்டும். மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து உயர்கல்வி படித்திட ஆசிரியர்கள் அவர்களை வழிநடத்திட வேண்டும்.
நீங்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். போட்டி என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உங்கள் திறமையை வெளிக்கொணர்வதற்கும், வளர்த்துக்கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நமது மாவட்ட மாணவர்கள்; மாநில அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது: மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் கடந்த 3 நாட்களில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளீர்கள். உங்களிடம் உள்ள திறமையை வெளிக்கொணர்வதற்காகத்தான் இதுபோன்ற ஒரு வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பள்ளிகளில் கற்றல் திறனை மட்டுமல்லாது கலைத்திறனையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். கலைத்திறனை வளர்ப்பதால் கற்றல் திறனையும் மேம்படுத்த முடியும்.
அதுபோன்ற ஒருங்கிணைந்த முழு வளர்ச்சி பெற்ற மாணவர்களாக மாற்றுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின் இந்த ஆண்டுக்கான கருத்துரு சங்கமிப்போம் சரித்திரம் படைப்போம் என்பதாகும். நீங்கள் அனைவரும் வெற்றியாளர்கள். நீங்கள் முதற்கட்டமாக பள்ளி அளவிலும், பின்னர் வட்டார அளவிலும் வெற்றி பெற்றுள்ளீர்கள். இன்று மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்துகொள்ள வந்துள்ளீர்கள். முயற்சி திருவினையாக்கும், முயற்சி எடுப்பதுதான் வெற்றியை நோக்கிய முதல் படி. இந்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த கட்டமாக மாநில அளவில் சென்றால் கலையரசன், கலையரசி பட்டம் கிடைக்கும் என்று கூறினார்கள்.
இங்கே வந்திருக்கும் அனைவரும் வெற்றியாளர்கள்தான். அனைவரும் கலையரசன், கலையரசிகள்தான். போட்டிகளில் பங்கேற்பது வெற்றியின் முதல்படி. இதில் வெற்றி பெற்று இலக்கினை அடைவோம். நீங்கள் அனைவரும் முயற்சி செய்து இங்கே வந்திருப்பதற்கு பாராட்டுக்கள். உங்களது கலைத்திறனை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இங்கே இருக்கக்கூடிய பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளி படிப்பை முடித்து அடுத்து கண்டிப்பாக கல்லூரிக்கு செல்ல வேண்டும். கலை, அறிவியல், தொழில்நட்பம், மருத்தும் என உங்களுக்கு விருப்பமான துறைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து உங்கள் திறனை மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு கல்லூரி படிப்பிற்காக மாதம் ரூ.1000 வழங்கும் அருமையான புதுமைப்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் திறன்கள் மேம்படுத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் டாடா குழுமத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அருமையான கட்டமைப்புகள் உருவாக்கியுள்ளார்கள். ஒரு துறைக்கு இன்னொரு துறை சிறிதானது கிடையாது. உங்கள் முயற்சிகள் உங்கள் திறமை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
எனவே அனைவரும் கல்லூரி செல்ல வேண்டும். தமிழ்நாடு உயர் கல்வியில் 52 சதவீதம் எட்டியுள்ளது. இது இந்தியாவிலேயே அதிகபட்சம் ஆகும். கலைத்திருவிழாவில் தனிப்பட்ட போட்டியாக இருந்தாலும் சரி, குழுப்போட்டியாக இருந்தாலும் நீங்கள் ஜொலிப்பதுபோல் கல்வியிலும் ஜொலிக்க வேண்டும். உயர்கல்வியிலும் பிரகாசிக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்து முதல் படியை எடுத்து வைத்துள்ளீர்கள். உங்கள் முயற்சி மென்மேலும் தொடர வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கலைத்திருவிழாவானது, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவு, 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவு என மொத்தம் மூன்று பரிவுகளிலும், பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநிலம் என நான்கு நிலைகளில் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்யைறய தினம் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில், 53 அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சார்ந்த 1192 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், கலைத்திருவிழாவில், தேவராட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கணியன் கூத்து, இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி, ஓவியப் போட்டி, களிமண் சிற்பம் செய்தல் போட்டி, கும்மி நடனம், தனிநடனம், குழு நடனம், கிராமிய நடனம், செவ்வியல் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.


