திருச்செந்தூரில் சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், தலைமையில் தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை இன்று (06.10.2023) வழங்கி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்றைக்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அந்த குழந்தைகளை பாதுகாக்கின்ற வகையிலே, குழந்தை பிறந்து அதற்கு பிறகும் அந்த குழந்தைகளை பாதுகாக்கின்ற வகையிலே பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்விதமாக இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையிலே இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ஆனால் தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் இன்றைக்கு கர்ப்பிணி பெண்களாக இருக்கின்றபொழுது நமக்கு வளைகாப்பு நடத்தவில்லையே என்ற நிலைகளே இல்லாத நிலையை உருவாக்கப்படும் என்ற வகையிலே தன்னுடைய கடமையாக, உங்களுடைய சொந்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் இருக்கின்ற இதுபோன்று எல்லா ஒன்றியங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துகின்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துகின்ற வகையிலே பல்வேறு நடவடிக்கைகளை இன்றைக்கு மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையிலே இன்றைக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அது தாயாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி அது அத்தனையும் இன்றைக்கு சுகாதாரமான நிலையிலே இருக்க வேண்டும் என்று சொல்லி எந்தவித குறையுமில்லாமல் அதிக ஆற்றலுள்ள குழந்தையாக உருவாகும் என்ற நிலையிலே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அந்த வகையிலே நீங்களும் வளைகாப்பில் உங்களது சகோதரனாக பார்க்க வேண்டும் என்ற வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் எல்லா பகுதியிலும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை செய்கின்றார். ஏனென்றால் சகோதாரனாக இருந்து செய்கின்றார் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இன்றைக்கு குறிப்பாக சொல்ல வேண்டுமென்று சொன்னால் பெண்களைப் பொறுத்த வரை எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என்று அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக மகளிர்கள் நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் மகளிர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம், பெண்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்கள் கல்வியில் உயர வேண்டும். 12ம் வகுப்பு படித்துவிட்டு நின்றுவிடக்கூடாது. கல்லூரிக்கு செல்ல வேண்டும், படிக்க வேண்டும்.
படித்தவர்கள் பண்புள்ளவர்களாக மாற வேண்டும் என்றால் ஒரு சமுதாயம் முன்னேறும் என்ற வகையிலே 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கக்கூடிய அற்புதமான திட்டமான புதுமைப்பெண் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தந்திருக்கிறார்கள்.
எந்த திட்டமாக இருந்;தாலும் முத்திரை பதிக்கும் திட்டமாக தருக்கின்ற நிலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கி தந்திருக்கின்றார்கள். அதுபோல இன்றைக்கு குறிப்பாக சொல்ல வேண்டுமென்று சொன்னால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். அதை தகுதியான குடும்பத்தலைவிகளை தேர்ந்தெடுத்து இன்றைக்கு 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கின்ற திட்டத்தை தந்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு மகளிருக்கு சுழல் நிதி கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வங்கி கடன் உதவி வழங்க வேண்டும் என்று அத்தனையும் செய்யுகின்ற வகையிலே மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலேயே மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, பெண்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ய வேண்டும் என்ற வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுகளை வழங்கியிருக்கின்றார்கள்.
எந்த வகையில் பார்த்தாலும் பெண்கள் எல்லா வகையிலும் உயர வேண்டும் என்று உங்களுக்கு உதவி செய்கின்ற வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுடைய உயர்வுக்காக எல்லா திட்டங்களையும் கொண்டு வந்திருக்கின்றார்கள். இன்றைக்கு கர்ப்பிணி தாய்மார்களாக வளைகாப்பிற்கு வந்திருக்கின்ற இந்த தாய்மார்கள் எல்லா வகையிலும் ஆரோக்கியம் பெற்று, தங்களுடைய குழந்தைகளையும் ஆரோக்கியமாக பெறுகின்ற நிலையினை நீங்கள் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நான் வாழ்த்துகின்றேன்.
அதேபோல தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமென்று சொன்னால் எந்த வகையிலும் பெண்களுக்கான உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஒரு பாராளுமன்ற உறுப்பினர். பெண்களுக்கு எந்த வகையிலும் வருகின்ற குறைகளை நிவர்த்தி செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார்கள். அந்த வகையில் கர்ப்;பிணி தாய்மார்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: சமுதாய வளைகாப்பு விழாவில் வந்திருக்கிற தாய்மார்கள் ஏற்கனவே குழந்தை பெற்று தற்போது இரண்டாவது குழந்தைக்காக வந்திருக்கலாம். நிறைய பேர் முதல் குழந்தைக்காக வந்திருக்கலாம். உங்களுக்கென்று நிறைய கனவுகள் இருக்கும். நீங்கள் இப்போது ஒரு உயிர் கிடையாது. இரண்டு உயிர். உங்களுடைய ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் உங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் சரிசெய்ய வேண்டும். அதற்காகத்தான் அரசாங்கம் கர்ப்பிணி தாய்மார்களுக்காக எல்லாமே செய்து கொண்டிருக்கிறது.
உங்களுக்கு கர்ப்பம் தரித்ததிலிருந்து தடுப்பூசி போடுவதிலிருந்து உங்களுக்கு சத்தான காய்கறிகள் வழங்குவது. சத்தான உணவு வழங்குவது குழந்தைகளை முறையாக பெற்றெடுத்து குழந்தைகள் தடுப்பூசி முதல் வளைகாப்பு வரை அனைத்தையும் சேர்த்து அரசாங்கமே சமுதாய வளைகாப்பு செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உணர்வு இருக்கிறது. நல்ல குழந்தை, ஆரோக்கியமான குழந்தையாக அந்த குழந்தையை வளர்ப்பீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது அரசாங்கம் ஏற்கனவே தடுப்பூசி போட சொல்லியிருக்கிறது. அங்கன்வாடி மையத்தில் உங்களுக்கு தேவையான சத்து மாவு எல்லாமே கொடுப்பார்கள்.
அதை நீங்கள் தான் சாப்பிட வேண்டும். உங்கள் உறவினர்களுக்கு கொடுக்கக்கூடாது. நீங்கள் ஒருபோதும் உங்கள் உரிமைகளை விட்டு கொடுக்கக்கூடாது. கொஞ்சம் சுயநலமும் இருக்க வேண்டும். நீங்கள் சத்தாக சாப்பிடுவது உங்களது நலனுக்கு மட்டும் கிடையாது. உங்கள் வயிற்றில் இருக்கின்ற குழந்தைகளின் நலனுக்கும்தான். ஆகையால் கர்ப்ப காலங்களில் கொடுக்கப்படும் சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். உங்கள் உடலில் ரத்த அணுக்கள் சத்துக்கள் நிறைய வேண்டும்.
அப்படியென்றால்தான் ஆரோக்கியமான நிலையை அடைய முடியும். அறுவை சிகிச்சையாக இருந்தாலுமே எந்தவிதமான ரத்தம் ஏத்தாமலே உங்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். அதனால் நீங்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கிட்டு கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் நீங்கள் உடனடியாக வீட்டுக்கு சென்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைக்கு வருவீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களான தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், இனிப்பு மற்றும் மதியம் ஐந்து வகை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், திட்ட அலுவலர் (ஒ.கு.வ.தி.ப.) இல.சரஸ்வதி, திருச்செந்தூர் வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.பி.காயத்ரி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பி.வாமணன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் சு.கண்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லா.ஆண்ட்ரோ (கிராமம்), பெ.பொங்கலரசி (திட்டம்), திருச்செந்தூர் மேற்பார்வையாளர் நிலை 1 விஜிலியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


