இன்று நமது வெப்சைட்டில் 122 வது நாடாக காயனா என்ற நாடு இணைந்துள்ளது. கடல் தாண்டி நமக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் உள்ளங்களுக்கு மிக்க நன்றி. இது வரை 3 லட்சத்து 88 ஆயிரம் பார்வையாளர்கள் நமது வெப்சைட்டை பார்த்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நமது வெப்சைட்டை காண writer kamarasu என்ற ஆப்பை டவுண் லோடு செய்து தூத்துக்குடி மாவட்ட செய்திகளை படித்து மகிழுங்கள் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
கயானா (கயானா கூட்டுறவுக் குடியரசு ),[என்பது தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் உள்ள ஒரு நாடு ஆகும். கயானாவின் எல்லைகளாக கிழக்கே சுரிநாம், தெற்கு மற்றும் தென்மேற்கே பிரேசில், மேற்கே வெனிசுவேலா ஆகிய நாடுகளும், வடக்கே அத்திலாந்திக் பெருங்கடலும் அமைந்துள்ளன.
கயானா முதன் முதலில் 1667 முதல் 1814 வரை டச்சுக்களின் குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர், பிரித்தானியரின் ஆட்சியில் பிரித்தானிய கயானா என்ற பெயரில் 150 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1966 மே 26 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 பெப்ரவரி 23 இல் குடியரசானது. 2008 இல் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது. கரிபியன் சமூகம் என்ற அமைப்பில் உறுப்புரிமை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ளது.
பொதுநலவாய அமைப்பில் உறுப்பினராக உள்ள கயானா தென்னமெரிக்க நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வமொழியாக உள்ள ஒரே ஒரு நாடு ஆகும். கயானாவின் பெரும்பாலானோர் ஆங்கிலம், டச்சு, மற்றும் அரவாக்கன், கரிபியம் கலந்த கயானிய கிரியோல் மொழியையும் பேசுகின்றனர்.
215,000 சதுர கிமீ (83,000 சதுரமைல்) பரப்பளவு கொண்ட கயானா தென்னமெரிக்காவில் உருகுவை, சுரிநாம் நாடுகளை அடுத்த மூன்றாவது சிறிய நாடாகும்.
கயானாவில் யாய் வாய், மச்சூசி, பட்டமோனா, அரவாக், காரிப், வப்பிசானா, அரெக்குனா, அக்கவாயோ, வராவு ஆகிய ஒன்பது பழங்குடி இனங்கள் வாழ்கின்றனர். வரலாற்று ரீதியாக, அரவாக்கு, காரிப் இனங்கள் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள். கொலம்பசு 1498 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது கடல் பயணத்தின் போது கயானாவைக் கண்டு பிடித்திருந்தாலும், டச்சு நாட்டவரே முதன் முதலில் இங்கு தமது குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்: எசெக்கிபோ (1616), பெர்பிசு (1627), தெமெராரா (1752). பிரித்தானியர் 1796 ஆம் ஆண்டில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1814 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் முழுமையாக வெளியேறினர். 1831 இல் மூன்று தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் “பிரித்தானிய கயானா” என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன.
1824 இல் வெனிசுவேலா விடுதலை பெற்ற பின்னர், எசெக்கிபோ ஆற்றின் மேற்குப் பகுதியை அது தனது நிலப்பகுதியாகக் கோரியது. பெர்பிசு, டெமெரேரா பகுதிகளில் குடியேற்றம் நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிமோன் பொலிவார் பிரித்தானிய அரசுக்குக் கடிதம் எழுதினார். இப்பகுதி பிரித்தானியாவுக்குச் சொந்தமானது என 1899 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஆணையம் தீர்ப்பளித்தது. ஆனாலும், இந்த எல்லைப் பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதும் தொடர்ந்து வருகிறது.
கயானா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966 மே 26 ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் 1970 பெப்ரவரி 23 இல் குடியரசு ஆனது. ஆனாலும் தொடர்ந்து பொதுநலவாய அமைப்பில் தொடர்ந்து உறுப்பினராக உள்ளது. இக்காலகட்டத்தில் அமெரிக்க அரசுத் திணைக்களம், அமெரிக்க சிஐஏ, ஆகியன பிரித்தானிய அரசுடன் இணைந்து கயானாவின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[]இந்திய வம்சாவழியினரான செட்டி ஜகன் ஒரு மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தப்பட்டமையினால், விடுதலைக் காலத்தின் ஆரம்ப காலத்தில் அமெரிக்க அரசு போர்பொசு பேர்ன்காம் தலைமையிலான மக்கள் தேசியக் காங்கிரசுக்கு நிதி, மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவளித்து வந்தது. இதன் மூலம் ஜகன் தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
கயானாவின் பெரும்பாலான மக்கள் (90%) குறுகிய கரையோரப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இப்பகுதியின் அகலம் 16 முதல் 64 கிமீ (10 முதல் 40 மைல்) ஆகும். இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 10% ஆகும்.
கயானாவில் தற்போது இனவாரியாகக் கலப்பின மக்களே வாழ்கின்றனர். இவர்கள் முக்கியமாக இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா வைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பழங்குடியினரும் உள்ளனர். பல்லின மக்கள் வாழ்ந்தாலும், இவர்கள் ஆங்கிலம் மற்றும் கயானிய கிரியோல் ஆகிய இரு மொழிகளை மட்டுமே பேசுகின்றனர்.
இந்தோ-கயானியர்கள் எனப்படும் கிழக்கிந்தியரே இங்கு முக்கிய இனமாகும். இவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட ஒப்பந்தக் கூலிகளின் மரபினர் ஆவர். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 43.5% (2002 கணக்கீடு) ஆகும். இவர்களுக்கு அடுத்ததாக 30.2% ஆப்பிரிக்க-கயானிகள். இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட அடிமைகளின் வம்சாவழியினராவார். 16.7% ஏனைய கலப்பினத்தவரும், 9.1% பழங்குடியினரும் ஆவார். இரண்டு பெரும் இனக்குழுக்களான இந்தோ-கயானியர்களுக்கும், ஆப்பிரிக்க-கயானியர்களுக்கும் இடையே இனக்கலவரங்கள் இடம்பெற்றுள்ளன..
இந்தோ-கயானியர்களில் பெரும்பான்மையானோர் போச்புரி-மொழி பேசும் பீகாரியரும், உத்தரப் பிரதேசக் குடியேறிகளும் ஆவார். ஏனையோர் தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய தமிழரும், தெலுங்கரும் ஆவர்.
கயானாவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் ஆகும். கல்வி, அரச அலுவலகங்கள், ஊடகங்கள், மற்றும் பொதுச் சேவைகளில் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பெருபாலானோர் கயானிய கிரியோல் மொழியைப் பேசுகின்றனர்.ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரியோல் மொழி ஆப்பிரிக்க, மற்றும் கிழக்கிந்திய மொழிக் கலப்பினால் ஆனது. அக்கவாயோ, வாய்-வாய், மக்கூசி ஆகிய கரிபியன் மொழிகளை சிறுபான்மை க்கள் சிலர் பேசுகின்றனர். அத்துடன் கலாசார, சமயக் காரணங்களுக்காக இந்திய மொழிகளும் பேசப்படுகின்றன.
2002 கணக்கெடுப்பின் படி, கயானாவில் 57% கிறித்தவர்கள், 28% இந்துக்கள், 7% முசுலிம்கள் வாழ்கின்றனர். 4% மக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். கிறித்தவர்களில் சீர்திருத்த, மற்றும் ரோமன் கத்தோலிக்க பிரிவினரும் உள்ளனர்


