திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 1½ வயது ஆண் குழந்தை கடத்தப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ரதி. இந்த தம்பதியருக்கு ஸ்ரீஹரீஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று தம்பதியர் குழந்தையுடன் குலசேகரபட்டனம் கோவிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது கமலாவதி என்ற பெண் 40 மதிக்கத்தக்க பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளனர். மதியம் 12 மணியளவில் முத்துராஜ் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். ரதி தனது குழந்தையை கமலாவதி என்ற அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு கழிப்பறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையுடன் அந்த பெண் மாயமாகிவிட்டார். அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கோவில் வளாகத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


