முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கிடந்தது. தற்போது இந்த சமய அறநிலையத்துறை சார்பில் மூன்று கோயிலுக்கும் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு ஒரு கால பூஜை மிகச்சிறப்பாக நடந்துவருகிறது. மூன்று கோயிலுக்கும் அறங்காவலர் நியமனம் செய்யப்பட்டனர். லெட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சுவாதியும், ராமவிநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியும், வீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு பிரதோஷமும் தற்போது பக்தர்கள் உதவியுடன் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த கோயிலை ஆய்வு செய்ய தூத்துக்குடி மண்டல துணை ஆணையர் நகை சரிபார்பு அலுவலர் ரெ.செ.வெங்கடேஷ், நகை சரிபார்ப்பு வல்லுநர் செந்தில் ஆகியோர் வருகை தந்தனர். அவர்கள் கோயிலில் உள்ள இருப்பு நகைகள் மற்றும் பொருள்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சரக ஆய்வர் நம்பி திருக்கோயில் பணியாளர்கள் விஸ்வநாத், லெட்சுமணன், அறங்காவலர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, வள்ளிநாதன், சுடலைமணி, கோயில் அர்ச்சகர் சேகர், சுந்தரம் உள்பட பலர் இருந்தனர்.
கோயிலில் விரைவில் திருப்பணி நடைபெற இருப்பதால் இந்து அறநிலையத்துறை மூலமாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். தூத்துக்குடி மண்டல துணை ஆணையர் நகை சரிபார்பு அலுவலர் ரெ.செ.வெங்கடேஷ், நகை சரிபார்ப்பு வல்லுநர் செந்தில் ஆகியோருக்கு எழுத்தாளரும் அறங்காவலருமான முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “நவீன தாமிரபரணி மகாத்மியம்”, “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.


