முன்னுரை
– முத்தாலங்குறிச்சி காமராசு
தி நெல்லை டைம்ஸ் பத்திரிக்கையில் நான் எழுதும் மூன்றாவது தொடர் இது. இந்த தொடரை எழுத உதவி புரிந்து வரும் தி நெல்லை டைம்ஸ் நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ மாலை ராஜா மற்றும் பொறுப்பாசிரியர், எனது நண்பர் தம்பான் அவர்களுக்கும் நன்றி. இதற்கு முன்னால் தி நெல்லை டைம்ஸ் பத்திரிக்கையில் வெளி வந்த “பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள்” இரண்டு பாகங்களாக தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியாவில் நூலாக வந்து நன்கு விற்பனையாகி கொண்டிருக்கிறது. இரண்டாவதாக நான் எழுதிய ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதை என்ற தொடர் நூலாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.
இதற்கிடையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் தாமிரபரணியை பற்றி சரியான நாவல் இதுவரை வெளி வரவில்லை என என்னிடமும், பல பொது மேடைகளிலும் குறைப்பட்டு கொள்வார்கள். அதை நான் அடிக்கடி அசைப்போட்டுக்கொண்டே இருப்பேன். சோ. தர்மன் அய்யாவின் குரலின் எதிரொலியாகவே தற்போது இந்த தொடர் உருவாகி உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட 55 வருடங்களாக தாமிரபரணி கரை பயணம் என் வாழ்வில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 65 நூல்கள் எழுதியுள்ளேன். அனைத்துமே தாமிரபரணி கரையை யட்டியே அமைந்திருக்கும்-. அங்குள்ள வரலாற்றை சொல்லியிருக்கும். இதனால் எனது மனதில் சந்தோசம் தான்.
ஆரம்ப காலத்தில் நான் நாவல்களை எழுதினாலும், தற்போது நாவல்கள் எழுதுவது குறைந்து விட்டது. ஆனாலும் சோ. தர்மன் அய்யா போன்ற எழுத்தாளர்கள் உற்சாகம் தரும் காரணத்தினால் தற்போது நாவலும் எழுத துவங்கியுள்ளேன். நான் எழுதிய சருகு, தீநுண்மி போன்ற இரு நாவல்களை சுவடு பதிப்பகம் மூலமாக வெளி கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். முத்துக்கிளி என்னும் நாவலை சான்றோர் மலர் மாத இதழில் தொடராக எழுதிக்கொண்டிருக்கிறேன். தற்போது எழுதியும் “கூவமான தாமிரபரணி” நாவலில் தாமிரபரணி நன்றாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கெட்டு, முழுவதும் சாக்கடையாகி, தன் உயிருக்கே போராடிக்கொண்டிருப்பதை தம்பதிகள் கண்முன்னே கண்பதையும், அவர்கள் நதியை காப்பாற்ற பாடுபடுவதையும், கற்பனை கலந்த கதையாக எழுதியுள்ளேன். படித்து கருத்தை தெரிவியுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் தி நெல்லை டைம்ஸ் வாசகர்களான உங்களுக்கு மிக்க நன்றி & அன்புடன் கலைநன்மணி முத்தாலங்குறிச்சி காமராசு, தமிழக அரசின் தமிழச்செம்மல் விருதாளர். தூத்துக்குடி மாவட்ட அரசு கலை இலக்கிய இசை சங்க உறுப்பினர்.
ஆசிரியரை பற்றி..
முத்தாலங்குறிச்சி காமராசு 1986 முதல் பல் வேறு பத்திரிக்கையில் துணுக்குகள் எழுதி வந்த எழுத்தாளர். படிப்படியாக முன்னேறி தற்போது 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைப்புகளை பல்வேறு ஊடகங்களில் எழுதியுள்ளார். 65 க்கு மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். தாமிரபரணியை பற்றி மிக அதிகமான நூலை எழுதியவர். மேற்குத் தொடர்ச்சி மலை பயணம், பொதிகை மலை, அத்ரி மலை, தோரணமலை, நம்பிமலை, குற்றாமல மலை உள்ப பல மலைப்பயணங்களை மேற்கொண்டு நூலாக்கியவர். ஜமீன்தார் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்தவர். அதில் 22 ஜமீன்தார்களை தொகுத்து நூலாக்கியுள்ளார். தாமிரபரணி மகா புஷ்கரத்தினை முன்னிட்டு நதிக்கரையில் முழுமையாகப் பயணித்து நவீன தாமிரபரணி மகாத்மியம் எனும் நூலை டிஜிட்டல் முறையில் நூலாக வெளியிட்டு உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ நூல் வெளியிட்டவர் என்ற பெருமையை தட்டிச்சென்றவர். தமிழர் கலையாம் களரியை மீட்டெடுக்க உலக களரி அடிமுறை கூட்டமைப்பு (அமெரிக்கா) உடன் இணைந்து களரி பற்றிய நூலை பல பாகங்களாக எழுதி வருபவர் . தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” எனும் நூலை உருவாக்கியவர். இந்தியாவில் முதல் முதலில் சைட் மியூசியம் ஆதிச்சநல்லூர் அமைந்ததை யட்டி “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” எனும் நூலை வெளியிட்டவர். ஆதிச்சநல்லூர்அகாழய்வு வெளி வரவும் அருங்காட்சியகம் அமையவும் மதுரை உயர்நீதி மன்ற கதவை தட்டி அதில் வெற்றியும் கண்டவர். இதற்காக ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற நூலை எழுதியுள்ளார். தற்போது தாமிரபரணியை சாக்கடை கலக்காத நதியாக மாற்ற உயர்நீதி மன்றத்தில் மூலம் முயற்சி செய்து வருகிறார். எட்டுத்திக்கும் மதயானை, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், அப்பாவின் மீசை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது, தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் கலை வளர்மணி விருது போன்ற விருதுகளை பெற்றவர். நியூஸ் 7 தொலைக்காட்சி சார்பில் தமிழ் ரத்னா சிறப்பு விருதை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரங்களால் பெற்றவர். கலைஞர் தொலைக்காட்சி சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதை, தூத்துக்குடி எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதாராதாகிருஷ்ணன், ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா கரங்களால் பெற்றவர். நெல்லை ரத்னா விருது, ராஜ கோகிலா விருது உள்பட பல விருதுகளை பெற்றவர்கள். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் தலைமையில் இயங்கும் தூத்துக்குடி மாவட்ட கலை இலக்கிய இசை சங்க உறுப்பினர் , முத்தாலங்குறிச்சியில் வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் அறங்காவலர் போன்ற பொறுப்புகளை வகித்து வருபவர்.
கூவமான தாமிரபரணி (முழு நீள நாவல்)
-முத்தாலங்குறிச்சி காமராசு
1. சங்கு மண்பத்தினை தேடி
அன்று சூரியன் காலையிலே சுட்டெரித்த வெயில் காளியை என்னமோ செய்தது. “சே. காலை 8 மணிக்கே வெயில் வந்து விட்டது”. மனதுக்குள் சலித்துக்கொண்டார்.
முன்னீர் பள்ளத்தில் தனது நண்பர் அழகேசனை பார்க்க வந்திருந்தார். அழகேசனும் காளியும் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் குழுவினர்.ஊர் ஊராக போய் நதியை சுத்தம் செய்து சந்தோசப்பட்டு கொள்வார்கள்.
புதுக்கிராமத்தில் அழகேசன் நிற்கிறார் என்று கேள்விப்பட்டார் காளி. தனது மொபைட்டில் முன்னீர் பள்ளம் ஊரை கடந்து சென்றார். முன்னீர் பள்ளத்தில் பாளையங்கால்வாயை, கடந்து அடுத்த ரயில்வே கேட்டை தொடர்ந்து அவர் மொபைட் சென்றது.
அங்கெல்லாம் வயல்வெளிகள் காணப்பட்டது. அனைத்துமே பாளையங்கால்வாய் நேரடி பாசன வயல்வெளிகள்.
செப்டம்பர் மாதம் பிசான சாகுபடி துவங்கியிருக்க வேண்டும். ஆனால் வானம் பொய்த்து விட்டது. வயல்வெளிகள் காய்ந்து கிடக்கிறது. பச்சை பசேலென்று வளர்ந்து கிடக்க வேண்டிய பயிர்கள் விளையும் வயல்வெளிகள் எல்லாம் காய்ந்து போய் சருகாக கிடக்கிறது.
எங்குப்பார்த்தாலும் பச்சைபசேலென்று தெரியும் வயல்வெளிகள் இப்படி கிடக்கிறதே என காளிக்கு மனது வலித்தது.
காளிக்கு வயது 57. சிறு வயது முதலே தாமிரபரணிகரை நேசித்து வாழ்ந்தவர். அவரது மனைவி செல்வி. அவருக்கும் தாமிரபரணி மேல் பாசம். இருவருக்கும் குழந்தை இல்லை. நதியைதான் தனது குழந்தையாக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள்.
காளியை பொறுத்தவரை, சிறு குழந்தையாக இருக்கும் போதே தாமிரபரணியை ரசித்து, ரசித்து வாழ்ந்தவர். குளிர்ந்த நதியில் குளித்து மகிழ்ந்தவர். ஆற்று மணலில் ஓடி ஒளிந்து விளையாடியவர்.
இன்று எதுவுமே இல்லை. ஆற்று மணல் இல்லை. குளிர்ந்த நதி இல்லை. சுவையான தாமிரபரணி இல்லை. வறுமையான நதியை பார்த்து தினமும் நொந்து நொந்து போய் இருக்கிறார். காலம் காலமாக மக்களுக்கு உயிர் தரும் நதி. எல்லோருக்கும் தாயானவள். அவள் நிலை பரிதாபமாக இருக்கிறது.
“என் தாயை எப்படி காப்பாற்றுவது. எல்லோரையும் காப்பாற்றும் என் தாயை எப்படி காப்பாற்றுவது”. காளியின் மனம் பிரதிபலித்தது.
அவள் செயலிழந்து விட்டாள். மூன்று போகம் விளைய வைத்தவள். முன்கார் சாகுபடியை முதலில் இழந்தாள், கார் சாகுபடியை தொடர்ந்து இழந்தாள். தற்போது பிசான சாகுபடி மட்டுமே கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வரை தந்தவள், தொடர்ந்து பிசான சாகுபடியையும் இழந்து விட்டாள்.
“அய்யோ. இது எங்கே போய் முடிய போகிறது. பச்சை பசேலேன்று இந்த இடமெல்லாம் காட்சியளிக்குமே. இன்று பட்டு போய் வறண்ட பாலைவனமாக அல்லவா காட்சியளிக்கிறது”.
கனத்த மனதுடன் புதுக்கிராமம் சென்று கொண்டிருந்தார் காளி. ஆனால் அவர் செல்லும் வழியிலே அழகேசன் வந்து விட்டார்.
இரண்டு பேரும் அங்கேயே சந்தித்தார்கள்.
“அழகேசன் அண்ணே இன்னைக்கு கொக்கிரகுளம் வரணுமுன்னு இருந்தேன்”.
“ஏண்டே அதான் நானே உன்னை தேடி வந்துட்டேனே”.
“இல்லைன்னே இன்னைக்கு சிந்துபூந்துறையில நம்ம நதியில கலக்கிற கழிவுகளை அகற்றணுமுன்னு சொன்னீயளே அதான்”. அழகேசன் அவர் முகத்தினை பார்த்து சொன்னான்.
“ம். நாமளும் தினமும் சாக்கடையை அகத்துதோம். உள்ளே மக்க போடுத சேலை துணிமணியை அகத்துதோம். அமலை செடிகளை அகத்துதோம். மரம் நடுதோம். ஆனால் சாக்கடை நம்ம நதியில கலக்கிறதை நம்மளால காப்பாத்த முடியலையே”.
காளி மிகவும் வேதனையாக பேசினார்.
“பராவாயில்லைன்னே. நிச்சயம் உங்களை மாரி நல்லவங்க முயற்சி வெற்றி பெறும்”. அழகேசன் அவரிடம் பரிவாக பேசினான்.
அமைதியாக டி வி எஸ் 50 யை ரோட்டை ஒட்டி ஓரமாக நிறுத்தினார் காளி.
“யய்யா. இந்த மாவட்டத்தில ஒவ்வொருத்தருக்கும் தாமிரபரணி தண்ணீ தேவை படுத்து. வீட்ல பைப்பை திறந்தா தாமிரபரணி தண்ணீ வரணுமுன்னு ஆசைபடுதாவ. ஆனால அந்த உணர்ச்சி ஒரு மக்களுக்கும் இல்லையே அதை நினைக்கும போது தான் வருத்தமா இருக்கு”. உச் கொட்டினார்.
“கவலை படாதீங்க . நிச்சயம் மக்களுக்கு நம்ம நதியை பத்தி புரிய வரும்”. அழகேசன் சொல்லுவதை அவர் முழுவதும் கேட்க முடியவில்லை. எனவே அவர் மனதை மாற்ற வேண்டும் என்று அழகேசன் பேசினான்.
“காளி அண்ணாச்சி வாங்க. அப்படியே நாம நதியை போய் பாத்துக்கிட்டு பேசுவோம்” என்று அழகேசன் அழைத்தார். இரண்டு பேரும் வயல் வரப்பு வழியாக நடந்தார்கள்.
அங்கே ஒரிடத்தில் கிரேந்தி பூ பயிரிடப்பட்டிருந்தது.
அதை பார்க்கும் போதும் காளிக்கு மனம் வலித்தது.
“ம். ஒரு காலத்தில பூ பயிரு எல்லாம் வானம் பாத்த பூமியிலதான் விதைப்பாவ. இன்னைக்கு பாரு. தாமிரபரணி ஆற்றங்கரையில பூ பயிர் விதைக்க ஆரம்பிச்சிட்டாவ. இதை எங்கே போய் சொல்லுறது”.
காளிக்கு மனது கஷ்டத்தோடு, வயது முதிர்ந்த காரணத்தினால் நடக்க முடியாத கஷ்டமும் சேர்ந்த கொண்டது. வரப்பை தாண்டி அவரால் தாண்டி செல்ல இயலவில்லை. அழகேசன் கை கொடுத்து அவரை கூட்டிச்சென்றான்.
ஒரிடத்தில் அழகான மண்டபம் . அந்த மண்டபம் செடி முளைத்து, உடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆங்காங்கே பராமரிப்பு இன்றி கிடந்த இடத்தில் பாம்பு போன்ற விஷத் சந்துகள் வேறு இடம் பிடித்து இருக்கும் போல. ஓட்டை ஓட்டையாக இருந்தது.
சற்று இளைப்பாறலாம் என அந்த மண்டபத்துக்கு கூட்டிச்சென்றான் அழகேசன்.
அதை பார்த்தவுடன் மேலும் மனம் சஞ்சலப்பட ஆரம்பித்தார் காளி.
“அழகேசா. இந்த இடத்தை பாத்தியா? இந்த இடம் எப்பேற்பட்ட இடம் தெரியுமாடே?”.
“தெரியலையே அண்ணாச்சி”.
“டேய் அந்த காலத்தில ஆத்துல வெள்ளம் வந்தா. அந்த வெள்ளத்தை அறிவிக்க இந்த மண்டபம் சங்கு மண்டபமா இருந்து இருக்கு”. காளி பேசியது அழகேசனுக்கு புரியவில்லை.
“புரியலையே அண்ணாச்சி”.
“ஏடேய். ஆத்து வெள்ளம் வந்து இந்த மண்டபம் மூழ்கும்போது, நம்ம முன்னோர்கள் உருவாக்கி வச்ச இந்த சங்கு மண்டபம் மூலமாக சங்கு சத்தம் கேட்கும். அதைவச்சி நம்ம மக்க மேடான பகுதிக்கு போய் தப்பிச்சிக்கிடுவாவ. அப்படி அமைக்கப்பட்ட மண்டபம் டே”. தமிழர்களின் பண்பாட்டை பெருமையோடு சொன்னார் காளி.
“என்ன அண்ணாச்சி சொல்திய”.
“பொறவு இந்த மண்டபம் சாதரண மண்டபமா?. ஊரை காப்பாத்துற மண்டபம். இன்னை க்கு இந்த மண்டபம் நிலமையை பாத்தியா. நம்ம வீட்டை தினமும் ஒட்டடை அடிச்சி வைச்சிருக்கோம். வருசத்துக்கு ஒருக்க வெள்ளை யடிச்சு எவ்வளவு பத்திரமா வச்சிருக்கோம். ஆனால் ஊரையே காப்பாத்துன இந்த மண்டபத்தை இப்படி அனாதையா விட்டுட்டோமே டே”.
ரொம்ப வருத்தப்பட்டார் காளி. அவர் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் விழுந்தது.
“அண்ணாச்சி வருத்தப்படாதீய. நீங்க கோட்டில கேஸ் போட்டிருக்கீயளா? நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும்”.
உண்மைத்தான். காளி தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்க கூடாது, இங்குள்ள மண்டபங்கள் , படித்துறைகளை காக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிச்சயம் நல்லதொரு தீர்ப்பை தரும். ஆனால் இந்த விசயத்துக் கெல்லாம் கோர்ட்டுக்கு போய்யா ஜெயிக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டாமா?. மக்கள் அல்லவா தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும். இந்த மண்டபகங்களை பேண வேண்டும்.
விரக்தியாக சிரித்தார் காளி.
“ஏடே அழகேச இதுக்கெல்லாம் கோர்ட்க்கா போணும். நமக்கு பசிச்சா நாம தானே சாப்பிடுதோம். எனக்கென்னன்னு கை கட்டிட்டு வேடிக்கையா பாக்கோம். நம்ம ஊரு. நம்ம மண்டபம். நம்ம தானே இதை சீர் செய்யணும். அந்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லையே. அதை நினைச்சு தான் வருத்தப்படுதேன்”. அவருடைய வேதனை அதிகமாகி விட்டது.
“சரித்தான் அண்ணாச்சி. அதுக்காக நீங்க மனசு வருத்தப்பட்டு என்ன செய்ய. எமோசன் ஆகாதீங்க. ஏற்கனவே இதய நோயாளி நீங்க. உங்க உடலை கொஞ்சம் பாதுகாப்பா வைச்சிருங்க”. ஆறுதல் சொன்னான் அழகேசன்.
அமைதியாக அந்த மண்டபத்தினை பார்த்தார். ஒரு பக்கம் கும்பிட நிலையில் ஒரு உருவம். பாவம் இவர் சித்தரா? அல்லது இந்த மண்டபத்தினை கட்டினவரா தெரியலை. மேலே மீன் சின்னம். பாவம் எந்த பாண்டிய மன்னனோ. மண்டபத்தினை கட்டி வைத்து விட்டு அவன் போய் சேர்ந்து விட்டான். அழகான இடம் . தரையில் பல்லங்குழி விளையாடும் வகையில் குழி. இது பல்லாங்குழியா, இல்லை முலிகை அரைக்க பயன்படுத்தும் இடமா தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் நமது முன்னோர்கள் நல்ல முறையில் பயன்படுத்தியிருக் கிறார்கள்.
அழகேசன் உணர்ந்தான். இன்னும் கொஞ்ச நேரம் அண்ணாச்சியை இந்த இடத்தில் நிறுத்தினால் அவ்வளவு தான் மனம் நொந்து போய் விடுவார் . ஏற்கனவே இதய நோய்காரர். எனவே இவரை இங்கிருந்து கூட்டிச் செல்லவேண்டும்.
“அண்ணாச்சி வாங்க நாம கொஞ்சம் தாமிரபரணியை பார்ப்போம்” என கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.
இவரும் நடந்து தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கினர்.
எதிர்புறம் சங்காணியில் இருந்து வந்தவர்கள் குளித்துக்கொண்டிருக்க, இவர் கரை வழியாக இறங்கி நடு ஆற்றுக்குள் இறங்கி நின்றார்.
மேற்கே பார்த்தார். பொதிகை மலையில் இருந்து தாமிரபரணி தோன்றி வரும் அந்த இடத்தினை பார்க்கிறார்.
“தாயே வற்றாத ஜீவநதியே. நீ யாருக்காக ஓடுகிறாயோ. அவர்களை உனக்கு சாவு மணி அடிக்கிறார் களே. அவர்களுக்கு ஒரு நல்ல புத்தியை கொடு” என்று கை இரண்டையும் மேலே தூக்கி கும்பிட்டார்.
அப்போது அவர் பக்கெட்டில் செல்போன் சிணுங்கியது.
அதை எடுத்தார். பக்கத்து வீட்டு அக்கா பேசினார்.
“சொல்லுக்கா”.
“ஏலேய் காளி எங்கல இருக்க”
“யக்கா முன்னீர் பள்ளத்தில இருக்கேன்”.
“ஏலேய் செல்வி பரக்க பரக்க முழிக்கா. மூஞ்சி கீஞ்சி எல்லாம் வேத்து விறுவிறுத்து போய் இருக்கா. பயமா இருக்கு. உடனே ஓடி வாலே” என்றாள்.
காளி அதிர்ந்து விட்டார்.
“யக்கோ கொஞ்சம் பாத்துக்க. இப்ப ஓடி வந்திருதேன்”.
சொல்லி விட்டு, தாமிரபரணியை விட்டு வெளியே வந்து, அழகேசனிடம் “ஏடேய் உங்க அக்காளுக்கு கொஞ்சம் முடியலையாம் நா வாரேன்” என சொல்லிவிட்டு, தனது மொபைட்டில் கிளம்பினார்.
படபடப்புடன் கிளம்பிய காளியால் மெபைட்டை ஓட்ட முடியாது என்பதால், அழகேசன், “அண்ணாச்சி கொஞ்சம் விலகுங்க. நான் ஓட்டுதேன். நீங்க பின்னால ஏறுங்க” என கூறிவிட்டு காளியோட மொபைட்டில் கிளம்பினான் அழகேசன்.
(நதி கூவமாவதை தடுக்க ஓடுவோம்)


