தூத்துக்குடியில் அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சார்பில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு 168 செயற்கை அவயங்களை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சிவகாசி சார்பில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு 168 செயற்கை அவயங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று வழங்கி தெரிவித்ததாவது: அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் என்பது 15 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை புரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மாற்றுத்திறனாளி சசோதர, சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற வகையில் அவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணாமல் உண்மையாக பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்று இந்த முகாமை நடத்தியிருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் எந்த இடத்திற்கும் போய் வருவதற்கு வசதி இல்லாத நிலையை நாமே உருவாக்குகிறோம். தடையில்லா சமுதாயத்தினை நாம் உருவாக்கினால் பிரச்சனை இல்லை. மாற்றுத்திறனாளிகள் வேலை செய்வதற்கு குறிப்பாக தங்களுடைய வேலைகளை தானே செய்வதற்கு இந்த உபகரணங்களை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
இந்த சங்கத்த்pற்கு 8 ஆம்புலன்ஸ்கள், மொபைல் வேன்கள் இருப்பதாக சொன்னார்கள். நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்ட சிகிச்சைகள் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி முகாம்களை நடத்த வேண்டும். அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும் மக்களுக்கு தேவைகள் இருக்கத்தான் செய்யும். உங்களைப்போன்றவர்கள் இதுபோன்ற முகாம்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் தான் மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறனாளிகள் என்று முதன்முதலாக அழைத்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை அரவணைத்துக்கொண்டவர். முதன்முதலாக அவர்களுக்கு வாரியம் அமைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை உருவாக்கி நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொண்டார். முத்தமிழறிஞர் கலைஞர் எந்தவொரு மாற்றுத்திறனாளியும் சமூகத்தில் தலைநிமிர்ந்து எல்லோரைப்போல கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அத்தனையும் கிடைக்க பாடுபட்டார்களோ அதைப்போல் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: ஜெய்ப்புரில் இருந்து இந்த உபகரணங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். இவற்றை அணிவதற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1000த்தை ரூ.1500 ஆக உயர்த்திவிட்டார்கள். ரூ.1500 வாங்கியவர்களுக்கு ரூ.2000ஆக உயர்த்திவிட்டார்கள். நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவருக்கும் மாதம் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
வீட்டில் ஒருத்தர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வாங்கினாலும் அக்குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு நீங்கள் ஆதார், அடையாள அட்டை போன்றவற்றை பெற்று பயனடையலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, அகில இந்திய மார்வாடி யுவா சங்கம் சிவகாசி தலைவர் விஜய் சர்மா, செயலர் சரவண் ஜெயின், இணைச் செயலர் கௌஷல் லக்கோகா, பொருளாளர் வருண் தர்கார்க், துணைத்தலைவர் சீதாராம் லெரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், பேச்சு பயிற்சியாளர் ராஜேஷ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


