ராசுக்குட்டிககு நேரம் போகவில்லை. ஆச்சி கிட்டே எப்படியாவது கதை கேட்க வேணும். எனவே இன்னைக்கு ஏதாவது கதையை ஆச்சி சொல்லியே தீரவேண்டும் என ஆவலுடன் காத்திருந்தான்.
ஆச்சியிடம் சென்றான், “ஏ ஆச்சி சுடலை கதையை சொன்ன, அவுக மனைவி மா இசக்கி என்ன ஆனாவன்னு சொல்லவே இல்லையே?”.
“உண்மைதானே. புருசன் வந்த இடத்துக்கு மனைவி வர வேண்டாமா?” சின்ன பயலா இருந்தாலும் ராசுக்குட்டி நன்றாக கதை கேட்டான். ஆச்சி சொன்ன கதைகளையெல்லாம் மனதுக்குள் நன்றாக சேகரித்து வைத்துக்கொண்டான்.
ஆச்சி இன்றைக்கு மிகவும் பிசியாக இருந்தாள். “ஏலே இன்னைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு . கொஞ்சம் பொறேன்” என்றாள்.
“ஆச்சி நீ ஏமாத்த பாக்க எனக்கு உடனே கதை சொல்லு” பிடிவாதமாக இருந்தான்.
“இவனோட பெரிய எலவா போச்சி. ஏலே பொறு ஆச்சி ஆட்டுக்கு புல்லு வச்சிட்டு வந்திருதேன்”.
ஆச்சி சொல்லிவிட்டு, அருகில் தொழுவத்திற்குள் சென்று புல்லை அள்ளிக்கொண்டு மரத்துக்கு அடியில் கட்டப்பட்டிருந்த ஆட்டு குட்டியிடம் சென்றாள்.
“வந்திறனும் ஆமாம்”. என உறுதியாக ஆச்சிக்கு ஆணையிட்டான் ராசுக்குட்டி.
அவனுக்கு இன்னைக்கு ஏதாவது ஒரு கதையை ஆச்சி சொல்ல மாட்டாளான்னு தோணுச்சி.
தினமும் கதை கதைன்னு ஆச்சியை நச்சரிச்சு நிறைய கதை கேட்டுட்டான். இப்போ அவனுக்கு புதுசு புதுசா கதை கேக்க தேணுது.
ஆத்தங்கரையில் எத்தனையோ கதை கொட்டிக்கிடக்கு. ஆனாலும் எத்தனை தடவை த்£ன் சொல்லுவா ஆச்சி.
அவளும் மனுசி தானே. எத்தனை வேலை அவளுக்கு இருக்கு. இவங்கிட்ட வாப்பாறிக்கிட்டா இருப்பா.
ஆனாலும் ராசுக்குட்டி விடவில்லை.
அன்று இரவு வந்தது.
பௌர்ணமி நிலவு. கொஞ்சம் தூறல் அடித்தது.
தாமிரபரணி தண்ணீர் குளிச்சி, குற்றால சாரல் வந்து விட்டது என உணர்த்தியது.
ஆச்சி சாப்பிட்டுவிட்டு பேரனை பார்க்க மச்சிக்கு வந்தாள்.
“என்னலே சோவாறி பயலை எப்ப பாத்தாலும் கதை கதைன்னு அலையுத?”
மூஞ்சியை உம் மென வைத்திருந்தான் ராசுக்குட்டி.
“சொல்லு ஆச்சி”. ராசுக்குட்டி கேட்டான்.
“என்ன சொல்லணும்”. ஆச்சி அவனை சோதித்தாள்.
“கதைசொல்லு ஆச்சி”. முறைத்தான் ராசுக்குட்டி.
சிரித்தாள் ஆச்சி, “உனக்கு என்ன கதை வேணும்”.
“அதான் சுடலை கதை சொன்னீயே. அப்படியே அந்த மா இசக்கி என்ன ஆனாவுன்னு சொல்லலையே”.
“ஓ. அதை கேக்கீறியா?”.
“ஆமாம். புலையன் மா இசக்கியை என்ன பண்ணுனான். அவ வயித்தில வளந்துச்சே குழந்தை அதை என்ன பண்ணுனான்.”
“சொல்லுதேன், இரு” என பாயை விரித்தாள். அதன் பிறகு கலை நீட்டி அமர்ந்தாள். ராசுக்குட்டி ஆச்சியின் மடியில் படுத்தான்.
ஆச்சி முகத்தினை பார்த்தான். பௌர்ணமி நிலவில் அவளின் கறுப்பு வண்ண கலர் பிரகாசமாக தெரிந்தது. அவள் மிகவும் அழகாய் தெரிந்தாள்.
கதை சொல்ல ஆரம்பித்தாள் ஆச்சி.
“சுடலை சாமி விரும்பி கரு கொடுத்த மாஇசக்கியோ பெரும் பாவம். அப்பன் பொல்லதவன் அவன் கையிலேயும் மாட்டக்கூடாது. அதே நேரம் தனக்கு கரு கொடுத்தவன் தான் கண்கண்ட தெய்வம். அவங்கூட போய் சேந்திரணுமுன்னு முடிவு செஞ்சா. மா இசக்கியும் தெய்வ பிறவிதானே. ஆனாலும் பூலகத்துல அந்த தெய்வங்கள் அவளை தெய்வ பிறவியான நினைக்கல . ஆனாலும் அவளுக்கு சுடலை ஊர்காட்டுல இருக்கிறது தெரிஞ்சு போச்சு . அதனால அவுக தனது கைக்குழந்தையைக் கையில தூக்கிக் கிட்டு நடையாய் நடந்து பாவநாசம் வந்தாவ. பொறவு அங்கிருந்து தாமிரபரணி நதிக்கரையை நோக்கி நடந்தாவ. அந்த சமயத்தில மாஇசக்கியை துடி கொண்ட துஷ்ட தேவதை எல்லாரும் சேர்ந்து ஊர்க்காடு போவ விடாம வழிமறிச்சாவ”.
“ஏன் ஆச்சி இவுக சுடலை கிட்டே போய் சேர்ந்தா அவுகளுக்கு என்னவாம்”. ராசுக்குட்டி கேட்டான்.
“அவுகளுக்கு என்னவோ அது புடிக்கலை”. ஆச்சி சொல்லிவிட்டு கதையை தொடர்ந்தாள்.
“உன்னை ஆத்தங்கரை வழியா நடக்க விடமாட்டோமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு பேசினாவ துஷ்ட தேவதைகள். மா இசக்கிக்கு என்னசெய்யணுமுன்னே தெரியலை. துஷ்ட தேவதையை பார்த்து மனவருத்தம் பட்டு போயிட்டாவ. என்ன செய்ய தனக்கு கரு கொடுத்த காதலனைப் பாக்க முடியாம போய்விடுமோன்னு கண் கலங்கி போயிட்டாடவ.
இனிமே நம்ம மனையாளனை பாக்கணுமுன்னா சும்மா பாக்க முடியாது தெய்வத் துணை வேணுமுன்னு முடிவு பண்ணிட்டாவ பாவநாசத்தில இருக்கிற பாபநாசர் உலகாம்பிகையை நோக்கி அழுது புலம்பினாவ. என்னை மனையாளன் கிட்ட சேத்து வையுங்கன்னு புலம்பினாவ”.
“அச்சச்சோ ஒரு தெய்வப்பிறவிக்கே இந்த நிலையா?” ராசுக்குட்டி உச் கொட்டினான். ஆச்சி தொடர்ந்தார்.
“உலகம்மை மா இசக்கியை கூப்பிட்டாவ, “மாஇசக்கியே. எனது மகன் சுடலையோ தெய்வப்பிறவி. நீ மானுட ஜென்மம். உன்னால் துஷ்ட தேவதைகளை எதிர்க்க இயலாது. ஆனால் சுடலையிடம் செல்ல நாங்க உனக்கு ஒரு வழி சொல்லுதோம். இன்னும் கொஞ்ச நாளு கழிச்சு நல்ல முகூர்த்த நாள் வரும். அந்த நேரத்தில எங்க சந்நதிக்குக் கீழ்த்திசையில் இருந்து ஒரு மணப்பெண் திருமணம் செய்ய வருவா. நீ இங்கன இருந்து அவ உடம்புல புகுந்து ஊர்க்காடு போய்ச் சேர். அதுக்கு பொறவு அங்க இருக்க என் மவன் சுடலை கிட்ட முறையிட்டு ஆவனச் செய்ய சொல்லு” ன்னு சொல்லி முடிச்சாவ.
“சரி”ன்னு மா இசக்கி அந்த இடத்தில காத்து கிடந்தா. அந்த நாளும் வந்துச்சி. காருக்குறிச்சி கிராமத்தில மகாலிங்க வேளார் மவ கல்யாணிக்கு திருமண நாள் குறிச்சாவ. ஒரு முகூர்த்த நாளுல மணம் முடிக்க மாட்டு வண்டியில பாவநாசம் கோவிலுக்கு வந்தாவ. அங்க வைச்சி அவ திருமணம் நல்லா போட்சா நடந்துச்சு. கணவனும் மனைவியும் வில்லு வண்டியில காருக்குறிச்சி நோக்கிக் கிளம்பினாவ. இதுதான் சரியானத் தருணம் என்று காத்து இருந்த மாஇசக்கி ஓடிப்போய் அந்தப் பெண் உடலில் புகுந்துட்டா. அதுவரைக்கும் சரியாக இருந்த அந்தப் பெண் எல்லாரையும் வெறிச்சுப் பார்த்தா. அதுக்கப்புறம் ஆட்டம் பாட்டம் போட ஆரம்பிச்சிட்டா. ஆனா இதை யாரும் கவனிக்கல. யாருக்கும் சந்தேசமும் வரலை”.
ஆச்சி பெருமூச்சி விட்டு தொடர்ந்தாள்.
“வில்லுவண்டி அம்பாசமுத்திரம் பாலம் கிட்ட வந்துச்சு. தீடீன்னு அந்த மணப்பொண்ணு தாமிரபரணி ஆற்றுக்குள்ள தலைகீழா குதிச்சா. எல்லாரும் அதிர்ச்சி அடைஞ்சி போயிட்டாவ. விழுந்தவளை காணவே இல்லை. எல்லோரும் ஓடிப்போய் ஆத்துக்குள்ள குதிச்சாவ. அங்கங்க எங்க கிடக்கான்னு தேடிப்பாத்தாவ. ஆனா அவ கிடைக்கலை. சரி. அவ மண்டையை போட்டுட்டா. இனிமே அவ்வளவுத்தான் அவ உடலாவது கிடைக்கா பாருன்னு தேடினாவ. கிடைக்கவில்லை. கிழக்க வரைக்கும் தேடிப்பாத்தவ . கிடைக்கலை. தண்ணீக்குள்ள முங்கி தேடிப்பாத்தாவ. எங்கேயும் கிடைக்கலை”.
ஆச்சி பெரும்மூச்சி விட்டாள். ராசுக்குட்டி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான். “அய்யோ பாவம் புதுப்பொண்ணு என்ன ஆச்சோ தெரியலையே?” உச் கொட்டினான்.
ஆச்சி கதையை தொடர்ந்தாள்.
“உடனே எல்லாரும் அழுது புலம்பிகிட்டு பாவநாசம் நோக்கி ஓடினாவ. உலகம்மைகிட்ட போயி அழுது புரண்டாவ. உன் சனனதியில கல்யாணம் முடிச்சி வைச்சோம் அவளை காணலையேன்னு துடிச்சாவ. அவ கல்யாண முடிஞ்சு போட்ட பூ மாலை காயலையே . அதுக்குள்ள இப்படி ஆயிட்டேன்னு புலம்புனாவ. அப்ப அங்க இருந்த பூசாரி ஒருத்தரு ஆதாளி வந்து ஆடினாரு. ஏடேய் நீங்க போய் ஊர்க்காட்டு ஆத்துல தேடி பாருங்களேன்னு சொல்லி அணிப்பி வச்சாரு.
சாதி சனங்க எல்லாரும் கால்நடையா ஊர்காடு ஓடிப்போனாவ. அங்க சுடலை கோயிலில பூடம்போட்டு கூம்பிட்டுகிட்டு இருந்த இடத்தில அந்த பெண் ஆத்துக்குள்ள மயங்கி கிடந்தா. அவ யாருமில்லை ஆத்துக்குள்ள விழுந்த புதுப்பெண்ணுத்தான்.
எல்லோரும் ஓடிப்போய் மவளே கல்யாணி எப்படிடே இங்க வந்தேன்னு கேட்டாவ.
அவ அப்பத்தான் முழிச்சு பாத்தா, அவ தலையில வைத்த பூ வாடலை. நெற்றியில வைச்ச குங்குமம் அழியலை. பட்டுச் சேலை கசங்கல.
நான் இங்க எப்படி வந்தேன்னு பரபரக்க முழிச்சா”.
“அப்பாட ஒரு மட்டுக்கும் அந்த பெண் கிடைச்சிட்டா” மகிழ்ச்சி அடைந்தான் ராசுக்குட்டி.
தொடர்ந்தாள் ஆச்சி.
“அவ உடம்புல இருந்த மா இசக்கி அங்க இருந்து வெளியே வந்தா. பொறவு அங்கேயே நின்னா. ஊர் மக்க சுடலையை கும்பிட வந்தாவ. அவுக கிட்ட எனக்கும் என் பிள்ளைக்கும் நிலையம் வேணுமுன்னு கேட்டாவ”.
உடனே மக்களும் அவுகளுக்கு நிலையம் போட்டு கொடுத்துட்டாவ. இப்போ அங்க மாஇசக்கிக்கும் நிலயம் இருக்கு”.
ஆச்சி மூச்சி விட்டா. ஒரு வழியாக கதையை சொல்லி முடித்தாள்.
கதையை கேட்டவுடன் அப்படியே அமைதியாகி விட்டான் ராசுக்குட்டி. அவனுக்கு இலேசகா தூக்கமும் வந்தது.
“ஏடே உனக்கு நிறையா கதை சொல்லிட்டேன். போதும். உங்க டீச்சரை பாத்தேன்டே. அவுக பரிட்சை வருது. உங்க பேரன் ஒழுங்கா படிக்க மாட்டுக்கான். இங்க வந்து மத்த பிள்ளைக கிட்டே தினமும் கதை கதையா சொல்லிக்கிட்டு இருக்கான். கேட்டா நீங்கத்தான் கதை சொல்லுதீயேன்னு சொன்னான்”.
“அய்யையோ நான் அப்படி சொல்லைலை”. ராசுக்குட்டி அவரசமாக மறுத்தான்.
“சொன்னீயோ சொல்லலையோ எனக்கு தெரியாது. இனிமே கொஞ்ச நாளைக்கு உனக்கு கதை கிடையாது”.
“எதுக்கு ஆச்சி” செல்லமாக சிணுங்கினான் ராசுக்குட்டி.
“பரிட்சைக்கு நீ படி. படிச்சு முடிச்ச பொறவு பாத்துக்குவோம்”. என்றாள்.
“ஆச்சு நான் நல்லா படிப்பேன். நீ கதை சொல்லுறதை நிறுத்திடாதே”.
“ம். கூம் படிப்பு தான் முக்கியம். நீ நல்லா படி. மத்த கதையை பொறவு பாப்போம்”. என்று ஆச்சி சொல்லி விட்டு படுத்தாள்.
சிறிது நேரத்தில் தூங்கி விட்டாள்.
எப்படியும் ஆச்சி மற்றொரு நேரத்தில் கதை சொல்லாமல் போய் விடுவாளா? என ஏக்கத்துடன் ராசுக்குட்டி தூங்க ஆரம்பித்தான்.
சரி தான். இன்னொரு சமயம். இன்னொரு காலத்தில் ஆச்சி தொடர்ந்து கதை சொல்லுவாள். அது வரை நாமும் பொறுத்து இருப்போம்.
(முற்றும்)
அடுத்த தொடர் பற்றிய விளம்பரம் சேர்த்துள்ளேன்.
வருகிற 17.09.2023 முதல்
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதும்
கூவமான தாமிரபரணி
(தாமிரபரணி வரலாற்றில் முதல் தொடர் கதை)
வற்றாத ஜீவநதி தாமிரபரணியில் சாக்கடை கலப்பதை தம்பதியினர் தடுக்க போராடும் சுராஸ்மான கதை


