முன்னீர் பள்ளம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த ஊரில் பல அபூர்வ தகவல்கள் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
புதுக்கிராமம் அருகில் உள்ள சங்கு மண்டபத்தினை பார்த்து விட்டு அங்கிருந்து ஆற்றுக்குள் இறங்கினோம். எதிர்கரையில் சங்காணி கிராமம் உள்ளது. ஒரு காலத்தில் தாமிரபரணி ஆறு சங்காணியின் அருகில் ஓடியுள்ளது. தற்போது அந்த நதியின் போக்கு மாறியுள்ளது. நவக்கைலாயம் வரலாற்றை பேசும் போது நான்காவது கைலாயமான சங்காணி அருகில் தாமிரபரணி ஆறு ஓடியதாக கூறப்பட்டிருக்கும். தற்போது இந்த இடம் தாமிரபரணி ஆற்றில் இருந்து 2 கிலோ மீட்டர் தள்ளியுள்ளது.
முன்னீர் பள்ளம் வரலாற்றை கேட்பதற்காக முன்னீர் பள்ளத்தில் வசித்து வரும் பெரியவர் ஓய்வு பெற்ற வட்டார சுகாதார மேற்பார் வையாளர் பே. சங்கரபாண்டியன் அய்யாவை சந்தித்தோம். அவரை சந்திக்க எங்களுக்கு காக்கா கூட்டம் அமைப்பின் இயக்குனர் கபில் சுப்பிரமணியன் உதவினார்.
கபில் தம்பியும் ஊர் வரலாறு மீது ஆர்வம் கொண்டவர். எனது மகன் அபிஷ்விக்னேஷ் உடன் பல தளத்தில் இயங்கியவர். அவர் உதவியுடன் பெரியவர் சங்கர பாண்டியனை சந்தித்தோம். அவர் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் மாநில தமிழ் சங்கத்தில் கம்பராமயணம் குறித்து சொற் பொழிவு ஆற்றக்கூடியவர். கம்பராமயணத்தினை பற்றி அக்குவேறு ஆணி வேறாக பேசக்கூடியவர். சிறந்த தமிழ் அறிஞர். எனவே தான் கம்பராமயணத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை எங்கெல்லாம் போற்றப்பட்டுள்ளது என்பதை அவர் எங்களுக்கு விலாவாரியாக எடுத்துரைத்தார்.
அவர் கூறும் போது, தாமிரபரணிக்கும் இராமயணத் திற்க்குமான ஒத்த விசயம் ஒன்றை கூறினார். அனுமனிடம் இராமர், “பொருநை ஆற்றின் மீது பொதிகை மலையில் செல்லும் போது கவனமாக செல். அங்கே அகத்தியர் தவமிருக்கிறார். அங்குள்ள முதலை கூட்டமும், நதியும் அழகும் உன்னை மெய்மறக்க செய்து விடும்” என்று கூறுவார். அந்த கம்பராம பாடலை அவர் எங்களிடம் நினைவு படுத்தினார்.
அதோடு மட்டுமல்லாமல் தோணித்துறைகளை பற்றி நிறைய பேசினார். பாளையங்கோட்டை அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் தோணித்துறை என்றதொரு ஊர் உள்ளது என்றும் கூறினார். அந்த காலத்தில் நெல்லை நகரை முன்னீர் பள்ளத்தோடு இணைப்பது தோணித்துறைத்தான். ஏன் என்றால் கருப்பந்துறை ஆற்றுப்பாலம் கட்டப்பட வில்லை என்றும் அவர் எங்களிடம் தெரிவித்தார்.
இங்கிருந்து தோணித்துறை மூலமாக திருவண்ணாங்கோயில் எனும் சங்காணிக்கு சென்று அங்கிருந்து தான் டவுண் மற்றும் நெல்லை சந்திப்புக்கு செல்ல வேண்டும் என்றார்.
அவர் சங்கு மண்டபத்தினை பற்றி மேலும் பல தகவல்களை கூறினார். இது அறுங்கோண வடிவம் கொண்டது. இங்கு சைவர்,வைணவர், சமணர்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் அமர்ந்து தியானம் செய்துள்ளார்கள். வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற சங்கு ஒலிக்கும் மண்டபமாகவும் இந்த மண்டபம் இருந்துள்ளது.
தற்போது இதன் பயன்பாடு மாறி விட்டது. கர்மகாரியம் செய்ய பயன்படுத்தும் இடமாக மாறி விட்டது. என்றும் கூறினார்.
புதுகிராமம் என்பது முன்னீர் பள்ளத்தின் ஒரு பகுதியாகும். இந்த இடம் வெள்ளத்தினால் மற்ற பகுதியில் அழிவு ஏற்படும் போது புதிதாக தோன்றிய கிராமமாக கருதப்பட்டுள்ளது.
இந்த கிராமம் வெள்ளம் தாக்காமல் இருக்க சற்று உயரமான இடத்தில் காணப்படுகிறது என்றும் அவர் கூறினார். புதுக்கிராமம் என்பது தான் முன்னீர் பள்ளத்தில் முதல் ஊர். மேலும் இந்த ஊர் அழிந்து அதன் பின் தற்போது உள்ள ஊர் தோன்றியிருக்கிறது என மற்றுமொரு கருத்தையும் அவர் முன் வைத்தார். அவர் கூறியவற்றை யெல்லாம் நன்கு அசைப் போட்டோம். தொடர்ந்து எங்கள் பயணம் சங்கு மண்டபத்தினை தாண்டி துவங்கியது.
தற்போது நாம் தாமிரபரணி ஆற்று படுகையில் நின்று கொண்டிருக்கிறோம். மிகவும் அழமான பகுதியில் இரண்டு புறமும் உயரமாக உள்ள இடத்தில் நிற்கிறோம்.
மக்கள் இவ்விடத்தில் குளிக் கிறார்கள். ஆனால் இறங்கி செல்லும் இடம் ஒற்றையடி தடம் போலவே இருந்தது. இவ்விடத்தில் தான் தோணி ஓடியது என்கிறார்கள். எதிர் கரையில் குளிக்கும் துறை ஒன்று இருந்தது. சங்காணியில் இருந்து வந்த மக்கள் குளிக்கும் இடம் இதுதான் என்றார்கள். இவ்விடத்திலேயே தோணித்துறை இருந்தது என்றும் எனது உடன் வந்த அழகேசன் கூறினார்.
தொடர்ந்து நாங்கள் கரையில் ஏறி சாலைக்கு வந்தோம். அதன் பின் காரில் ஏறி மேல முன்னீர் பள்ளத்திற்கு சென்றோம். ஒற்றையடி தடம் தான். மேல மூன்னீர் பள்ளம், கீழ முன்னீர்பள்ளம் இரண்டு இடத்தில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்ல ஒரு சாலை இருந்தது. அங்கு அனைத்து மக்களுக்கும் இடுகாடும், சுடுகாடும் இருந்தது. அங்கே தாமிரபரணி ஆற்றங்கரைக்கு செல்லவும் சாலை இருந்தது. அங்கு சுடலை மாடசுவாமிகோயிலும் உண்டு. நாங்கள் அங்கே செல்லாமல் மேல முன்னீர் பள்ளம் வந்தோம். அங்கு பாளையங்கால்வாய் கரையை அடைந்தோம். அங்கு இரண்டு கோயில்கள் இருந்தது.
கரையில் கரையடி ஸ்ரீநல்லமாடசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நல்ல பராமரிப்பு செய்து இரும்பு கேட் போடப்பட்டு பாரமரிக்கப்பட்டு வருகிறது. எதிரே கால்வாய் கரையில் வாசிக்க மீண்ட அய்யனார் கோயில் உள்ளது.
இது ஓரு சாஸ்தா கோயில் இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பெரும்பாலுமே இந்த கோயிலுக்கு மதுரையில் இருந்து அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த கோயிலை குறித்து புத்தனேரி செல்லப்பா அவர்கள் கூறும் போது, “நான் பல வருடங்களாக இந்த கோயிலுக்கு செல்கிறேன். இந்த கோயிலில் வாசுகி மீட்ட அய்யனார் என்று எழுதி வைத்து இருப்பார்கள். எனக்கு இது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. வாசுகி எப்படி அய்யனாரை மீட்டு இருப்பார். எங்கேயோ இடிக்கிறதே என இந்த கோயிலுக்கு வந்த நேரமெல்லாம் நினைப்பேன்.
வாசுகி மீட்ட அய்யனார் என்றால் பொருள் சரியாக இல்லையே. என நான் ஒவ்வொரு இடத்திலும் இந்த கோயில் பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா? என தேடிப்பார்த்தேன். அப்போது தான் எனக்கு ஒரு தகவல் கல்வெட்டு ஒன்று மூலம் கிடைத்தது.
ஒரு கல்லில் வாசிக்க மீண்ட அய்யனார் என்ற பெயர் இருந்தது. இந்த இடத்தில் ஏதோ அர்த்தம் உள்ளது என கண்டுபிடித்தேன். அதை கோயில் நிர்வாகஸ்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தேன். முடிவு தற்போது வாசிக்க மீண்ட அய்யனார் என்று இந்த கோயில் பெயரை எழுதி வைத்துள்ளார்கள்.
ஆனாலும் பூர்ண புஷ்கலா சமேத வாசுகி மீண்ட அய்யனார் என்று இந்த சாஸ்தா பெயரை கற்பகிரகத்தில் எழுதி வைத்துள்ளார்கள்.
இந்த கோயிலுக்கு நல்லதொரு வரலாறு உள்ளது. ஆனால் இதுகுறித்து தற்சயம் யாரிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை. நிச்சயம் தேடிப்பார்ப்போம்கோயில் வரலாறு கிடைக்கும்.
இந்த கோயிலில் தமிழ் மாத பிறப்பு அன்று விசேஷம் தான். இந்த நேரத்தில் இங்கு கணபதி ஹோமம், சங்கு அபிசேகம், திருவாசக முற்றோறுதல் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது. அன்று அன்னதானமும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஆகஸ்ட 18 ந்தேதி வருஷாபிசேகமும் நடைபெறுகிறது.
கோயில் பின் புறம் உயரமாக பட்டமரம் ஒன்று உள்ளது. இந்தமரத்தில் அடிவாரத்தில் நாக உருவங்கள் வழிபாட்டில் இருக்கிறது.
தொடர்ந்து இந்த கோயிலை வணங்கி விட்டு, அங்கிருந்து மற்றொரு கோயிலுக்கு கிளம்பினோம்.
(நதி வற்றாமல் ஓடும்)


