தூத்துக்குடியில் ரூ.87 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால்கள் அமைப்பது என – மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிமுக கொறடா மந்திரமூர்த்தி பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி பெயர்களை ஒழிப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுத்ததும் பேரில் மாவட்டம் முழுவதும் ஜாதியினர் பெயர்களை அழித்து வருகிறார்கள்.
இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சி முழுவதும் உள்ள தெருக்களில் ஜாதி பெயர்களை எடுத்துவிட்டு புதிதாக பெயர் சூட்ட வேண்டும். தூத்துக்குடியில் மாநகராட்சி மூலம் மது போதை மறுவாழ்வு மையம் தொடங்க வேண்டும். தூத்துக்குடியில் மழை பொய்த்து விட்டதால் அணைகளில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.
குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மின்வாரிய அலுவலகத்தில் பல தெருக்களில் உயர் அழுத்த மின்சாரம் திடீரென வருவதால் வீடுகளில் டிவி முதல் குளிர்சாதன பெட்டி வரை பாதிக்கப்படுகிறது. இதனால் சீராக மின்சாரம் வழங்க ஒரு வார்டுக்கு ஒரு மின் ஊழியர் மாநகரத்தின் மூலம் நியமித்து சீராக மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்
திமுக கவுன்சிலர்கள் கனகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசும்போது “தூத்துக்குடி முழுவதும் வீடுகளில் சரியான முறையில் குப்பைகள் எடுக்காததால் தெருக்கள் முழுவதும் குப்பை மூலமாக காத்திருக்கிறது. ஆட்கள் பற்றாக்குறை அதிக அளவு இருப்பதால் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திலும் சுகாதார துறையில் தனி கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர். இது போல் அனைத்து கவுன்சல்களும் தங்கள் வார்டு குறைகளை குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பகுதிகளுக்கும் பாராட்சமின்றி எல்லா பணிகளும் முழுமையாக செய்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகர் நகர், ரஹ்மத் நகர், அய்யாச்சாமி காலனி, பொன்சுப்பையா நகர், லூர்தம்மாள்புரம் மற்றும் செயிண்ட் மேரிஸ் காலனி போன்ற பகுதிகளில் கடந்த 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் பெய்த பருவமழையின் காரணமாக அதிகளவில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது.
மேற்படி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்கும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கியின் கடன், மான்யம் மற்றும் உள்ளாட்சியின் பங்கு தொகையுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நான்கு கட்டங்களாக ரூ.87.01 கோடி மதிப்பீட்டில் 36.36 கி.மீ நீளத்திற்கு அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கூட்டத்தில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனுமதியற்ற கட்டுமானங்கள், அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறுதலாக கட்டி வரும் கட்டிடங்கள் மீது உரிய அறிவிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும், வார்டுகளில் அவ்வப்போது ஏற்படும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அறிவிப்பு வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளவும், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் இளநிலை/ உதவி பொறியாளர்களுக்கு (நகரமைப்பு) உதவியாக 5 தொழில்நுட்ப உதவியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறை உத்தரவின்படி 2023-2024 ஆண்டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம் செய்வது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கனகராஜ், ரெக்ஸ்லின், சுதா, சரவணக்குமார், இசக்கிராஜா, ராஜதுரை, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், காங்கிரஸ் கவுன்சிலர்கள் கற்பககனி, சந்திரபோஸ், அதிமுக கவுன்சிலர்கள் வக்கீல்கள் வீரபாகு, மந்திரமூர்த்தி ஆகியோர் தங்களது பகுதிகளில் செய்த பணிகளுக்கு மாநகராட்சி மேயருக்கும், ஆணையருக்கும் நன்றி தெரிவித்தும், சில பணிகள் செய்த தரக் கோரியும் முறைப்படுத்தி பணிகளை மேற்கொள்ளவும் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேசினார்கள். இதுபோல், மண்டல தலைவர்கள் மேயர் ஆணையரிடம் மனு அளித்தனர்.
கூட்டத்தில் துணை ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், ராமச்சந்திரன், திட்டம் ரங்கநாதன், காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், ஹரிகணேஷ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலெட்சுமி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், ராமகிருஷ்ணன், மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


