தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க தலைவர் சக்தி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழிய சங்க ஓய்வு பெற்ற தலைவர் முத்தையா சிறப்புரையாற்றினார். செயலர் லூயிஸ் ராயன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெறவும், தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிடவும், எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திப்பதை கண்டித்தும், காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தியும் காலை உணவுத் திட்டப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இறுதியில் பொருளாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.


