தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (28.08.2023) நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்திபட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக்கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட 5 நபர்களுக்கு தீருதவித்தொகை இரண்டாம் தவணை தலா ரூ.6,00,000 பெறுவதற்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரணம் உதவித் தொகைக்கான காசோலைகளையும்,
7 தூய்மைப் பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், முன்னாள் படைவீரர் நலன் சார்பில் ஒரு நபருக்கு திருமண மானிய நிதியுதவி ரூ.25,000க்கான காசோலையையும், ஒரு நபருக்கு புற்றுநோய் நிவாரண நிதியுதவி ரூ.14,000க்கான காசோலையையும், ஒரு நபருக்கு கல்வி உதவித்தொகை ரூ.10,000 க்கான காசோலையையும், படைவீரர் கொடி நாள் 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மிகை வசூல் புரிந்த பல்வேறு துறைகளை சார்ந்த 08 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


