மும்பையில் இருந்து வெளிவரும் ஒரே ஒரு வார இதழான வணக்கம் மும்பையில் நான் எழுதும் நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2 ல் 240 வது பகுதியில் முன்னீர்பள்ளம் ஊராட்சி மன்றம் மற்றும் முன்னீர் பள்ளம் காவல்நிலையம் பற்றிய வரலாறு வெளிவந்துள்ளது. படித்து மகிழுங்கள். வாய்ப்பளித்த ஆசிரியர் ஜெயஆசிர் அவர்களுக்கு நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
240. முன்னீர் பள்ளம் ஊராட்சி மன்றம்
முன்னீர் பள்ளம் ரயில் விபத்து மறு நாள் பத்திரிக்கையில் மிகப் பெரிய செய்தியானது. அதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்துக்கு பலரும் விரைந்து ஓடி வந்து விபத்து எப்படி நடந்தது என பார்வை யிட்டனர். பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். கிட்டத்தட்ட அருகில் உள்ள கிராமத்தில் சுமார் 6 மாதம் இந்த விபத்து பற்றிய பேச்சுத்தானர்.
கேட் கீப்பருக்கு சிறைத்தண்டனை கிடைத்தது என்று பலரும் கதைகதையாக கூறுவர். அதைப்பற்றி விவரங்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அதன் சம்பந்தப்பட்ட பேச்சு சுவராஸ்யமாக விளங்கும். பல நாள்களாக அந்த பகுதியில் ரயில் எஞ்சினும், உடைந்த பெட்டியும் கிடந்தது. நெல்லை & அம்பை சாலையில் செல்லும் பயணிகள் அதை பார்த்தவுடன் விபத்து பற்றிய கதையை பேச ஆரம்பித்து விடுவார்கள். எனவே நீண்ட நாள்களாக விபத்தை பற்றிய பேச்சு நடைபெற அந்த ரயில் பெட்டி ஒரு காரணமாக இருந்தது. பிற்காலத்தில் இந்த ரயில் பாதையில் இரட்டை ரயில் பாதை, மின்சார ரயில் பாதை என முன்னேற்றம் வந்த பிறகுதான் அங்கிருந்த பெட்டிகள் அகற்றப்பட்டது.
இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது. தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணியும் துவங்கியது. ஆனால் பல வருடங்களாக இந்த பணி மிகவும் மந்தமாகவே நடந்தது. இதனால் பல நாள்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெல்லை & சேரன்மகாதேவி & அம்பை செல்லும் பயணிகள் மிகவும் கஷ்டப் படுவார்கள். சில வேளைகளில் 1 மணி நேரம் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலைக்கு செல்லாமல் தவித்தவர்களும் உண்டு.
ஒரு வழியாக இந்த பாலம் போடப்பட்டது. தமிழ்நாடுஅரசு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலமாக போடப்பட்ட முன்னீர்பள்ளம் மேம்பாலத்தினை 24, 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
(இதற்காக வைக்கப்பட்ட விளம்பர பலகையில் மாதம் சரியாக தெரியவில்லை. எனவே தான் வருடத்தினையும் தேதியை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்.)
ஆனால் 10 வருட போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக இந்த பாலம் போடப்பட்டு போக்குவரத்துக்குள் வந்தது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். தற்போது இவ்விடத்தில் எந்த பிரச்சனையும் இன்றி போக்குவரத்து மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
இரயில் விபத்து குறித்த தகவலை தந்த இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் காவல்நிலையம் குறித்த சில குறிப்புகளும் எங்களுக்கு கிடைத்தது.
முன்னீர்பள்ளத்தில் கடந்த 2014 முதல் இன்ஸ்பெக்டர்கள் பெயர் பட்டியல் ஆய்வாளர் அறையில் மாட்டப்பட்டிருந்தது. அந்த பெயர்களை பட்டியலிடுவோம். கடந்த 23.01.2014 அன்று முதல் சந்திரசேகரன், 9.02.2017 முதல் பாலாஜி, 28.09.2017 முதல் மாரியப்பன், 21.08.2019 முதல் சீதாலெட்சுமி, 28.02.2021 முதல் சுரேஷ் குமார், 4.08.2021 முதல் சண்முக சுந்தரம், 10.12.2021 முதல் தில்லை நாகராஜன், 12.07.2023 முதல் இன்னோஸ் குமார் ஆகியோர் இந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்கள்.
முன்னீர் பள்ளம் காவல்நிலையத்துக்கு உள்பட்ட ஊர்கள் விவரம் வருமாறு.
19 தாய்கிராமத்தின் கீழ் 31 குக் கிராமங்கள் இந்த காவல்நிலைய எல்கைக்குள் உள்ளது.
கீழ முன்னீர்பள்ளம் & புதுகிராமம், மேல முன்னீர்பள்ளம், மீனம்மாள் புரம், மருதம் நகர்.
ஆரைக்குளம், தருவை &கண்டித்தான்குளம், அடை மிதிப்பான் குளம், ஈஸ்வரியா புரம், சுப்பிரமணியபுரம், மேலே ஓமநல்லூர்.
பிராஞ்சேரி- சுப்பிரமணி யபுரம், மேல ஓமநல்லூர்.
கொழுமடை, கீழச்செவல் – நயினார்குளம்.
கோபாலசமுத்திரம் – கொத்தன்குளம்.
மேலச்செவல் – வன்னியன் குளம்.
தேசமாணிக்கம் – கான்சாபுரம், வடக்கு தேசமாணிக்கம், மாணிக்கம் நகர்.
சொக்கலிங்கபுரம், கீழ ஓமநல்லூர், மேலதிடியூர்.
கீழ தீடியூர்- பூக்குழி, இளையாமுத்தூர், தமிழாகுறிச்சி, குறவர் குளம்.
செங்குளம் – பேரின்ப புரம், வடக்கு செங்குளம், குமபாதர்குளம்.
ஆலங்குளம், இட்டேரி – தாமரைசெல்வி.
கொங்காந்தான்பாறை, புதுக்குளம் & வீரளபெருஞ்செல்வி, தேரவல்லி, மணல்விளை, மல்லகுளம், அரியநாயகிபுரம்.
பொன்னாக்குடி – பொன் னக்குடி தெற்கு, பொன்னாக்குடி வடக்கு, சமத்துவபுரம்
முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்கைக்குள் நாகர்கோவில் பைபாஸ், நெல்லை – அம்பை பிரதான சாலை என இரண்டு பெரிய சாலைகளும் உள்ளன. செங்குளம் ரயில் நிலையமும் பச்சையாறு நதியும் இந்த காவல்நிலைய எல்கைக்குள் உள்ளது. பச்சையாற்றங்கரையில் எங்கும் இல்லாத அதிசயமாய் 3500 பனைமரங்கள் ஒரே இடத்தில் உள்ள தோப்பை கொண்டதும் இந்த காவல் நிலையம் தான். நாங்கள் செய்தி சேகரிக்க சென்ற போது இந்த இடத்தில் பனைத்திருவிழா நடைபெற்றது. மறு கரையில் தாமிரபரணி ஆறும், பாளையங் கால்வாயும் முன்னீர்பள்ளம் எல்கைக்குள் உள்ளது.
இந்த காவல்நிலைய எல்கையில் திருநெல்வேலி மாநகராட்சி எல்கையும் வந்து விடுகிறது.
எனவே இந்த போலீஸ் ஸ்டேஷன் மிகப்பெரிய எல்கை கொண்ட காவல்நிலையமாக விளங்குகிறது.
இந்த காவல்நிலையத்துக்கு உள்பட்ட கோபாலசமுத்திரத்தில் ஒரு புறக்காவல் நிலையமும் உண்டு.
அடுத்த படியாக நாம் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நுழைகிறோம்.
என்னுடன் வருகை தந்திருக்கும் பட்டிமன்ற நடுவர் அய்யா புத்தனேரி செல்லப்பா இந்த பகுதியை நன்கு அறிந்தவர். அதாடு மட்டுமல்லாமல் இந்த ஊரில் தான் அவர் மணமுடித்து இருக்கிறார். எனவே ஆவலோடு குழந்தையாக எங்களோடு வரலாறு சேகரிக்க வந்து கொண்டிருந்தார்.
பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் நுழைந்தோம். இந்த பஞ்சாயத்து ஊராட்சி செயலர் கிருஷ்ணா எங்களை அன்போடு வரவேற்றார். நாங்கள் வந்திருக்கிறோம் என்ற தகவல் பஞ்சாயத்து தலைவர் உமா வெங்கடேஷ் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மறுநிமிடம் எங்களை உபசரிக்க தேனீர் கொண்டு வந்துகொடுத்தார்கள். தொடர்ந்து நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் கிருஷ்ணா பதில் கூற ஆரம்பித்தார். அவருக்கு உதவியாக சுப்பிரமணியன் என்பவரும் வந்தார். அவர் ஊரைபப்றி நிறைய பேசினார். எங்களுடன் ஊரைச்சுற்றி காட்ட அழகேசன் என்பவரை அறிமுகம் செய்தார்கள். இவர் தான் மகாபுஷ்கரம் நடந்த போது முன்னீர் பள்ளம் தாமிரபரணி கரை பொறுப்பாளராக இருந்தவர்.
எனவே அவருக்கும் நிறைய வரலாறு தெரிந்திருந்தது. எங்களை அவர் ஊருக்குள் கூட்டிச்செல்லும் முன்பு, ஊராட்சி மன்ற அலுவலகத்தினை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்வோம். ஊராட்சியும் காவல்நிலையத்தினை போலவே 22 குக்கிராங்களை கொண்டிருந்தது. அவை என்ன என பார்ப்போம்.


