கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாளை (24ம் தேதி) உயர்தர உள்ளூர் ரக பயிர் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளபடி, உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 24.08.2023 அன்று காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர்கள், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் தொழில்நுட்ப சிறப்புரைகள் வழங்க உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார விவசாயிகளும் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு அனைத்து பயிர்களிலும் உயர்தர இரகங்களை காட்சிப்படுத்தலாம்.
வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் இக்கண்காட்சியின் வாயிலாக வீரியமிக்க குணங்களை கொண்ட இரகங்களை கண்டறிந்து புதிய இரகங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும். எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களிடம் உள்ள உயர்தர உள்ளூர் இரகங்களை கண்காட்சியில் காட்சி படுத்திடவும், கண்காட்சியில் கலந்து கொள்ளவும், விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பனை அதிக அளவில் உள்ளதாலும் 2023-2024 வேளாண் தனிநிதிநிலை அறிக்கையில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க நிதி ஓதுக்கீடு வழங்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் பனை விவசாயிகள் இதில் அதிக அளவு கலந்து கொண்டு குறுகிய கால, குட்டை அதிக மகசூல் தரும் பனை வகைகளை காட்சிப்படுத்தவும், உள்ளூர் உயர்தர இரகங்களை காட்சிப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


