தூத்துக்குடி மாவட்டத்தில் பஞ்சாயத்துகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்து தலைவர்கள் அடங்கிய கூட்டமைப்பு கூட்டம் நேற்று தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “பஞ்சாயத்து தலைவர்களுக்கு 29 அதிகாரங்கள் உள்ளன. இதை யாருக்கும் அடிபணியாமல் நீங்கள் பணியாற்றலாம். பஞ்சாயத்து தலைவர்கள், தங்களின் தேவைகளை கேட்டு பெறுவதற்கும், குறைகளை சொல்வதற்கும், கலெக்டரை மட்டுமே தொடர்பு கொண்டால் போதும். சென்னையில் வருகிற 30-ந் தேதி 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாயத்து தலைவர்களின் உரிமை மீட்பு பேரணி நடக்கிறது. அதில் அனைவரும் கலந்து கொண்டு நமக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டும்” என்று கூறினார்.
கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், நீர்தேக்க தொட்டி பராமரிப்பாளர்கள் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு பணி நியமனம் வழங்க வேண்டும் அல்லது தலைவர்கள் நியமனம் செய்ய தமிழக அரசு அதிகாரம் வழங்க வேண்டும். 2010-ல் வழங்கப்பட்ட நிதி போல் தற்போது பஞ்சாயத்து பொதுநிதி 2020-21-ல் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.


