தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சைட் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். எனவே பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கியது ஏராளமான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால பொருட்கள் கிடைத்தன.
தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
மேலும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற குழிகளுக்கு மேல் கண்ணாடி தலம் அமைத்து அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை அப்படியே வைத்து அதனை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடும் வகையில் நாட்டிலேயே முதன்முறையாக ஆன் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்.
மக்கள் ஆர்வம்
சைட் மியூசியத்தை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப் படுகின்றனர். சைட் மியூசியம் திறக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
அடிப்படை வசதிகள்
சைட் மியூசியம் பகுதியில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ‘இந்து தமிழ் திசை’ நாளிதளிடம் கூறியதாவது :-
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்ற ‘பி’ மற்றும் ‘சி’ சைட் ஆகிய இரு இடங்களில் சைட் மியூசியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ‘பி’ சைட்டில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ‘சி’ சைட் பகுதியிலும் விரைவாக சைட் மியூசியம் அமைக்க வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதிச்சநல்லூர் அமைக்கப்பட்டுள்ள சைடு மியூசியத்தை தினமும் ஏராளமான மக்கள் குறிப்பாக சுற்றுவட்டார கிராம மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர் மக்கள் அதிக அளவில் வர தொடங்கி இருப்பதால் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
தற்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. அது போதுமானதாக இல்லை எனவே கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்ய வேண்டும். வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் போதுமானதாக இல்லை. கூடுதல் இடவசதி செய்ய வேண்டும் மேலும் திருநெல்வேலி திருச்செந்தூர் வழித்தடத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தில் நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.


