விளாத்திகுளத்தில் 100 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளிக்கு அறம் செய் சமூக சேவை குழு சார்பில் இருக்கைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சுமார் 100 ஆண்டுகள் பழமையான விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். பள்ளி தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரையில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தான் படித்து வருகின்றனர். இதனையடுத்து விளாத்திகுளம் பகுதியில் பொது சேவைகள் செய்யும் நோக்கத்தோடு அறம் செய் என்று சமூகசேவை குழு உருவாக்கப்பட்டது.
இந்த குழுவின் மூலம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்யப்பட்டு சுமார் 4 லட்சத்து 65ஆயிரம் மதிப்பில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அமா்ந்து பயன்பெறும் வகையில் 60 புதிய இருக்கைகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து கொண்டுவரப்பட்டது. மாணவர்களுக்கான புதிய இருக்கைகள் உள்ள அறையை மாணவா்கள் பயன்பாட்டிற்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்து மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் (மேற்கு) அன்புராஜன் (கிழக்கு) சின்னமாரிமுத்து (மத்திய) ராமசுப்பு பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, அறம்செய் வாட்ஸ்அப் குழு உறுப்பினர் இளையராஜா மாரியப்பன், பாரதி சங்கர், சுரேஷ், சித்துராஜ், பெத்துராஜ், சுதாகா்,மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


