தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி அளவில் இரண்டாம் கட்ட மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிப்பி கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் .கி.செந்தில்ராஜ், தலைமயில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது- நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் இரண்டாம் கட்ட மாபெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு வருகின்ற 17.08.2023 அன்று வ..உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் .வைத்து நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் “நமக்கு வாய்த்த ஐந்து மகுடங்கள் ” என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்க உள்ளன. புத்தகக்கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், அகழாய்வு களங்கள், உயர்கல்வி வழிகாட்டுதல், தாட்கோ திட்டங்கள், வங்கி கடன், தொழில் முனைவோர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம் , மாவட்ட தொழில்மையம், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு பெருமிதச்செல்வன் மற்றும் பெருமிதச்செல்வி ஆகிய இரண்டு வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சொற்பொழிவுக்கு பின்னர் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வி நாயகன் மற்றும் கேள்வி நாயகி ஆகிய இரண்டு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது திறனையும், சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு கேள்விகளையும் எழுப்பி விருதுகளை பெறவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேற்படி கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ,துணை ஆட்சியர் (பயிற்சி) மற்றும் வ..உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


