நாகலாபுரத்தில் ஆன்மிக குரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 83வது அவதார பெருமங்கல விழா நடைபெற்றது. மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
குருபூஜை, விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பிரச்சாரக் குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை மாவட்ட வேள்விக்குழு தலைவர் கிருஷ்ண நீலா வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திருவிக சக்தி பீடம் பத்மா துவக்கி வைத்தார். விழாவில், வட்டத் தலைவர் செல்வம், மன்ற தலைவி விஜயலெட்சுமி, இளைஞர் அணி பொறுப்பாளர் ராஜதுரை, எல்.வி.புரம் மன்ற தலைவர் உமாமகேஷ்வரி, வேப்பலோடை அழகுமாரி, தாப்பாத்தி மன்றம் சுகந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


