10.08.2023 அன்று தென்காசியில் சித்தர் பீடங்களை தரிசித்து விட்டு, தென்காசி கோயிலில் தரிசனம் செய்து விட்டு, சக்தி விகடனில் கட்டுரை எழுத தேவையான தகவலை சேகரித்து கொண்டு வீட்டுக்கு திரும்பினோம். எனது மாருதி வேனில் நெல்லைக்கு திரும்பி கொண்டிருந்தோம். காரை சிஷ்யன் சுடலை மணி செல்வன் ஓட்டி வந்தான். என்னோடு திருப்பதி அண்ணனும், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியனும் பின் இருக்கையில் இருந்தார்கள். நான் முன் இருக்கையில் இருந்தேன். சீதற்பநல்லூர் அருகே வரும் எதிரே குடிபோதையில் பைக்யை அதிவேகமாக ஓட்டிக்கொண்டு குடிமகன் ஒருவர் வந்தார். அவர் எங்கள் கார் முன்பே சென்ற போலீஸ்காரர் பைக் மீது மோதும் நிலைக்கு செல்ல, அவர் அவரிடம் இருந்து தப்பித்து வண்டியை ஓட்டிச்சென்று விட்டார். அடுத்து பின்னால் எங்கள் கார் வந்தது. இவர் தடுமாறி வருவதை பார்த்தவுடன் எங்கள் காரை நிறுத்தினான் சுடலைமணி செல்வன். ஆனாலும் அந்த குடிமகன் எங்கள் காரில் வந்து மிக வேகமாக மோதினார். அவர் இடுப்பில் இருந்த மது பாட்டில் வேறு நழுவி சாலையில் விழுந்தது. நல்லவேளை ஹெல்மெட் அணிந்திருந்தார். அவர் எங்கள் கார் கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி சிதறியது. கிட்டத்தட்ட காரின் முன் பகுதி அப்பளமாக நொறுங்கியது. நல்லவேளை நாங்கள் வணங்கிய சித்தர்கள் புண்ணியத்தில் யாருக்கும் காயம் இல்லை. ஹெல்மேட் போட்ட காரணத்தினால் அந்த குடிமகனும் உயிர் தப்பி விட்டார். இவரிடம் இருந்து உயிர் தப்பிய போலீஸ்காரர் உதவியோடு, அந்த குடிமகனை காவல்நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தோம். அவர் அதிபோதையில் இருந்த காரணத்தினால் நடந்தது எதுவுமே தெரியாமல் காவல் நிலைய பெஞ்சில் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார். அவர் உறவினர்கள் தகவல் தெரிந்து வந்திருந்தார்கள். “மனைவியுடன் சண்டை அதனால் குடித்து கொண்டு அலைகிறான்” என்று சொல்லி அவர் தாயார் அழுதார்.
இன்ஸ்பெக்டர் எங்களிடம் புகார் வாங்கி அவர் மீது குடிபோதையில் பைக்யை ஓட்டி வந்து விபத்தினை ஏற்படுத்தினார் என வழக்கு பதிவு- செய்தார். நல்லவேளை எங்களில் யாருக்கும் உயிர் சேதமில்லை. அந்த குடிமகனும் உயிர் தப்பித்து விட்டார். யோசித்து பாருங்கள் குடிமக்களே. போதை உங்கள் உயிரையும் பறி கொடுக்க செய்து, உங்கள் குடும்பத்தையும் நடுவீதியில் நிக்க வைத்து, சம்பந்தமே இல்லாமல் வந்த போலீஸ்காரர், எங்களை போன்றவர்கள் உயிரிலும் விளையாடி விட்டீர்களே. நல்லவேளை எல்லோரும் தப்பித்தோம். இதில் பலி ஏற்பட்டால் எங்கள் குடும்பத்துக்கு யார் பொறுப்பு. எனவே குடிமகன்களை கட்டுப்படுத்தா விடில் இதுபோல் பல்வேறு விபத்து தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
அவர் குடிபோதையில் வந்தார். அவருக்கு தண்டனை தேவைதான். ஆனால் எங்கள் நிலைமையை பாருங்கள். காருக்குத்தான் எவ்வளவு ரூபாய் செலவாக போகிறதோ தெரியவில்லை. இந்த கார் 14 வருடம் என்னுடன் இருக்கிறது. நான் நூல் எழுத களப்பணி செய்ய இடத்திற்கெல்லாம் வந்துள்ளது. இன்றுதான் முதல் விபத்து. என் குழந்தை போல இருந்த காரை பார்க்கும் போது மனது ரொம்ப வலித்தது. ஆனாலும் தொடர்ந்து எழுத்து துறையில் பயணிக்க மீண்டும் ஒரு தடவை இறைவன் உயிர் பிச்சை கொடுத்து இருக்கிறான். நன்றி ஆண்டவனே – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


