முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்கி விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான். அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரைக்கு வேலைக்கு சேர்த்து விட முயற்சித்தாள் அவள் அக்காள் கற்பகம்.
இனி.
58. அரண்மனை வேலையும், கடுங்கோலன் காவல்காரனும்
காலையில் அரண்மனைக்கு கூட்டிச்சென்றாள் கற்பகம். ராஜத்துரைக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்து விட வேண்டும்.அதுவும் அரண்மனை வேலை. நம்ம ஊருகாருனுக்கு அரண்மனை வேலை கொடுத்தால் நமக்கு பெருமை தானே என நினைத்தாள்.
“மகாராணியை பாக்கணும்” என்றாள் கற்பகம்.
அரண்மனையில் கற்பகத்துக்கு கொஞ்சம் மரியாதை உண்டு. ஏன் என்றால் ஒரு சமயம் மகராணிக்கு காலில் சுலுக்கு விழுந்து விட்டது. பலர் வைத்தியம் பார்த்தும் எடுபடவில்லை. இதை கேள்வி பட்ட கற்பகம் அரண்மனைக்கு போய் மகாராணியை பார்த்து சுலுக்கு தடவி விட்டாள். அப்போது அவளுக்கு குணமாகி விட்டது. அதில் இருந்து கற்பகம் அரண்மனையில் மகாராணிக்கு அந்தரங்க வைத்தியராகி விட்டாள். எனவே அவளுக்கு என்று தனி மரியாதை உண்டு.
எனவே மகாராணி இருக்கும் இடத்திற்கு சேவகன் சென்று கற்பகம் வந்திருப்பதாக சொன்னான்.
“இதோ வாரேன்னு சொல்லு”. என் மகராணி சொல்லி அனுப்பி வைத்தார்.
மகராணி வரட்டும் என ராஜதுரையுடன் காத்து இருந்தாள் கற்பகம்.
சிறிது நேரத்தில் ராணி வெளியே வந்தார்.
நல்ல உயரமான தோற்றம். யாரும் பார்த்தால் உடனே அவர்கள் எழுந்து மரியாதை கொடுக்கும் வண்ணம் தெய்வப்பிறவியாக இருந்தார். ஆனால் அவரது கண்ணில் மட்டும் ஏதோ சோகமாக இருந்தது. ராஜா இருதாலய மருத்தப்பர் இருக்கும் வரை துரு துருவென இருந்தவர். கோயில் வேலை பூஜை காரியம் என அனைத்தையும் சந்தோசமாக பார்த்து வந்தவர். தற்போது சோகமாக காட்சியளிக்கிறார்.
ராஜா இறந்த பிறகு அவரது உருவப்பொம்மையை அரியணையில் வைத்துக்கொண்டு அரசாட்சி செய்து வருகிறார். ஆனால் தைரிய சாலி. யாரை பார்த்தும் பயப்படுவது கிடையாது. நியாயம் ஒன்றே அவருக்கு மிகப்பெரியதாக இருந்தது. ஆனாலும் பெரிய ஜமீன். இந்த ஜமீனில் உள்ள படைகளை கண்காணிக்க இயலவில்லை. பெரிய பரப்பளவில் உள்ள வயல்வெளிகளை கவனிக்க இயலவில்லை. எனவே அதற்கு என்று தனித்தனியாக காவல்காரர்களை நியமித்து இருந்தார். இவர்களுக்கெல்லாம் தலைமை காவலனாக வீரபாண்டியன் என்பவனை நியமித்திருந்தார். இவன் ஒரு வகையில் மகாராணிக்கு சொந்தக்காரன் எனவே இவன் வச்சது தான் சட்டம்.ஆனால் ராணியிடம் வரும் போது மட்டும் பெட்டிபாம்பாக அடங்கி கிடப்பான்.
ராணியும் வெளிவேலைகளை அதிகமாக கவனிப்பதில்லை. தன்னுடைய ஆசை கணவர் விட்டுச்சென்ற பணிகளை செய்து கொண்டிருந்தார். கோயில் பணி, தமிழ்ப்பணி, மற்ற சேவைகளை நேரடியாக செய்து கொண்டிருந்தார். படைகளையும் வீரர்களையும் மட்டும் இவர் கண்டு கொள்ளவில்லை. அந்த பொருப்புத்தான் வீரபாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
மகாராணி வெளியே வந்தவுடன் கற்பகம் எழுந்தாள்.
“மகராணி உத்தரவு. நான் உங்க வைத்தியச்சி கற்பகம் வந்திருக்கேன். எங்க சொந்த ஊருல இருந்து என் தம்பி வந்திருக்கான். சமூகம் உங்க அரண்மனையில ஏதாவது வேலை போட்டு தரணும்”. என்றாள்.
மகாராணி ராஜதுரையை பார்த்தார். உயரமான தோற்றத்தில் பிரமாண்டமாக இருந்தான் ராஜ துரை. இவனும் ராஜ தோரணையாகத் தான் இருந்தான். இவன் அரண்மனை வாரிசாக இருந்தால் இன்று இளவரசன் போல இருப்பான். ஆனால் பனை தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து விட்டானே.
மகா ராணி அவனை வச்ச கண் வாங்காமல் பார்த்தார். “நீ என்ன வேலை செய்வே”.
“என்ன சொன்னாலும் செய்வேன்”
ராஜதுரை வேகமாக பதிலளித்தான்.
“தோட்டம் துறவ காவல் காப்பியா?”
“ம்”.
“சிற்றாற்றங்கரையில இருக்கிற தோட்டத்தை காவல் காக்கணும். தலைமை காவலன் சொல்லுற வேலையை தட்டாம செய்யணும்”.
“ம். காக்கேன்”.
“உன் அக்கா எனக்கு மருத்துவச்சியா இருந்து வேலை செஞ்சி இருக்கா. அதனால உனக்கு வேலை தாரேன். அவ பேரை காப்பாத்தனும்” ராணி தீர்க்கமாக சொன்னாள்.
“காப்பாத்துவேன் மகாராணி” ராஜதுரையும் பயப்படாமல் சொன்னான்.
“யாரங்கே”. ராணி சத்தமிட அங்கே தலைமை காவலர் வீரபாண்டியன் வந்து நின்றான்.
“உத்தரவு மகாராணி”
“வீரபாண்டியா. இந்த பையன் கீழ்க்காட்டுல இருந்து வந்துருக்கான். இவன் நம்ம வைத்திச்சி வீட்டுக்கு சொந்த காரன். இவனை நம்ம ஆத்தங்கரையில இருக்கிற தோட்டத்துக்கு காவல்காரனா இருக்க வையி. வேறு வேலைக்குனாலும் அனுப்பு. சம்பளத்தை அரண்மனை கணக்கில இருந்து எடுத்து கொடு” என்றார்.
“உத்தரவு மகாராணி”. வீரபாண்டியன் சொன்னவுடன் மகாராணி அரண்மனைக்குள் சென்று விட்டாள்.
ராஜதுரையை பார்த்துக்கொண்டிருந்த வீரபாண்டியன் அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டு அருகில் நின்ற கற்பத்தினை பார்த்தான். யாரிந்த பெண். என் கண்ணில் இதுவரை சிக்காதவளாக இருக்கிறாள். ஆகா. என்ன அழகு . இவள் எப்படி என்னிடம் இருந்து தப்பித்தாள் என மனதுக்குள் நினைத்து அவளை விழுங்கி விடுவது போலவே பார்த்தான்.
வீரபாண்டியன் கற்பகத்தினை பார்த்ததை ராஜதுரை கவனித்து விட்டான். என்னடா இவன் முழி சரியில்லையே என மனதுக்குள் நினைத்தான்.
கற்பகத்தினை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான் வீரபாண்டியன். இதையறிந்த ராஜதுரை செருமினான்.
அந்த சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தான் வீரபாண்டியன். உடனே “என்கூட வா” என ராஜதுரையை உடன் அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அக்காளும் தங்கையும் அவன் பின்னால் வந்தார்கள். அரண்மனை வாயிலுக்கு வந்தவுடன் ராஜத்துரையை பார்த்தான்.
“நாளைக்கு காலையில நான் சிற்றாற்றங்கரையில நிப்பேன். நீ சரியா அங்க வந்துரு . நீ காவல்காக்க எல்லையை சொல்லிட்டு போறேன்னு”
என சொல்லி விட்டு போனாவன் கற்பகத்தினை பார்த்து திரு திரு வென முழித்தான். “நீ எங்க இருக்க” என கேட்டான்.
கற்பகம் அமைதியாக இருந்தாள்.
“கேக்கமுல்லா. நீ எங்க இருக்க” வீரபாண்டியன் அதட்டினான்.
“ம். நானும் அங்க சித்தாத்தங்கரையில விடிலி காட்டுலத்தான் இருக்கேன்” கற்பகம் வேண்டா வெறுப்பாக பதில் சொன்னாள்.
“ம். இரு. இரு” என இருமாப்பாக சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான் வீரபாண்டியன்.
ராஜத்துரைக்கு கஷ்டமாக இருந்தது.
“யக்கா என்ன இந்த ஆளு உன்னைப் பாத்து பேய் முழி முழிக்கான்”. என்றான்.
“ஏலே ராஜ துரை அவ வெறுவாக்கெட்ட பய. அவன் பாட்டம் கருப்பட்டி பிரிக்க வரும் போதே பரக்க பரக்க த்தான் முழிப்பான்னு சொல்லுவா. ஆனா இந்த நாயா நான் இதுவரைக்கும் பாத்தது கிடையாது. ஊருக்குள்ளேயும் அவனுக்கு நல்ல பேரு கிடையாது”. என்றாள்.
“வயக்காட்டுக்குள்ள வந்து நின்னுக்கிட்டு பொம்பளை பிள்ளைய கிட்ட வம்பு இழுத்துக்கிட்டே இருப்பானாம். இது மட்டுமில்ல இவனை பத்தி நிறைய கதைகதையா சொல்லுவாவ”.
ராஜ துரை அமைதியாக இருந்தான்.
“யக்கா இவன் கிட்டே நாம வேலை பாக்க முடியுமா?”
“நம்ம வேலையை நாம பாக்க வேண்டியது தான் . இவன் சேட்டை பண்ணினா நாம வேறே வேலைக்கு போக வேண்டியதுதான். இவியள எதித்து நாம என்ன செய்ய முடியும்?”
“உனக்குத்தான் மகாராணியை நல்லா தெரியுமே? பேசமா அவிய கிட்ட சொல்ல வேண்டியது தானே”
“ம். சொல்லலாம். ஆனா நம்ம கிட்ட அவன் இதுவரைக்கும் வம்பு தும்பி பண்ணல”.
“நம்ம கிட்ட பண்ணல. ஆனா நீ சொல்லுறத பாத்த நம்மள மாரி பாவப்பட்ட ஜென்மங்க கிட்ட இவன் நெறைய சேட்டை பண்ணியிருப்பான் போல இருக்கே”.
கற்பகம் அமைதியாக இருந்தாள். “என்ன செய்ய இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்கு வயிறுன்னு ஒண்ணு இருக்குல்லா. அதை நிறப்பனுமே”.
“அதுக்காக மானம் மரியாதையை விட்டுட்டா வாழ முடியும்?”
ராஜதுரை விரக்தியாக சிரித்தான்.” பாவப்பட்ட ஜென்மம் இந்த சாணக்குடி ஜென்மம். எங்க போனாலும் அடங்கித்தான் வாழ வேண்டியிருக்கு”.
“என்னலே சொல்லுத”.
“இல்லைக்கா. நமக்கு நல்ல அறிவு இருக்கு. உழைச்சி வாழுற தெம்பு இருக்கு. யார் உழைப்பையும் சீண்ட மாட்டோம். நம்ம உழைப்பு கூலி கிடச்சா போதுமுன்னு வாழுதோம். ஆனால நம்ம மக்க மேலே நடத்திற அடக்கு முறை எல்லாப்பக்கமும் ஒண்ணு போலத்தானே இருக்கு . அதைச்சொன்னேன்”.
கற்பகம் அமைதியாக இருந்தாள்.
“ஏலே தம்பி. எவனும் என்னத்தையும் சொல்லிட்டு போவட்டும். நான் கவலை படமாட்டேன். கொஞ்ச நாளைக்கு வேலையை பாத்துட்டு அமைதியா இரு. அதுக்குள்ள உனக்கு வேறே நல்ல இடம் பாக்கேன்” என்றாள்.
“சரிக்கா. ஆனா உனக்காகத்தான் வேலைக்கு போறேன். அங்க போயி. ஏதாவது அவன் என் கண் முன்னால வம்பு பண்ணினான். நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதே?. ஏன்னா என் ரத்தம் என் மக்கள் மேலே அக்கறையா ஓடுதே” என்றான்.
“சரி. வா. அத்தான் வருத நேரமாயிட்டு”, வீட்டுக்கு போவோம் என்றாள்.
அந்த மாலை நேரத்தில் சூரியன் அப்படியே சிற்றாற்றில் மேற்கே சென்று மறைய யோசித்தான். நாளை எதுவோ நடக்க போவுது என்பதை அறிவுருத்தும் விதமாக அவனது கதிர்கள் எப்போதும் இல்லாதது போலவே இன்று கூடுதலாக சிவப்பு வண்ணம் காட்டிக்கொண்டிருந்தது.
இரண்டு பேரும் எதுவுமே பேசவில்லை. ஆற்றை கடந்து விடிலி காட்டுக்கு வந்தார்கள். அங்கே அத்தான் வந்து இருந்தார்.
மூன்று பேரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அதன் பின் சிறிது நேரத்தில் படுத்து தூங்கி விட்டார்கள்.
மறுநாள் விடிந்தது.
சூரியன் மிக வேகமாக உதித்தான்.
இன்று என்னவோ தெரியவில்லை தீப்பிழம்பாக கொதித்து எழுந்தான்.
ராஜ துரை சிற்றாற்றில் குளித்தான். ஆனால் குளிக்கும் போது குற்றால சாரலின் குளிர்ச்சியை விட வெப்பம் தான் அதிகமாக இருந்தது. அந்த வெப்பத்தினை தணிக்க முடியாமல் தவித்தான் ராஜதுரை.
மனதும் நெருடலாகவே இருந்தது. இன்று என்னவோ நடக்கப்போகிறது என்பது போலவே இருந்தது.
வேலைக்கு செல்ல ஆயத்தமானான். அத்தான் பனையேற சென்று விட்டார். அக்காள் கற்பகம் அவர் பின்னாலேயே நார் பெட்டியை தூக்கி கொண்டு கிளம்பினாள். பதனீர் வாங்கி வரவேண்டும், அதை காய்க்கவேண்டும், அதன் பின் கருப்பட்டியாக்க வேண்டும். இன்று கிடைக்கும் கருப்பட்டியை விற்க வேண்டும்.
அவளுக்கு தலைக்குமேல் வேலை. எனவே வேகம் வேகமாக வீட்டு வேலைகளை பார்த்தாள்.
“ஏலே தம்பி. நீ. வேலைக்கு போயிட்டு பத்திரமா வாய்யா” என குரல் கொடுத்து விட்டு கிளம்பினாள்.
“சரி யக்கா” தலையாட்டினான் ராஜதுரை.
கற்பகம் கிளம்பி விட்டாள்.
ராஜ துரை கிளம்பினான். “இந்த வேலைக்கு போகவா வேண்டாமா? இவன் நல்லவன் மாரி தெரியலையே?.இவன் கூட வேலை பாக்கவா?” பல கேள்வி அவன் மனதுக்குள் எழுந்தது.
ஆனாலும் நடந்து அப்படியே மேற்கே சென்றான். அங்கே ஒருவன் இவனை பார்த்து . “என்னடே புதுசா வேலைக்கு வந்து இருக்கியா. மேல களத்து மேட்டுல தலைமை காலவர் இருப்பாவ. அவுக கிட்ட போய் பாரு” என்றான்.
இவன் நடந்தான். மானூர் செல்லும் வாய்கால் கரை வழியாக நடந்தான். ஒரிடத்தில் அறுவடை நடந்துகொண்டிருந்தது. அருகே களத்து மேட்டு அருகில் பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தின் அடியில் தலைமை காவலர் வீரபாண்டியன் இருந்தான்.
நேற்று அரண்மனையில் பார்த்த வீரபாண்டியன் மாதிரி இல்லை. இவன் மிகப்பெரிய தோரணையாக இருந்தான். பட்டு வேஷ்டி, பட்டு சட்டை போட்டு நேரியல் போட்டு இருந்தான். அவனது முறுக்கிய மீசை இங்கு மிக களைகட்டியிருந்தது. அவனுக்கு இரண்டு அடியாள்கள் பின்னால் நின்று கொண்டிருந்தனர்.
தூரத்தில் வேலை செய்ய ஆண்களை விட பெண்களை தான் இவன் நோட்டமிட்டான்.
தூரத்தில் போய் நின்ற ராஜ துரை அவனை நோக்கி அவன் பார்வையில் படும் படி நின்றான். மற்றவர்கள் தொடர்ந்து அருகில் சென்று கும்பிடு போட்டார்கள். இவனுக்கு கும்பிடு போட மனது இல்லை. தான் கும்பிடும் அளவுக்கு இவன் பெரிய ஆளு மாதிரியும் தெரியலை.
“ஆண்ட பரைம்பரைடா எங்க பரம்பரை. நாங்க எவனுக்கும் தலை வணங்க தேவையில்லை. ஆள நாடு இல்லாட்டியும். நாங்க காட்டை ஆளுவோம். எங்களுக்குன்னு இருக்கிற இடத்தை பொன் விளையிற பூமியா மாத்துவோம். எங்களுக்கு சாமி நில புலன் தான். அதை விட்டுட்டு இந்த மாரி காவோலை பயலுவலுக்கெல்லாம் தலை வணங்க மாட்டோம்”.
ராஜத்துரையின் மனது சொன்னது. அமைதியாக நின்றான்.
தன் கையில் இருந்த பிரம்பை காட்டி தலைமை காவலன் ராஜதுரையை கூப்பிட்டான்.
அந்த தோரணை இவனுக்கு அறவே பிடிக்கவில்லை.
ஆனாலும் அருகில் சென்றான்.
“உன்கூட வந்தாளே நேத்து. அவ யாரு?”
“எங்க அக்கா”
“எங்க இருக்கா?”
“விடிலி காட்டுல”.
“ம். கூட பிறந்தவளா?”
“ம். ஆமாம்”
“நீ எங்க இருக்க”
“அங்கத்தான்”
இவன் ஏன் அக்காளை கேக்கான். இவனுக்கு எரிச்சலாய் வந்தது. “இவன் பேசுவது எதுவும் பிடிக்கலை. சே. இந்த பயக்கிட்ட வேலை பாக்கவா?”
அக்காளுக்கா அமைதியாக இருந்தான்.
வீரபாண்டியன் அருகில் இருந்த எடுபிடியை கூப்பிட்டான்.
அவனிடம் ரகசியமாக கேட்டான். “அது யாரு. விடிலி காட்டுல இருக்கிறது. எங்கிட்ட ஒரு பயலும் சொல்லலை”.
அடியாள்கள் இரண்டு பேரும் அமைதியாக இருந்தார்கள்.
“சரி. நீ. போய் வேலைக்கு சேரு. இன்னைக்கு நெல் மூடையை சங்கரன் கோயில் போவுது. மாட்டு வண்டிக்கூட காவலுக்கு போ. மூடையை இறக்கி வச்சிட்டு வா”. என்றான்.
என்னடா முதல் நாள் வேலையில நம்மளை ஊரை விட்டு தூறத்துதான்.
“பரவாயில்லை செய்வோம்” என ஆயத்தமானான்.
நெல்லை மூடை ஏற்றப்பட்டது. அதன் பின் மாட்டு வண்டியில் இருந்து மூடை விழுந்து விடாமல் இருக்க கயிறை போட்டு நன்கு இறுக்கினார்கள். மாட்டுவண்டிகாரருக்கு ராஜத்துரை ஒத்துழைத்தான். வண்டி ஓட்டி சங்கரன் அதன் பின் அருகில் உள்ள மாட்டு தொழுவத்துக்கு சென்று மிகப்பெரிய ஒட்டங்காளை மாடு இரண்டை கூட்டி வந்து வண்டியில் கட்டினான்.
அதன் பின் ராஜத்துரையை கூப்பிட்டான். “ஏலே மாட்டு வண்டியின் கீழே அரிக்கேன் லைட் சரியா இருக்கான்னு பாரு”
அவனும் கிழே பார்த்தான். அங்கு அரிக்கேன் லைட் தொங்கி கொண்டிருந்தது. கிட்ட போய் அதை ஆட்டிப்பார்த்தான் அதில் மண்ணெண்ணை இருந்தது. திரியும் சரியாக இருந்தது.
“அண்ணே எல்லாம் சரியா இருக்கு” என்றான்.
“சரி. சரி. வண்டியில ஏறு”
அதன் பின் மூடை மீது இவன் ஏறிக்கொள்ள மாட்டு வண்டி கிளம்பியது.
இரண்டு பேரும் சத்தம் காட்டாமலேயே கிளம்பினார்கள்.
சங்கரன் பேசவே இல்லை. பாரம் அதிகமாக இருந்தாலும் கூட காளைகள் இரண்டும் வேகமாக சென்றது.
ஆனாலும் ஹாய் ஹாய் என மாடுகளை ஓட்டிக்கொண்டே வந்தான் சங்கரன். எனவே கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் சங்கரன்கோயில் போய் சேர்ந்து விட்டனர்.
இரண்டு பேரும் மூடையை கமிஷன் கடையில் கொண்டு இறங்கினார்கள்.
முதலாளி கேட்டார். “என்ன சங்கரன் ஜமீன் கணக்கு தானே”.
“ஆமாம் முதலாளி” என்றான் சங்கரன்.
“சரி. கணக்குல ஏத்திக்கிடுதேன்”.
சங்கரன் தலையை சொறிந்தான்.
“புதுசா ஒரு பையன் வந்திருக்கான். பசி வேறே எடுக்கு முதலாளி”.
சிரித்தார் முதலாளி. சரி. பிரியாணி கடையில போய் நம்ம கணக்குல சாப்பிட்டுகிடுங்க”.
இருவரும் அங்கிருந்து நடந்தார்கள்.
அருகில் உள்ள பிரியாணி கடைக்கு சென்றார்கள்.
சங்கரன்கோயில் பிரியாணி என்றாலே மிகவும் சிறப்புத்தான். இளம் ஆட்டு கறியை போட்டு ரொம்ப பிரமாதமா கிண்டி வைத்து இருப்பார்கள். ஆகவே சங்கரன்கோயில் பிரியாணிக்கு தனி மவுசு.
இருவரும் சாப்பிட்டார்கள். மிகவும் சுவையாக இருந்தது.
மட்டன் பிரியாணி உடன் இரண்டு முட்டை, ஆம்லெட், வறுவல் சுக்கா என சங்கரன் ஒன்று விடாமல் வாங்கினான். ஆனால் ஓசிக்கு சாப்பிடுவது ராஜதுரைக்கு பிடிக்கவில்லை.
“சே. என்ன ஜென்மமோ ஓசியில கிடைக்கும் என்றால் இப்படியா?” என மனதுக்குள் நினைத்தான்.
ஆனால் பாழாய் போன வயிறு சத்தம் போட்டது. “ஏலேய் சாப்பாடு வாங்கி தா” என கூப்பாடு போட்டது. எனவே பேருக்கு ஒரு பிரியாணியை மட்டும் வாங்கி சாப்பிட்டான்.
பிரியாணி சாப்பிடும் போதே காவல்காரன் நினைவு தான் வந்தது. எனவே அவனுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. கொமட்டல் எடுத்தது.
ஆனால் சங்கரன் பிரியாணிக்குள் கிடந்த எலும்பை கடித்து துப்பினான்.
ஒரு வழியாக இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். அதன் பின் அருகில் உள்ள மற்றொரு கமிஷன் மண்டிக்கு சென்றனர். அங்கு பருத்தி, வத்தல், போன்ற விளைபொருள்களை போடுவது சங்கரனின் வாடிக்கை எனவே அங்குள்ள முதலாளியை குசலம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
அதன் பின் சங்கரா கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு போயேன் என்றார் கமிஷன் மண்டி முதலாளி.
சரி என்று இருவரும் மாடிக்கு சென்றார்கள். அங்குள்ள சிறிய பெஞ்சில் சங்கரன் படுத்தான். அருகில் ராஜத்துரை வந்து நின்றான்.
மெதுவாக பேச்சி கொடுத்தான்.
“தம்பி உன் பேரு”.
“ராஜதுரை”
“யய்யா நான் உங்க ஆளுகத்தான். சுரண்டைத்தான் சொந்த ஊரு. நீ எதுக்குய்யா இங்க வேலைக்கு வந்த”.
“எதுக்கு தாத்தா”.
“இல்லை இந்த ஊருக்கு உனக்கு சரிபடாதுடே”.
“ஏன் தாத்தா”.
“யய்யா. இங்க உன் சொந்தகாரவிய இருக்காவலா?”.
“ஆமாம் அக்கா இருக்கா”.
“ம். அவியளையும் சீக்கிரம் கூட்டிட்டு ஊருக்கு போ”.
“ஏன் தாத்தா?”.
“இந்த எழவெடுத்தவன் வீரபாண்டி இருக்கானே வெறுவாக்கெட்டவன்”.
“என்ன தாத்தா சொல்லீதீய”
“ஆமாம்”.
“தாத்தா ஜமீனை பத்தி பெரிசா சொன்னாவியளே. என்னமோ தமிழ் வளத்தவிய. கால்வாய் வெட்டினவியன்னு சொன்னாவலே”.
“உண்மைத்தான். அது இருதாலயமருத்தப்பர் காலத்தோட போச்சு. இப்போ ஆட்சி சரியில்லை. ராணி பேச்சை ஒரு பயலும் கேட்க மாட்டுக்கானுவ. ராணியும் கோர்ட் கேசுன்னு அலையிறதால ஜமீன் நிர்வாகத்தை ஒழுங்கா பாக்க முடியலை. அதனால இந்த வெறுவாக்கெட்டவனுவ அட்டகாசம் தாங்க முடியலை”.
அமைதியா இருந்தான் ராஜ துரை.
தாத்தா தொடர்ந்தார்.
“இந்த வெளங்காத பய தோட்டத்துக்கு காவலுக்கு வாரேன்னு இங்குள்ள பொண்ணுங்க மானபங்கம் படுத்திகிட்டு இருக்கான் அதை தட்டி கேட்க யாருமே இல்லை”.
“என்னை தாத்தா சொல்லுதீய”.
“ஆமாம். இந்த பய கெட்ட கெடுக்கு ஒரு நாளைக்கு ஒரு பெண் கேட்கு. அதுவும் இவரு ஒரு நாளு கெடுத்த பெண்ணை மறுநாளு கெடுக்க மாட்டாரு. அடிமை மாரி வேலைசெய்யுற பொம்பளை பிள்ளையளை பிடிச்சு வந்து மானபங்கம் படுத்துறான்”.
“தாத்தா”.
“இவன் புடுக்க அறுக்க ஒரு பய பொறந்து வரமாட்டுக்கிறான்”.
அமைதியாக இருந்தான் ராஜ துரை. “இங்கேயும் போராட்டமா?. இங்கே அபலை பெண்ணா இருப்பது யாரு. பனை தொழில் செய்து, உடலை மூலதனமாக வச்சி பொழைக்கும் என் குலப்பெண்கள் தானே. விவசாயம் மட்டுமே தெரிந்து பயிர்களை நட்டு, களைபறித்து, அறுவடை செய்யும் என் சகோர குலத்தை சேர்ந்த விவாய தொழில் செய்யும் பெண்கள் தானே. அவர்களுக்கு பிரச்சனையா?”.
“தாத்தா இவனால பாதிக்கப்பட்ட பெண்கள் சும்மாவா இருக்காவ”.
“எங்க சும்மா இருக்காவ. பல நேரம் பல பேரு கிணத்துல ஆத்துல விழுந்து செத்து போயிறாளுவ. முரண்டு பண்ணுற பெண்ணை கொன்னு புதைச்சு புடுதான். சில புள்ளையா பித்து பிரமை பிடிச்ச மாரி தெரு தெருவா சுத்துறாவ”.
“தாத்தா என்ன சொல்லுதீய?”
“ஆமாண்டே. யாருக்கிட்ட சொல்லுத . பூனைக்கு யாரு மணி கட்டுததுன்னு தெரியாம தவிச்சிகிட்டு இருக்கேன்”.
“தாத்தா இவனை சும்மா விடக்கூடாது. விரட்டி விரட்டி அடிச்சே கொல்லணும்”.
“ம். நீ எங்க இவனை கொல்லப்போறே”.
அமைதியாக இருந்தான் ராஜ துரை. “ஏற்கனவே செய்யாத கொலைக்கு நாயி மாரி மேக்க பாத்து ஓடி வந்துருக்கான். போலீஸ் வேறே துரத்திக்கிட்டு இருக்கு. மேலும் நமக்கு இந்த சரவல் தேவையா?” அவன் மனது சொன்னது.
“இந்த நாய் காவல் காக்கேன்னு சொல்லி ஏழை பொம்பளை பிள்ளையலுக்கு செய்ற துரோகம் மகராணிக்கு தெரிஞ்சுது இவனை தூக்கில போட்டு புடுவாவ. ஆனா யாரும் சொல்லலை”.
“தாத்தா இவனுக்கு பொண்டாட்டி பிள்ளைய இல்லையா?”.
“பொண்டாட்டி இருக்கா பெரிய வல்லரக்கி. புருஷனை பத்தி யாராவது தப்பா சொன்னா அவ்வளவுதான் ராட்சசி மாறி ஆடிப்புடுவா. அதனால அவ கிட்டே யாரும் சொல்ல மாட்டவ”.
“ஏன் மத்த காவல் காரவியளுக்கு இது தெரியாதா?”
“தெரியும். ஆனா இவன் மகராணிக்கு சொந்த காரன். அதனால ஒண்ணும் செய்ய முடியலை. ஆனால் என்னைக்காவது ஒருநாள் இவன் கொட்டம் அடங்கும். கொட்டம் அடக்க ஒருத்தன் வருவான்னு நானும் வேண்டாத தெய்வம் இல்லை”.
“தாத்தா கவலை பாடதீங்க. நான் எதுக்கு இங்க வந்தேன். என் வந்தேன்னு தெரியலை. ஆனா இவனை நான் சும்மா விட மாட்டேன் . இவனை அடிச்சி நடு ரோட்டில இழு இழுன்னு இழுத்துட்டு வந்தா தான் என் கோபம் அடங்கும்”.
“கிழிச்சே. இன்னைக்கு கூட விடிலி காட்டு ல நம்ம பனையேறுத பொன்னு ஒருத்தியை கண் வச்சிருக்கானுவ”.
“தாத்தா”.
“அதான்டே அந்த பிள்ளைய இன்னைக்குத்தான் பாத்துருக்கான். அவளை சாயாங்காலம் தூக்க திட்டம் போட்டு இருக்கான்”.
“தாத்தா என்ன சொல்லுதீய”
“ஆமாம். அவன் அடியாளுவ ரெண்டு பேரு பேசிக்கிட்டு இருந்தானுவ. இன்னைக்கு ராத்திரி அவளை தூக்கப்போறானுவ”.
“அய்யோ தாத்தா. அவ என் அக்கா”.
“ஏடேய் என்ன சொல்லுத”.
“ஆமாம் தாத்தா. என்னை அரண்மனைக்கு வேலைக்கு சேத்து விட்டதே அவத்தான். இவன் ஒரு மாதிரியா அவளை பாத்து முழிச்சான். அப்பவே எனக்கு கோபம் கோபமா வந்துச்சு. அவன் என் அக்கா மேலே கையை வச்சான். அவன் கையை ஒரே துண்டா வெட்டி போட்டுட்ட ஜெயிலுக்கு போயிருவேன்”.
தாத்தா அமைதியா இருந்தாரு.
“தாத்தா வாருமே உடனே நாம ஊருக்கு போவோம்”.
தாத்தா வேகமாக வெளியே வந்தார். மாட்டுக்கு தண்ணீர் காட்டனும், வைக்கோல் வைக்கணும். அதுக்கப்புறம் தான் வண்டி பூட்ட முடியும். இவன் அவசரத்துக்கு உடனே வண்டி பூட்ட முடியாது.
அமைதியாக இருந்தார்.
“என்ன தாத்தா அமைதியா இருக்கேரு. வாரும் ஊருக்கு போவோம்.”
“ஏடேய் என்னால முடியாது. அப்படியே வண்டி பூட்டி நாம போனாலும் உன் அக்காளை காப்பாத்த முடியாது”.
“முடியும் தாத்தா என்னால முடியும் தாத்தா”.
மறுநிமிடம் அவரை எதிர்பார்க்காமல் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.
சங்கரன்கோயிலில் இருந்து அந்த வெறி கொண்ட காளை திமிறி ஓட ஆரம்பித்தது.
தனது கண் முன்னால் கற்பகம் வந்தாள். “ஏலேய் தம்பி உனக்கு வேலை வாங்க அரண்மனைக்கு வந்தேன். இந்த பயலுவ கண்ணுல பட்டுட்டேன். நீ மட்டும் வராம இருந்தா நான் சந்தோசமா என் புருஷன் கூட வாழ்ந்து இருப்பேன்”னு சொன்னாள்.
“விட மாட்டேன் அக்கா. உன்னை அவன் தொட விட மாட்டேன். உன்னை சீரழிய விட மாட்டேன் அக்கா”.
மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட 1 மணி நேரத்தில் சிற்றாற்றங்கரைக்கு ஓடி வந்திருந்தான். அங்கே அக்கா இருந்தாள்.
“அப்பாட” என பெருமூச்சி விட்டான். ஆனாலும் அவனுக்கு பதட்டம் தணியவில்லை.
“அக்கா அக்கா” என கூப்பிட்டான்.
அவள் சத்தமில்லாமல் இருந்தாள். விடிலிக்குள் நுழைந்து பார்த்தான்.
அக்கா சலனமற்றவளாக இருந்தாள்.
“அக்கா. என்ன ஆச்சி ஏன் ஒரு மாதிரி இருக்க”.
“ஒண்ணுமில்லை லே”. தன் கண்ணை முந்தானையை எடுத்து துடைத்துக்கொண்டாள். எழுந்தாள். “ஏன் போன வேலை முடிஞ்சிட்டா” என்று கேட்டாள்.
“ம். முடிஞ்சிட்டு”.
இருவரிடமும் மீண்டும் மயான அமைதி.
“அக்கா ஏன் ஒரு மாரி இருக்க. உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே”.
“இல்லை”. ஒரு வார்த்தையில் சொன்னாள்.
“எங்கேயோ கிளம்பி இருக்க மாறி இருக்கு”.
“ம். டவுணுக்கு” .
“ஏன் ?”.
“ஒரு ஜோலி”.
“நானும் உன் கூட வரவா”.
“வேண்டாம். நான் மட்டும் போயிட்டு வாரேன்”.
“இல்லைக்கா. நானும் வாரன்”.
“ஏலே சொன்னா கேட்க மாட்ட”.
விடிலிக்குள் வந்தாள்.
அவளை பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. இருப்பதிலேயே நல்ல நூல் சேலை ஒன்றை கட்டியிருந்தாள். இதுபோல அவள் என்னைக்கும் சேலை கட்டியதில்லை. நன்றாக தலை வாரி இருந்தாள். தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள். அதுவும் வித்தியசமாக இருந்தது. விடிலிக்குள் இருந்து பெரிய வெண்கல தூக்கு சட்டியை தூக்கினாள்.
அதற்குள் கள்ளு பதனீர் வைத்திருப்பாள் போல அந்த நெடி இவன் மூக்கு வரை அடித்தது.
“என்ன இது நம்ம அக்கா இப்படி மாறிப்போயிட்டா. இவளுக்கு புத்தி கெட்டு போச்சா என்ன?”.
வெளியே நடந்து வந்தாள். இவனை எதிர்பார்க்காமல் மேற்கு நோக்கி நடந்தாள்.
“அக்கா கொஞ்சம் நில்லு”
“என்னை மறிக்காதலே”
“ம். நீ போவக்கூடாது”.
“எதுக்கு?”
“எனக்கு எல்லாம் தெரியும்”.
“என்ன தெரியும்?”
“உன்னை சீரழிய விட மாட்டேன்”.
அவன் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்தது. ஏற்கனவே கொதித்து இருந்த அவன் கண்கள் மிகவும் சிவப்பாக மாறி இருந்தது.
ம் தெரிந்து விட்டது. இவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது. அருகில்இருந்து பனை மூட்டில் உட்கார்ந்தாள். அதன் பிறகு அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. ஓ வென்று அழுதாள். அவள் அழுகை அந்த விடிலி காடு முழுவதும் எதிரொலித்தது.
ராஜதுரையால் அதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
“அக்கா. அக்கா” கற்பகத்தின் தலை மூடியை கோதிய படி ஆறுதல் சொன்னான். அவளை ஆறுதலாக சேர்த்து அணைத்தான்.
“அக்கா என் உயிரே போனாலும் சரி. உன்னை காப்பாத்துவேன். உன் கற்புக்கு என்னைக்கும் பங்கம் வர விட மாட்டேன். என்னை நம்பு”.
அவள் அழுகை மேலும் பெரிதானது.
சரி அழுது தீர்க்கட்டும் என அமைதியாக இருந்தான்.
சிறிது நேரம் கழித்து பேசினாள் கற்பகம்.
“லே ராஜதுரை நீயே என்ன நிலையில இங்க வந்து இருக்க எனக்கு தெரியும்”.
தேம்பிய படியே சொன்னாள்.
“அக்கா”. ஆச்சரியத்துடன் சொன்னாள்.
கற்பகம் கண்ணீர்விட்டாள். அதன் பிறகு பேச ஆரம்பித்தாள்.
“நேத்து சுரண்டை சந்தையில நம்ம ஊரு அக்தார் போத்தியை பாத்தேன். அவரு உன்னை பத்தி சொன்னாரு. ஆனா நீ இங்க இருக்கன்னு நான் சொல்வே இல்லை”.
அ¬தியானான் ராஜதுரை.
“ஊருல ஒரு கொலையை செஞ்சிட்டு ஊரை விட்டே ஓடிப்போயிட்டேன்னு அவரு சொன்னாரு. நீ மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க பட்ட பாட்டையும் சொன்னாரு. நீ அவனை கொலை பண்ணியிருக்க மாட்ட அந்த அய்யருத்தான் உன்னை அந்த கொலை பலியில மாட்டி வுட்டுருப்பான்னு சொன்னாவ”.
ராஜதுரை கண்ணீல் இருந்து கண்ணிர் வந்தது.
“நேத்தில இருந்து உன்னை நா எப்படி போலிசில இருந்து காப்பாத்தபோறேன்னு நினைச்சி கிட்டு இருத்தேன். இன்னைக்கு காலையில விசயம் இப்படி ஆகி போச்சு”.
ராஜதுரை கையை பிடித்தாள் கற்பகம்.
“நான் உன்னைய எப்படி காப்பாத்தபோறேன்னு தவிச்சிக்கிட்டு இருக்கேன். ஆனா நீ என்ன காப்பாத்த போறீயாக்கும்?”
கற்பகம் அழுதபடியே சிரித்தாள்.
“நீ. உன் ஜோலியை பாரு. சும்மா இரு. அவனை கடவுள் கேப்பான்”. அக்காள் முகத்தினை பார்த்தான். அவள் முகம் அழுது சிவந்து இருந்தது.
ஆகா. இவள் ஏற்கனவே அழுது அழுது கண் சிவந்து போய் இருக்கிறாள்.
“அக்கா. அவனை கடவுள் கேப்பான்னு நான் கைகட்டிட்டு இருக்க முடியாது”.
“ஏற்கனவே நீ போலீஸ் கேசுன்னு அலைஞ்சிக்கிட்டு இருக்க. போலிசுக்கு பயந்து ஊர் ஊரா ஒழிஞ்சிகிட்டு அலையுற. உன்னை எப்படி கஷ்டப்படுத்த முடியும்”.
“அதுக்காக என் கண் முன்னால உன்னை சீரழிய விடமாட்டேன் அக்கா”.
“ஏலே ராஜதுரை எனக்கு கெடு விதிச்சிட்டானுவ. நான் கள்ளு பயனியோட இன்னைக்கு அவன் கூட இருக்கனும். இல்லாட்டி உங்க மச்சானை கொன்னுபுடுவானுவ. உன்னையும் கண்ட துண்டமா வெட்ட திட்டம் போட்டுருக்கானுவ. உங்க இரண்டு பேரையும் காவு கொடுத்துட்டு இந்த உடலு வாழுனுமா? அதான் என் உடல் போனாபோவுதுன்னு முடிவு பண்ணிட்டேன். உங்களுக்கு ஒரு குறைவும் வரக்கூடாது. மண் திங்கற உடலு. அந்த கருவாய் பய என்னிடம் என்னமும் பண்ணிட்டு போறோன்”.
விரக்தியாக பேசினாள்.
“யக்கா என்ன சொல்லுத”
அழுதாள் கற்பகம். “உண்மைதான்லே சொல்லுதேன். உங்க இரண்டு பேருடைய உசிருத்தான் முக்கியம். என் உடலா முக்கியம்”.
“அக்கா அறிவு கெட்ட தனமா பேசாத. உன் உடலை நாசமாக்க விட்டுட்டு மனங்கெட்டு போயி நாங்க உயிர் வாழுவோமுன்னு நினைச்சியா. அவனை கண்டந்துண்டமா வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்கு போனாலும் போவமே தவிர உயிர் வாழுவோமுன்னா நினைக்க”.
மீண்டும் அமைதியாக இருந்தது.
“யக்கா உனக்குதான் ராணியை தெரியுமே?. நீ மகாராணி கிட்ட சொல்லு வா. அரண்மனைக்கு போவோம்”.
“விசாரிச்சி பாத்துட்டேன். ராணி வரி வசூல் விசயமா குத்தாலத்துக்கு போயிட்டாவ. இன்னைக்கு ராத்திரி அவிய அரண்மனையில இல்லை”.
“அய்யோ. அதுக்காக அவன் கிட்ட போய் மாட்ட முடியுமா? பேசமா அவனை கண்டம் துண்டமா வெட்டி போட்டுட்டு ஜெயிலுக்குபோறேன் அக்கா. செய்யாத குத்தத்துக்காக என்னை கொலையாளின்னு சொல்லுதானுவ. பேசாம ஒரு கொலையை செஞ்சுட்டு நான் ஜெயிலுக்கு போறேன். இரண்டு கொலைக்கும் சேத்து என்னை தூக்கிலத்தான் போடப் போறனுவ. போட்டா போடட்டும்”.
விடிலி காட்டுக்குள் சென்றான்.
அங்கே பெரிய பாளையருவாள் ஒன்று இருந்தது.
இன்று காலையில் தான் மச்சான் தீட்டி வைத்திருந்தார். புதுசா இரண்டு பனை அருக்கணும். அதுக்காத்தான் இந்த அருவாளை ஒழுங்கு படுத்தி வைச்சிருந்தார்.
அந்த அருவாளுடன் வெளியே வந்தான்.
அதை பார்த்து அதிர்ந்து நின்றாள் கற்பகம்.
“ஏலே தம்பி என்ன காரியம் செய்ய போறே”
“யக்கா. இரு இந்த அருவா பாளையை மட்டும் அறுக்காது. தப்பு பண்ணுதவன் தலையை அறுக்கும்”.
கண்கள் சிவக்க வெளியே வந்தான்.
“அதுவும் நாம உண்டு நம்ம ஜோலி உண்டுன்னு போயிக்கிட்டு இருக்க நம்ம கிட்ட சீண்டி பாக்காணுவ. சும்மா விட மாட்டேங்கா”.
“ஏலே தம்பி வேண்டாமுல்லே”. கற்பகம் ராஜதுரை காலில் விழுந்தாள்.
என்ன செய்ய என்று தெரியாமல் தவித்தான் ராஜதுரை.
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவார்)


