புதுச்சேரியில் நடைபெற்ற 28 வது இளையோர் தேசிய எரிபந்து போட்டியில் 2023-24, தமிழ்நாடு சார்பாக தூத்துக்குடி கமாக் உயர்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி பிளஸ்சி ஷேரன் ரோஸ் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
தேசிய இளையோர் எரிபந்து போட்டி புதுச்சேரியில் உள்ள ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 4, 5, 6 தேதிகளில் நடைபெற்றது. சிறுவர் பிரிவில் 24 மாநில அணிகளும் சிறுமியர் பிரிவில் 20 அணிகளும் பங்கு பெற்ற இந்த தேசிய அளவிலான போட்டிகளை புதுச்சேரி மாநில விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு அணி கர்நாடகா, சத்தீஸ்கர் மாநில அணிகளை வீழ்த்தி பின்னர் ராஜஸ்தான் அணியை கால் இறுதியில் வென்றது. தொடர்ச்சியாக தெலுங்கானா அணியை அரையிறுதியில் வீழ்த்திய தமிழ்நாடு அணி இறுதிப் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் டெல்லி அணி 2:1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டம் கமாக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி பிளஸ்சி ஷேரன் ரோஸ் இடம்பெற்று திறமையை வெளிப்படுத்தினார். இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு அணியினருக்கு கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது. சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய பிளஸ் இசாரம் ரோஸை, தூத்துக்குடி மாவட்ட இளையோர் எரிபந்து கழக அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர் இசக்கிதுரை வாழ்த்தினார்கள்.


