செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். இதில் ஏடிஎஸ்பி கோடிலிங்கம், ஸ்ரீவை டிஎஸ்பி மாயவன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை ஆகியோர் பங்கேற்று பேசுகையில்,
மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி எவ்வித பிரிவினையும் இன்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், பாகுபாடு பார்க்க கூடாது, சாதி மத உணர்வுகளை மறந்து ஒற்றுமையுடன் பழக வேண்டும், சிறு பிரச்சனை என்றாலும் உங்களுக்குள் அடித்துக் கொள்ளக் கூடாது எங்களிடம் தகவல் சொல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், பகைமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது, படிப்பு முடிந்தவுடன் எத்தனையோ வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன, செல்போன்களில் வேலை வாய்ப்பு போன்ற பதிவுகள் அதிகமாக இருக்கின்றது அதனை தேடுங்கள் நன்மைகளை தேடுங்கள் செல்போனில் சாதி மத உணர்வுகளை தூண்டாதீர்கள், உங்களது வாழ்க்கை கெட்டுப் போய்விடும், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதைகளை தேடுங்கள் என்றனர்.
பின்னர் மாணவர்கள் பேராசிரியர்கள் காவல்துறையினரோடு இணைந்து நாம் நமக்காகவும் நமது சந்ததியினருக்காகவும் சாரி மத வேற்றுமை இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம், பழிக்கு பழி என்ற எண்ணம் நீக்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிர் மற்றும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
இந்த மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறையினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


