தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக 50,131 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியத்தொகை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு, சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வூதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதுமட்டும்மல்லாமல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நல்வாய்ப்புகளையும் உதவிகளையும் வழங்கக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்து வருகிறது.
கடந்த 10 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருந்த முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக வழங்கப்படக்கூடிய உதவித்தொகையை, தமிழ்நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தொகையான 1000/- ரூபாயை 1200/- ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி கைம்பெண்கள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், கணவனால் கைவிடப்பட்டிருக்கக்கூடிய ஓய்வூதியத் திட்டம், 50 வயதிற்கு மிகாமல் திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கையிலிருந்து வந்திருக்கக்கூடிய மக்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஓய்வூதியத் திட்டங்கள் 1962ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றைக்கு மாதத்திற்கு ரூபாய் 20/- அன்றைய சூழ்நிலையில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு இந்தத் திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது. 1962ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை பல்வேறு காலக்கட்டங்களில் இந்த ஓய்வூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1000/- மாத ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
அதுமட்டும்மல்லாமல், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, முன்னேற்றத்துக்கு தனியாக துறையை உருவாக்கி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1,000/- ரூபாய் ஓய்வூதியத்தை 1,500/- ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு, கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,500/- வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 30 இலட்சத்து 55 ஆயிரத்து 857 பயனாளிகள் இந்த மாதாந்திர ஓய்வூதியங்களை பெற்று வருகிறார்கள். இந்த ஓய்வூதியம் உயர்வினால் கைத்தறித் துறையில் இருக்கக்கூடிய திட்டங்களில் பதிவு செய்திருக்கக்கூடியவர்கள், தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கக்கூடிய பல்வேறு வாரியங்களின் உறுப்பினர்கள் பயன்பெறுகிறார்கள். அதேபோல, கட்டுமானத் தொழிலாளர்கள், அதாவது கட்டிடத் தொழிலாளர் வாரியத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும் பயன்பெறுகிறார்கள்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக இன்றைய தேதியில் 50131 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியத்தொகை பெற்று பயன்பெற்று வருகிறார்கள்” என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


