தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம் அப்பன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(73). விவசாயியான இவரது மனைவி கந்தம்மாள். இவர்களுக்கு வீரலட்சுமி, மீனாட்சி என்ற இரண்டு மகள்களும் கணேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சொக்கலிங்கம் வீட்டில் இருக்கும்போது அங்கே வந்த இரண்டு பேர் அவரை அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே சொக்கலிங்கம் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சொக்கலிங்கம் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சொக்கலிங்கத்தின் தந்தை வைகுண்டராமனுக்கு ஆவுடையாச்சி, பொன்னம்மாள் என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த இரு குடும்பமும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சொத்து பிரிப்பது குறித்து பேசிய போது ஏற்பட்ட தகராறில் வைகுண்டராமனின் பேரன் பூல்பாண்டியும் உடன் வந்த மற்றொருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த நிலையில் பூல்பாண்டியையும் அவருடன் வந்த சாமிநாதன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


