ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா….
இந்த செய்தியை கேட்கும் போது இது எத்தனை பேருடைய கனவு, உழைப்பு மற்றும் வியர்வைத்துளியில் இன்று இந்த காரியம் பசுமையாய் துளிர் விட்டுள்ளது என்பதை நாம் சற்று நன்றியுடன் சிந்தித்து பார்த்து நன்றி கூற வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய தொல்லியல் துறை மூலம் அமைக்கப்படும் மிகப்பிரமாண்டமான அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமையப்பெற்றுள்ளது. இதேபோல் இந்தியாவில் இன்னும் ஐந்து இடங்களில் அமைக்கப்படவுள்ளன.
ஒரு வரலாற்று ஆசிரியராகவும், ஒரு தொல்லியல் ஆய்வாளராகவும், உள்ளூர்மாணவா்களுக்கு ஆதிச்சநல்லூர் பற்றியும் அதன் பெருமைகளை பற்றியும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொடுப்பவன் என்கின்ற முறையில் நேற்றைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு அடிகோலியவா்களுக்கு நன்றி
பொதுவாக ஒரு தொல்லியல்களம் என்று ஒன்றை எடுத்துக்கொண்டால் அது எந்த வகையை சார்ந்தது. என்பதை முதலி்ல் கண்டறிய வேண்டும். அவைகள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதையும் ஆராய வேண்டும்.
அந்த வகையில் ஆதிச்சநல்லூரில் உள்ள தொல்லியல்களமானது இரும்பு காலத்தைச் சார்ந்த ஒரு தொல்லியல் களமாகும். இந்தியா முழுவதும் இதே போல் பல தொல்லியல்களங்கள் இருந்தாலும் ஒரு சில தொல்லியல் களங்கள் மட்டுமே அதன் காலகணிப்பின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் மயிலாடும் பாறை, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற தொல்லியல் களங்கள் இன்று அனைவராலும் ஆய்வுநோக்கில் பேசப்படுகின்றது.
சமீபகால தொல்லியல் அகழாய்வுகளை பொருத்தவரையில் கீழடி அகழாய்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கீழடி அகழாய்விற்கு பின் தான் தமிழகத்தில் தொல்லியல் பற்றிய விழிப்புணா்வானது அனைவருக்கும் ஏற்பட்டது என்று கூறலாம். கீழுடிக்கு முன் அல்லது கீழடிக்கு பின் என்ற ஒரு மைல்கல்லை தொல்லியலில் கீழடி அகழாய்வுகள் ஏற்படுத்தியுள்ளன.
ஒரு தொல்லியல் களத்தில் அகழாய்வுகள் நடைபெறுவதற்கு முன்பு மேற்பரப்பு கள ஆய்வுகள் பலரால் நடைபெற்றிருக்கும். அதன்பின் அகழாய்வுகள் நடைபெற்றும்.
அகழய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களை வேறு இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிபடுத்துவது என்பது ஒரு முறை அதன்படி பார்த்தால் அதை அருங்காட்சியகம் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக உள்ளதை உள்ளவாறு கண்களுக்கு காட்டுதல் என்ற அடிப்படையில் அகழாய்வு குழிகளில் கிடைக்கும் தொல்பொருட்களை வெளியே எடுத்து காட்சிபடுத்தாமல் அதை கள அருங்காட்சியகமாக ஏற்படுத்துவது ஒரு முறை. இதை சைட் மியுசியம் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
உதாரணமாக கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் வைத்து சைட் மியுசியத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு திறக்கப்பட்டுள்ளது.
ஐகானிக் மியுசியம்
ஆனால் ஆதிச்சநல்லூரில் தற்பொழுது அடிக்கல் நாட்டியிருப்பது சைட்மியுசியம் மட்டும் அல்ல ஐகானிங் சைட் மியுசியம். சா்வதேச தரம்வாய்ந்த மியுசியத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்துள்ளது. எவ்வளவு பெரிய விசயம் நடந்துள்ளது, இதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இந்த ஐகானிக் மியுசியம் மூலம் உலகில் எந்த மூலையில் இருந்தும் இரும்பு கற்காலத்தை சார்ந்த தொல்லியல் படிப்புகளை படிக்கும் ஆய்வு மாணவா்கள், ஆய்வாளா்கள், பேராசிரியா்கள் மற்றும் தொல்லியல் அறிஞா்கள் மற்றும ஆர்வளா்கள் என பலரும் இனிவருங்காலங்களில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவே இந்த தொல்லியல் களத்தை பற்றி படிக்க முடியும்.
இதன் மூலம் நேரில் இங்கு வந்து படிப்பது போல படிக்கலாம். அல்லது தங்களது ஏசி வகுப்பறையில் இருந்து ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகளை எடுக்கலாம்.
இதுவரை வெறும் காடாகவும் மேடாகவும் இருந்த இந்த இடம் இன்று உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. உள்ளூர் மாணவா்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் ஊரின் சிறப்பு பற்றி தற்பொழுது தெரிந்து கொண்டுள்ளனா்.
தொல்லியலுக்கு என்று சர்வதேச தரம் வாய்ந்த தனி மத்திய தொல்லியல் பல்கலைக்கழகம் இனிவருங்காலங்களில் இங்கு ஏற்படாலம்.
மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இந்த தொல்லியல்களத்தை(பொக்கீசத்தை) இன்னும் பல லட்சங்கள் ஆண்டுகள் வரை பாதுகாத்து நமது வருங்கால தலைமுறையினருக்கு அப்படியே கொண்டு செல்லுகின்ற ஒரு பயணத்தின் தொடக்கமாகத்தான் நாம் இதை கருத வேண்டும். இது சாதாரணமாக காரியம் அல்ல.
அறிவியல் வளா்ச்சியின் உச்சத்தில் இன்று நாம் இருக்கின்றோம். ஆர்டிபிசல் இன்டலிஜென்ட்(AI) யுகத்தில் நாம் வாழுகின்றோம். இனி வருங்காலத்தில் இந்த இடத்தின் முக்கியத்தை பல விதங்களில் பல AI க்கள் எடுத்து செல்லலாம்.
சமீப காலமாக தமிழகத்தில் ஏலியன்ஸ் பற்றிய செய்திகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றது. ஏலியன்ஸ் என்ற வேற்று கிரகவாசிகள் பற்றி ஆய்வுகளும் உலகில் பலர் செய்து வருகின்றனா். அந்த ஆய்வுகள் வெற்றிபெற்று ஏலியன்ஸ்சுக்கும் மனிதர்களுக்கும் தகவல் தொடர்பு பரிமாற்றங்கள் ஏற்படும் காலங்கள் வெகு தொலையில் இல்லை. அவ்வாறு தெடார்பு கிடைக்கும் போது இந்த பூமியில் மனித இனம் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனா் என ஏலியன்ஸ் இந்த ஐகானிக் சைட் மியுசியத்தை தொடா்பு கொண்டு படிக்கலாம்.
இன்று ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகத்திற்கு அடிக்கோல் நாட்டு விழா என்ற செய்தியை போல நாளை ஆதிச்சநல்லூரில் தரையிரங்கினர் ஏலியன்ஸ் என்ற செய்திகளும் வரலாம். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. ஆதிச்சநல்லூரில் கடந்த வாரம் ஒரே முதுமக்கள் தாழியில் இரு மனித மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டன் என்ற செய்தியை பார்த்ததும் புறநானூற்று பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது,
“கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே” என்று ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு.
பாலுக்கான பொருள்
“வண்டியின் ஆரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லி, சக்கரம் செல்லுமிடமெல்லாம் செல்வதைப் போல, இந்தத் தலைவனைத் தவிர வேறு உலகம் தெரியாமல் வாழ்ந்துவிட்டேன். அவனை இழந்த பிறகு நான் தனியே வாழ்வது எப்படி? ஆகவே அவனுடன் சேர்த்து எனக்கும் ஒரு இடம் அந்தத் தாழியில் இருக்கும்படி அதை அகலமாகச் செய்வாயாக”
என்பதுதான் இந்தப் பாடலின் பொருள். முதுமக்கள் தாழியில் வைத்து இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தையும், அதில் ஆணையும் பெண்ணையும் சேர்த்து புதைக்கும் வழக்கத்தையும் இந்தப் பாடல் சுட்டிக்காட்டுகிறது.
யாருக்கொல்லாம் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஜொ்மன் நாட்டு ஜாகோர்….
முதலில் நான்(1976) பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே 1876 ல் ஆதிச்சநல்லூா் தொல்லியல் களத்தை கண்டறிந்த ஜொ்மனி நாட்டைச் சார்ந்த ஜாகோர் அவர்களுக்கு நன்றியை சொல்ல வேண்டும்.
இவர் தான் முதலில் இங்கு அகழாய்வு செய்து பல பொருட்களை ஜொ்மனிக்கு கொண்டு சென்றார். அவ்வாறு ஜொ்மனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள ஆயிரகணக்கான தொல்பொருட்களை ஜொ்மனியில் இருந்து ஆதிச்சநெல்லூருக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது வலுபெற்று வருகின்றது. ஜாகோருக்கு முன்பும் பலா் செய்திருக்கலாம், அதற்கான ஆதாரங்கள் தேடப்படுகின்றன.
இதில் ஒன்றை நாம் நன்றாக கவனிக்க வேண்டும். 1876 ல் இந்தியா இங்கிலாந்தின் வசம் இருந்த ஒரு காலனி நாடு. ஜொ்மனியும் பிரிட்டனும் நிலவியல் அடிப்படையில் அருகில் இருந்த நாடுகளாக இருந்தாலும் கொள்கை அடிப்படையில் இருநாடுகளும் வெவ்வேறு கருத்துக்களை கொண்ட நாடுகளாக இருந்தன. முதலாளித்துவமும் நாஸிசமும் இணைந்து போகாததால் தான் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் போது இங்கிலாந்தின் எதிர் அணியில் ஜொ்மனி இருந்தது. அந்த ஜொ்மனியில் இருந்து ஒருவா் இங்கிலாந்தின் காலனி நாடான இந்தியாவிற்கு வந்து ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து தொல்பொருட்களை எடுத்துச்செல்கிறார். இவா் ஆதிச்சநல்லூர் வருவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்திய தொல்லியல் துறை என்ற ஒரு துறையை 1861 அலெக்ஸாண்டா் கன்னிங்ஹாம் தனது தலைமையில் உருவாக்கினார். இந்த காலகட்டத்தில் தான் ஆதிச்சநல்லூர் பற்றியும் ஜாகோரின் அகழாய்வு பற்றிய செய்திகளும் வந்தன.
அலக்ஸாண்டா் ரே
தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஆதிச்சநல்லூின் முக்கயத்துவத்தை ஜாகோரின் வருகையால் கண்டுகொண்ட இந்திய தொல்லியல்துறையினா் அதன் பின் அலெக்ஸாண்டா் ரே மூலம் அகழாய்வுகளை இங்கு செய்தன. அதன்பின் சத்திய மூர்த்தி தலைமையிலும் அகழாய்வு நடைபெற்றன. தற்பொழுது இந்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல இயக்குநா் அருண்ராஜ் தலைமையில், முனைவா் யத்தீஸ்குமார், முத்துக்குமார் மற்றும் இந்திய தொல்லியல் அலுவலா்கள் ஆகியோர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வ செய்து அருங்காட்சியகம் அமைக்கும் பணியினை சிறப்பாக செய்து வருகின்றனா்.இந்திய அரசின் பணி. இந்த பணியை வெறும் அரசுப்பணியாக பார்க்காமல் இந்திய தொல்லியல் துறை பணியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணா்வோடு இன்றுவரை இரவு பகல் பாராமல் கண்தூங்காமல் அப்பகுதியிலுள்ள அனைத்து கிராமமக்களின் நன்மதிப்புகளையும் பெற்று இந்த அருங்காட்சியத்திற் அக்கல்நாட்டு விழாவை செய்துள்ளனா். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நேற்றைய விழாவில் கலந்து கொண்ட இந்திய தொல்லியல் துறையின் டைரக்டா் ஜெனரல்(புது டெல்லி) கிஷோ்குமார் பாசா , துணை பொது இயக்குநா் எஸ்.கே. மஞ்சுள், இன்னும் பலபேருக்கு நன்றிகளை சொல்ல நாம் கடமைபட்டுள்ளோம்
எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசு
நான் பள்ளிகளில் படிக்கும் காலங்களில் ஆதிச்சநல்லூரைப்பற்றி ஒரு வார்த்தையில் பாடபுத்தகத்தில் படித்திருக்கிறேன். அது எனது ஊருக்கருகே உள்ள ஆதிச்நல்லூர் என்று எனக்கு அப்போது தெரியாது. அதன் பின் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் போது சத்தியமூா்த்தி அவா்கள் நடத்திய அகழாய்வுகள் பற்றியும் தெரியாது. தெரிந்த இருந்தால் அப்போது சென்று பார்த்திருப்பேன். அந்தக காலகட்டங்களில் செய்தியாளா்களையோ அல்லது பொதுமக்களையோ பார்வைக்காக அனுமதிக்கப்படவில்லை என்ற தகவலை இப்போதும் பலா் சொல்ல கேள்விப்பட்டேன். அன்றும் இன்றும் ஆதிச்சநல்லூரைப்பற்றி அனைவரும் தெரிந்ததற்கு முதற்காரணமாக இருந்தவா் எழுத்தாளா் அண்ணன் முத்தாலங்குறிச்சி காமராசு அவா்கள். அவா்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
செய்தியாளா்களுக்கு
ஆதிச்சநல்லூரில் என்ன நடக்கிறது என்பதை தனது செய்திகளின் வாயிலாக வெளிக்கொண்டு வந்த செய்தியாளா் தம்பி சுடலைமணி அவா்களுக்கும் மற்ற அனைத்து செய்தியாளா்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு தொல்லியல்துறை
ஆதிச்சநல்லூர் தொல்லியல்களம் கடந்து வந்த பாதைகளில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் கடந்த ஆண்டுகளில் இயக்குநா் பாஸ்கா் மற்றும் லோகநாதன் ஆகியோர் கடந்த 2021 ஆண்டுகளில் அகழாய்வுகளை நடத்தி பல்வேறு தொல்பொருட்களை கண்டறிந்துள்ளனா். அவைகளை காட்சி படுத்தியும் வருகின்றனா். அவா்களுக்கும் நன்றிகளை சிவகளை தொல்லியல்களத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைய காரணமாக இருந்த மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவா்களுக்கும் மாண்புமிக இந்திய நிதிஅமைச்சா் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும், அருங்காட்சியகத்திற்கு நிலங்களை தானமாக தந்து உதவிய ஆதிச்சநல்லூர் கிராம மக்களுக்கும் பஞ்சாயத்து தலைவா் பார்வதி சங்கா் கணேஷ் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியா் மருத்துவா் செந்தில்ராஜ் அவர்களுக்கும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினா் திருமதி கனிமொழி அவா்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
ஆ.மாணிக்கம்
சிவகளை தொல்லியல் கழகம்,
சிவகளை-628753


