தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்நாதன்(43). இவர் ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை தனது முறுக்கு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரது கடைக்குள் புகுந்த செந்தில்நாதனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்துள்ளார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதன்பின்னர் அவரது உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


