ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்(8° 37’ 47.6" N; 77° 52’ 34.9"E) தமிழ் நாட்டின் மிகப்
பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம்
திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், திருநெல்வேலியிலிருந்து
திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது.
114 ஏக்கர் பரந்து விரிந்த இவ்விடத்தில் தாழிகள் மண்டிக்கிடப்பதால் இதனை
தாழிக்காடு என்று மக்கள் அழைத்தனர். தாமிரபரணி ஆற்றுக்கும் வெள்ளூர் ஏரிக்கும்
நடுவில் இப்பறம்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பறம்பு சீனிக் கல் பாறைகள்
(Quartzite) நிரம்பிய மேட்டுநிலம் ஆகும்
உலகிலுள்ள தொன்மையான நாகரிகங்கள் எவ்வாறு வெளிப்பட்டதோ அதேப்போல
மனித முயற்சியின்றி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்த போது ஆதிச்சநல்லூர்
பறம்பு குத்தி கிழிக்கப்பட்டு முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. அப்போது நெல்லை
மாவட்ட சிர்திருத்த திருச்சபையின் பேராயராக இருந்த கால்டுவெல் முதுமக்கள்
தாழிகளைப் பார்த்த உடன் அது கிறிஸ்த்துவுக்கு முந்தய நாகரிகம் என்று
கண்டுகொண்டார்.
இந்தியாவில் முதன் முதலில் அகழாய்வு செய்யப்பட்ட இடம்
ஆதிச்சநல்லூர் 1876. இதன் பிறகே சிந்து வெளி நாகரிகம் அகழாய்வு செய்யப்பட்டது.
இதுவரை இரும்புக்காலம் என்று சொல்லப்பட்டுவந்த ஆதிச்சநல்லூர் சமீபத்திய ஆய்வு
முடிவுகளின் படி உலோகக் காலம் என்று தெரிய வந்துள்ளது -3000 – 5000 வருடங்கள்
( CHALCOLITIC AGE )
ஆதிச்சநல்லூரை உள்ளூர் மக்கள் “தங்கப்பறம்பு” என்று அழைக்கின்றனர். 2004
அகழாய்வில் ஆதிச்சநல்லூர் வெறும் இடுகாடு மட்டுமல்ல வரலாற்றுக்கு முந்தைய
கனிமச்சுரங்கம் என்று தெரியவந்துள்ளது. செம்பு, துத்தநாகம், ஈயம் போன்ற
கலவைகள் ஹரப்பா நாகரிகத்தைப் போலவே ஆதிச்சநல்லூரில் மட்டுமே
கிடைக்கிறது என்று புவியியலாளர்கள் உறுதி செய்கின்றனர். இந்தக் கனிமச்சுரங்கச்
செயல்பாடு 1500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்றிருக்கிறது
தமிழகத்தில் பொன் மற்றும் வெண்கலம் அதிக அளவில் கிடைத்த இடம்
ஆதிச்சநல்லூரே. தங்கத்திலான நெற்றிப்பட்டம்(Diadem) அதிக அளவில் இங்கு
கிடைத்துள்ளது.இது அரசுருவாக்கத்தின் முதல் கட்டமாகும் . வெள்ளி
கிடைக்கவில்லை.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இப்போது இந்துப் பண்பாடு என்று சொல்லப்படும்
எந்தப் பொருளும் குறிப்பாக பசு உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இல்லை.
தாய்த்தெய்வங்களே கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்த மண்டையோடுகள் அறுத்துத் திறந்து அறுவை சிகிச்சை
செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்க – ஐரோப்பிய நாடுகளில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் இதே வகையான மண்டையோட்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன,
ஆதிச்சநல்லூர் மண்டை ஓடுகள் தென் இந்திய திராவிட மண்டை ஓடுகள் என்றும்
தென் இந்திய பழங்குடிகளின் மண்டை ஓடுகளை ஒத்துள்ளது என அறிவியல்
பூர்வமாக தெரிய வந்துள்ளது.
நிறைய வேளாண்கருவிகள் கிடைத்திருப்பது ஆதிச்சநல்லுரின் விவசாய வாழ்வியல்
முறையை காட்டுகிறது. முதுமக்கள் தாழிகளில்
நெல் உமிகளும் கிடைத்துள்ளன.
மேலும் ஒரு தொகுப்பில் அதிகமான போர்க்கருவிகள் கிடைக்கின்றன. குதிரைகளுக்கு
தேவையான அனைத்து தளவாட பொருட்களும் மொத்தமாக கிடைத்துள்ளன. ஆரிய
வருகைக்கு முன்னரே தமிழகத்தில் ஒரு வகையான மட்டக்குதிரைகள் இருந்துள்ளன
என அறிஞர்கள் கருதுகின்றனர்.
2004 அகழாய்வில் 180க்கும் அதிமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. அவை மூன்று
அடுக்குகளில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது வேறு எங்குமே
கிடைக்கவில்லை.
மேல்நிலை, இடைநிலை, கீழே என்று மூன்று அடுக்குகளில் கிடைத்துள்ளன. கீழே
இருப்பது முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்ததாகவும், மேலே இருப்பவை அதற்கு
அடுத்தடுத்த கால கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் கணிக்கப்பட்டுள்ளன
ஆதிச்சநல்லூரின் தாய்த்தெய்வ சுடுமண் சிற்பம்- சிந்துவெளியின் நடனமங்கையை
ஒத்திருக்கும் இச்சிற்பம் தமிழின் முதல் கதையாடல் சிற்பம் ஆகும். 3500
ஆண்டுகளுக்கு முன்னால் பொறிக்கப்பட்ட இத்தாய்த்தெய்வம் தமிழர்களால்
வணங்கப்பட்டிருக்கவேண்டும்
எழுத்து பிறப்பதற்கு முந்தைய நாகரிகமாக ஆதிச்ச நல்லூர் நாகரிகத்தைக் கருத
வேண்டும். வரலாற்றுக் காலத்திற்கும், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும்
இடையிலிருந்த ஆதிச்சநல்லூர் நாகரிகத்தில் எழுத்து கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை
என்றே கருதப்படுகிறது.
2004ல் மண் அடுக்குகளின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்த அறிவியல் பூர்வமான
அகழாய்வு மூலம் ஆதிச்சநல்லூரின் காலத்தை நாம் தெளிவாகத்
தெரிந்துகொள்ளமுடியும். OSL (Optically Stimulated Luminiscence) காலக்கணிப்பு
முறையினை மணிப்பூர் பல்கலைக்கழகம் செய்தது. பேராசிரியர் கார்ட்டியா 2006 –
இல் இந்திய அறிவியல் மாநாட்டில் அதன் முடிவுகளை வெளியிட்டார். அவர்
வெளியிட்ட காலக்கணிப்பானது ஆதிச்சநல்லூரின் காலமென்பது கிமு 1500 கிமு 2700
வர செல்வதாக அவர் வெளியிட்டுள்ளார்.
கரிமக்காலக்கணிப்பில் கிமு 905 மற்றும் கிம் 696 என்று நமக்குக் கிடைத்துள்ளது,
தமிழகத் தொல்லியல் எச்சங்களில் நமக்குக் கிடைத்த மிகத்தொன்மையான கால
வரையறை இதுவே!
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒரே இடம் தான்; ஒரே
நாணயத்தின் இருபக்கங்கள் தாம். இவை இரண்டிற்கும் இடையில் விடுபட்டிருக்கும்
கண்ணியாக ஆதிச்ச நல்லூரைக் கருதலாம்.
ஜெர்மன் அருங்காட்சியகம், ப்ரெஞ்சு அருங்காட்சியகம் மற்றும் லண்டன்
அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரிலிருந்து தொல்லெச்சங்கள்
எடுத்துச்செல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவையாவும்
மீட்டெடுக்கப்பட்டு, தமிழ் மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டு இப்பொருள்களை
முழுமையாக ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொணரப்படவேண்டும்


