ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் பணிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876-ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இங்கு தற்போது வரை பல்வேறு கட்டங்களாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் பண்டைய தமிழர்களின் வாழ்விடம், இடுகாடு ஆகியவை குறித்து தகவல்கள் கிடைத்தது. அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை தேடும் பணியும் திருக்கோளூர், அகரம் போன்ற பகுதியில் நடந்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகம் உலகிற்கு தெரியவந்தது. இங்கு நடந்த அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த பணி கடந்த 145 ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் 145 வருட கனவு நிறைவடைந்தது.
இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. திருச்சி தொல்லியல்துறை மண்டல இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் தலைமையில் பணி நடந்து வந்தது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கனிமொழி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர்கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அருங்காட்சியகம் அமைய உள்ள மாதிரியை பார்வையிட்ட அவர், மேலும் ஆதிச்சநல்லூர் பரம்பில் பி சைட்டில் ஆன் சைட் எனப்படும் எடுத்த பொருட்களை அந்த குழியில் வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அதை சுற்றி கண்ணாடி பேழைகள் அமைத்து மேல் இருந்து குழியின் உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து அதன் உள்ளே இறங்கி சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து மேடையில் மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ பேசுகையில்,
சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர். அதை நாங்கள் அகழாய்வு பணியில் கண்டுபிடித்துளோம். அதை இந்த உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த உள்ளோம். மேலும் இந்தியாவில் முதன்முறையாக ஆதிச்சநல்லூரில் தான் கண்ணாடி பேழையிலான ஆன்சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது-. உலக வரைபடத்தில் இடம்பெறும் இந்த ஆதிச்சநல்லூர் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமானோர் பார்வையிட வரும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து கனிமொழி பேசுகையில்,
நம் மூதாதையர்கள் வாழ்வியல், பழக்க வழக்கங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு மிகப்பெரிய ஒன்று. அலெக்சாண்டர் ரியா அகழாய்வு மேற்கொண்டு நூறாண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அகழாய்வில் தங்கம் கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு என்பது ஊர்கூடி இழுக்க கூடிய ஒரு தேர். ஒன்றிய அரசும், தமிழக அரசும், எழுத்தாளர்கள் என அனைவரும் சேர்ந்து ஒன்று கூடி இழுத்த தேர் தான் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள். இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலேயே, ஏன் உலகலவில் அனைத்து தரப்பு மக்களும் பாரட்டும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாடு முழுவதும் 5 இடங்களை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தோம். அதில் முதலாவதாக இந்த ஆதிச்சநல்லூர் அருகாட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அலெக்சாண்டர் ரியா காலத்தில் இருந்து தற்போது வரை நடந்த அகழாய்வு பணிகளில் கண்டெடுத்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை இங்கு காட்சிபடுத்தி தற்போதைய மக்கள் அதனை அறிந்து கொள்ளும் விதமாக இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. அலெக்சாண்டர் ரியா காலத்தில் அகழாய்வு மேற்கொண்ட பொருட்களை பெர்லின் போன்ற வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதனையும் இந்தியாவிற்கு கொண்டுவந்து ஆதிச்சநல்லூரில் காட்சிப்படுத்தப்படும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையும் இன்றி போதுமான நிதியை மத்திய அரசு தரும் என்று அவர் உறுதி அளித்தார்.
மேலும் பாரத கலாச்சாரத்தை பாதுகாக்க இந்திய பிரதமர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
ஆதிச்சநல்லூரில் 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக நெல்லும், திணையும் நமக்கு முன்னால் வாழ்ந்த தமிழர்கள் விளைவித்துள்ளனர் என்பதை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் ராமாயண இணைப்பு சுற்றுலாவை அசோக வனம் வரை கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இலங்கையுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கலாச்சாரத்தை மேம்படுத்த 6000 கோடி மதிப்பீட்டில் 77 புதிய திட்டங்கள் 28 மாநிலங்கள் யூனியன் பிரதேசம் என 30 இடங்களில் மத்திய அரசு செயல்படுத்துகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்தை சின்னமாக காட்டும் பொருட்களை கடத்தியும் அனுமதியுடனும் கொண்டு செல்லப்பட்ட 300 க்கும் மேற்ப்பட்ட பொருட்களை மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்ற 5000 க்கும் மேற்பட்ட பொருட்களும் மீண்டும் அதே இடங்களுக்கு கொண்டு வரப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கலாச்சாரத்தை பாதுகாக்க ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் புதிய புதிய திட்டங்களை கொண்டுவர பிரதமர் பல ஆலோசனைகள் வழங்கியுள்ளார். வெள்ளையர் ஆட்சியில் இருந்து சுதந்திர கிடைத்து விட்டது ஆனால் அவர்கள் பதித்து சென்ற விசயங்கள் நம் மனதில் அகலாமல் உள்ளது. 75 ஆண்டுகளாக நாட்டிற்காக போராடிய வீரர்களும் எந்த நினைவிடமும் இல்லாமல் இருந்ததை மாற்றி இந்தியா கேட் அருகே நினைவு சின்னம் பிரதமரால் அமைக்கப்பட்டது. பல யுகங்களாக உள்ள பாரதத்தின் சரித்திரத்தை எடுத்து செல்லும் வகையில் உலகின் பெரிய அருங்காட்சியகம் டெல்லியில் அமைகிறது. 1.17 லட்சம் சதுர மீட்டரில் பாராளுமன்றத்தில் வடக்கு தெற்கு கட்டிடத்தில் அமைகிறது. 950 அறைகள் கொண்டதாக அந்த அருங்காட்சியகம் அமைகிறது. நாட்டின் ஒவ்வொரு பிரதமர்களின் சரித்திரங்கள் இடம்பெறும் வகையில் டிஜிட்டல் வடிவிலான அருங்காட்சியகமும் அமைகிறது. மலைவாழ் மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களது வரலாறு குறித்த தகவல் அடங்கிய அருங்காட்சியகம் மலைவாழ் மக்கள் அதிகம் உள்ள குஜராத், சத்திஸ்கர், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமைய உள்ளது. பன ஓலைச்சுவடி மற்றும் செப்பு பட்டையங்கள் டிஜிட்டல் செய்யும் பணிகள் செய்யப்பட்டுள்ளது. 3.30 லட்சம் ஓலைச்சுவடிகள் 3 கோடி பக்கங்களாக கொண்டு டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரிகங்கள் உள்ள பல்வேறு நாடுகளில் இருக்கும் பாரம்பரிய சின்னங்களை புனரமைக்க இந்திய தொல்லியல் துறையினரை வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.
மொத்தமாக 2500 கோடி ஐந்து இடங்களுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஆதிச்சநல்லூருக்கும் செலவிடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
3500 ஆண்டுகளுக்கு பழமையானது இந்த ஆதிச்சநல்லூர். எனவே விரைவில் இதற்கான உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக பணிகளை முடிப்போம்.- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமையான இடங்கள் குறித்து ஆய்வு செய்து அதில் மத்திய அரசுக்கு சொந்தமான இடங்கள் என்றால் அதன் மீதான பணிகள் மேற்கொள்வதற்கு முடியும். எனவே மத்திய அரசு அல்லது மாநில அரசா அந்த இடத்திற்கான உரிமை யாரிடம் இருக்கிறது என்பது குறித்து முதலில் தேர்வு செய்வோம். தமிழக அரசு கீழடியில் மிகச் சிறப்பான பணிகளை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது. மணிப்பூரை பொறுத்தவரை பார்லிமெண்டில் ஒரு பொதுவான பாதை வேண்டும் என அனைவரும் கேட்டுக் கொண்டார்கள். மணிப்பூரில் நடக்கும் கலவரம் இப்போது முதலாவதாக நடப்பது அல்ல. அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். கடந்த 2013ம் ஆண்டு மருந்துகள் உட்பட எந்த ஒரு பொருட்களும் மணிப்பூரில் கிராமங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் கூட அங்கு செல்லவில்லை. ஆனால் இப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து அதில் உள்ள நிலையில் உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகள் மணிப்பூரில் சென்று நேரில் பார்த்துக்கொண்டு வந்த அவர்கள் கூட அவர்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தால் அதற்கான விடை கிடைக்கும். ஆனால் அவர்கள் அங்கு என்ன நடந்தது என்று குறித்து பேசவில்லை என்று அவர் தெரிவித்தார்.


