ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுகிறார். அதற்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் சைட் மியூசியத்தில் கண்ணாடி பொருத்தும் பணிகள் நடந்து முடிந்தது. அதை தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மத்திய அரசு சார்பில், தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஆதிச்சநல்லூர் பரம்பில் சைட் மியூசியம் அமைக்கவும், அதன் மேல் கண்ணாடி பேழை அமைத்து பார்வையாளர் பார்வையிடவும் பணி நடந்து வருகிறது.
உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமுக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் அப்போதைய ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ் உதவியுடன் ஆதிச்சநல்லூர் மக்கள் சார்பில் இந்த இடங்களை இலவசமாக வாங்கி கொடுத்தார். இதனால் இங்கு பணிகள் மிக விரைவாக நடந்தது. இந்தியாவில் ஐந்து இடத்தில் மியூசியம் அமைக்கும் பணியில், முதல் முதலாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டு திறப்பதற்கு தயாராக உள்ளது.

இதுகுறித்த தகவலை இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது,
சைட் மியூசியம் என்பது இந்தியாவில் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போது பி சைட்டில் கண்ணாடி மூலம் உள்ளது உள்ளபடியே தோண்டப்பட்ட குழிகள் மூடாமல் அதன் மீது கண்ணாடி பேழைகள் அமைத்து அதன் வழியாக பொருள்களை பயணிகள் பார்க்கும் வண்ணம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளே விளக்குகள் பொறுத்தப்பட்டு பார்க்கும் பார்வையாளர்களுக்கு முதுமக்கள் தாழிகள், அதனுள் கிடைத்த பொருள்கள் தெரியும் வண்ணம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இந்த சைட் மியூசியத்தினை சுற்றி பூங்கா மற்றும் புகைப்பட காட்சி அமைத்து உள்ளே வரும் தொல்லியல் ஆர்வலர்களை திருப்தி படுத்தும் வண்ணம் அமைத்து வருகிறோம் என்று கூறினார்.

இதற்கான பணி இரவு பகலாக நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக கண்ணாடி பேழை அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. மேலும் இருபுறமும் மூங்கில் மறைவு கொண்டு அடைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் கண்ணாடி பேழைக்குள் முதுமக்கள் தாழி இருக்கும் இடம் பார்வையாளர்களுக்கு மிகவும் விசேஷமாக தெரிய மின்விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த சைட்டை சுற்று வர தடுப்பு கம்பி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
ஐரோப்பா, சீனா, மேற்கு ஆசியா கண்டத்திற்கு நிகரான இந்த சைட் மியூசியம் ஆதிச்சநல்லூர் அமைய இருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1876ல் இந்தியாவில் முதல் முதலில் அகழாய்வு நடந்த ஆதிச்சநல்லூரில் சுமார் 147 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிலே முதல் முதலில் சைட் மியூசியம் அமைவது மிகவும் விசேமாக கருதப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் இயக்குனர் முனைவர் அருண்ராஜ் தலைமையில் டெல்லி தொல்லியல் கண்காணிப்பாளர் அணில் சிங், டெல்லி துணை தொல்லியல் கண்காணிப்பாளர் அறவாழி, தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார், பொறியாளர் கலைச்செல்வன் உள்பட அதிகாரிகள் இரவு பகலாக இந்த தொல்லியல் சைட் மியூசியம் பணியை பார்வையிட்டு வருகின்றனர்.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் பணி அமைக்கும் பணியையும் வருகிற 5 ந்தேதி காலை 10 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைக்கிறார். இதற்காக தனி மேடை அமைக்கும் பணி மிகப்பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

வாழ்விடம் தேடும் பணி நடைபெற உள்ளது.
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். அதில் திருக்கோளூர் மற்றும் அகரம் ஆகிய இடங்களில் பணி நடந்தது. முதல் கட்டமாக திருக்கோளூர் பணி மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.
இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுடப்படாத மண் செங்கல், நான்கு தரைத்தளங்கள், சுடுமண் குழாய்கள், அடுப்பு, பானை ஓடுகள், பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், உடைந்த வளையல்கள், இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு பணியில் இடைக்கால நாணயங்கள், வெண்கல வளையல், வெண்கல மோதிரம், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாழ்விடங்களை தேடும் பணி வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூர் கடந்து வந்த பாதை
1876 ல் டாக்டர் ஜாகோர் இந்தியாவிலேயே முதல் முதலாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வை தொடங்கினார்.
1902 ல் ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரியா ஆய்வு செய்து 100 க்கணக்கான பொருள்களை சென்னை மியூசியத்தில் கொண்டு வைத்தார். மேலும் கிடைத்த பொருள்களை பட்டியலிட்டார்.
1908 ல் ஆதிச்சநல்லூரில் 144 ஏக்கர் கையகப்படுத்தியது இந்திய தொல்லியல் துறை. இதனாலும் அத்துமீறி நுழைபவர்களுக்கு தண்டனை உண்டு என அறிவித்தது.
1920 ல் சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்த வங்கதேச அறிஞர் டாக்டர் பானர்ஜி என்பவர் சிந்துசமவெளி நாகரீகமே தாமிரபரணி நாகரீகம், அது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என ஆங்கில கட்டுரை எழுதினார்.
2004 ல் இந்திய தொல்லியல் துறை டாக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் அகழாய்வு செய்தது.
2017 ல் தொல்லியல் துறை ஆய்வு செய்த அறிக்கை வேண்டும், இவ்விடத்தில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடர்ந்தார்.
2020 ல் மத்திய நிதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தார்.
2019&2020 ல் மாநில அரசு சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு நடந்தது.
2021 ல் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அகழாய்வு திருச்சி மண்டல இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு நடந்தது.
2023 ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசு சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கிடைத்த பொருள்களை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலையில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
5.08.2023 ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவிலேயே முதல் முதலாக அமைக்கப்பட்ட சைட் மியூசியத்தினை திறந்து வைத்து, உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


