“ஆச்சி இன்னைக்கு என்ன கதை சொல்லப்போறே” ராசுக்குட்டி கேட்டான்.
“ராஜாவுக்கு என்ன கதை வேணும்?”
“ராஜா கதை தான் வேணும். சொல்லுவியா?”
“சொல்லுதேன் என் செல்லத்துக்கு” என்று ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“சிங்கம்பட்டி ஜமீன்தார் பெரியசாமி தேவருக்கு அன்னைக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. இருக்கவும் மனசில்ல. அரண்மனைக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாக அ¬லைஞ்சிகிட்டே இருந்தாவ. எவ்வளவு நேரம் தான் நடக்கமுடியும்-? யோசித்து யோசித்து பார்த்தாவ. அவுக மூளைத்தான் கசங்கி போச்சு. ஆனா காரியம் முடிய எதுவும் தோணலை. இதனால குழம்பி போயிட்டாவ”.
ஆவலுடன் கேட்டான் ராசுகுட்டி. ஆச்சி தொடர்ந்தாள்.
“இந்தக் குழப்பத்துக்கு காரணம்தான் என்ன? அன்னைக்கு மதுரையில் இருந்து வந்த கடிதம் தான். அதை படிக்க படிக்க அவருக்கு கண்ணீர் தான் வந்துச்சு. என்ன செய்யனுதான் தெரியலை”. ஆச்சி ரொம்பவும் சர்பிரைஸ் வைத்தாள்.
“அந்த கடிதத்தில என்னதான் ஆச்சி இருந்துச்சு”. ராசுக்குட்டி கேட்டான்.
“சொல்லுதேன். மகாராஜாவுக்கு உங்கள் அடிமை ராமசாமித்தேவர் எழுதுனது. இப்ப நான் மதுரை ஜெயிலில் அடப்பட்டு கிடக்கேன். என்மேலே கொலைகுற்றம், கொள்ளை குத்தம் சாட்டியிருக்காவ. தூக்குத் தண்டனை கொடுத்து புட்டாவ. அடுத்த மாசம் என்னை தூக்கில போட்டு புடுவாவ போல இருக்கு. என்னை காப்பத்துங்கன்னு எழுதி இருந்தாரு.
இதைப் படிக்க படிக்க பெரியசாமித் தேவருக்கு ஆத்திரம் பெங்கிச்சி. இங்கிலிஸ் காரனுவ மேலே கோவம் வந்துச்சு. என் நண்பன் கொலை செஞ்சானா?, கொள்ளை அடிச்சானா?. இவனுவ அடவாடிக்கு ஒரு குறைச்சலும் இல்லை. இவனுவள சும்மா விடக்கூடாதுன்னு துடிச்சாரு.
உடனே தன் சேவகனை கூப்பிட்டு “கொண்டு வா குதிரையை” ன்னு சொன்னாவ.
மறுநிமிசம் சேவகன் குதிரையோடு வந்தான்.
சேவவன் ராஜா கிட்ட வந்து மகராஜா உத்தரவு. நாங்க யாரும் கூட வரணுமான்னு கேட்டான். யாரும் வர வேண்டாம். நான் வடநாடு போறேன். வர சில மாதம் ஆவுமுன்னு சொல்லிபுட்டு கணக்குபிள்ளையை கூப்பிட்டாவ. அரண்ம்னை காரியத்தை பாத்துகோன்னு சொல்லிட்டு, குதிரையை தட்டுனாவ அது மதுரையை நோக்கிச் சிட்டாய் பறந்து போயிட்டு. இப்படி எதிர்பாராத விதமாக ஜமீன்தார் எங்காவது போவரு. அதனால யாரும் வாயை தொறக்கலை.
ஜமீன்தாரு கொஞ்சம் வித்தியாசமானவர் பெரிய சாமித்தேவர். வயது 27தான் ஆவுது. சொரிமுத்து அய்யனார் மாறி முறுக்கு மீசை, தோரணையான தோற்றமா இருப்பாவ. வளமான ஜமீன். செல்வத்துக்கு பஞ்சமில்லை. இளரத்தம் வீரத்துக்கு பஞ்சமில்லை இவருக்கு பிடிவாதம், திமிரு எல்லாம் இருக்கும். புலிப்பால் வேணுமுன்னு நினைச்சா புலிப்பால் வந்தே தீரணும். இல்லையின்னா படைவீரர்களை கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள போய் புலியை பார்த்து பால் கறந்து குடிச்சிட்டுத்தான் வருவாரு.
இதுக்கிடையில இவாளுக்கு கல்யாணம் வேறே உறுதி செஞ்சு இருந்தாவ.
ஓருநாளு இவர் ஊர் கிணற்றில் தண்ணீர் எடுத்த பெண்ணை பார்த்தாரு. அந்த பெண்ணைத்தான் கட்டுவேன்னு ஒத்தகாலுல நின்னு. தன்னோட உறைவாளை சேவகர் மூலமா கொடுத்து அனுப்பி பொன் கேட்டாரு”.
“அது என்ன ஆச்சி உடைவாளு”.
“ஏலே அந்த காலத்தில ஜமீன்தார்களுக்கு பெண் பிடிச்சிட்டுன்னா. வாளை அனுப்பி வைப்பாவ. பொன்னு அந்த வாளுக்கு மாலை போட்டா கல்யாணம் முடிஞ்ச மாறித்தான்”.
“வித்தியாசமா இருக்கே ஆச்சி”.
“அப்படித்தான் இவரும் வாள் அனுப்ப, அந்தபெண் வாளுக்கு மாலை போட்டு சம்மதம் சொல்லிட்டாவ. ஆனா அதுக்குள்ள இவரு நண்பரை காப்பாத்த கிளம்பிட்டாரு.
பெரிய சேட் போலவே உடை உடுத்தி “அசல்,” சேட்டு போல மதுரைக்கு வந்து சேர்ந்தாவ. அங்கே தனியாக மாளிகை அமைச்சாவ. அங்கேயே சில நாட்கள் தங்குனாவ.
மதுரையிலுள்ள ஜெயிலர் நானாசாகிப். இவரை தன் நண்பனா ஆக்கிப்புட்டாவ ஜமீன்தார்.
அடிக்கடி ஜெயிலரின் வீட்டுக்குப்போனாவ. அவர் கூட ஜெயிலுக்கு போனாவ. கைதிகளைப் பார்த்து தின்பண்டம் வாங்கி கொடுத்தாவ.
ஒரு காலகட்டத்தில இருவரும் நகமும், சதையும்போல ஆயிட்டாவ.
சேட் ஜெயிலுக்கு வந்து அரட்டை அடிக்காட்டி, அத்தனை பேருக்கும் போர் அடிக்க ஆரம்பிச்சிடும். அப்படி ஒரு ஜெயில் பாசத்தை உருவாக்கிக்கிட்டாவ. கைதிகளுக்கு இனிப்புக் கொடுக்கும் சாக்கில் நண்பர் ராமசாமித் தேவரைப்பார்த்தாவ. அவருக்கு சந்தோஷம் தாங்கலை. எப்படியும் நம்மளை மீட்டுக்கிட்டு போயிருவாருன்னு நினைச்சாவ.
ஒரு நாள் மாலை நேரம்.
வழக்கம் போல ஜெயிலரும், சேட்டும் வைகைக் கரைக்குக் குதிரையில போனாவ.
அங்கு மணலில் அமர்ந்து அரட்டை அடிச்சாவ.
சாகிப் நான் சேட் இல்லை. சிங்கம்பட்டி ஜமீன். ராமசாமித்தேவரை காப்பாற்ற வந்திருக்கேன்னு சொன்னாவ. ஜெயிலர் திகைச்சே போயிட்டாவ.
என் நண்பன் எனக்கு ரொம்ப முக்கியம். அவனை என்னோடு அனுப்பி வையும். உமக்கு என்ன வேணுமுன்னாலும் செய்யிறேன்னு சொன்னாவ. ஆனா ஜெயிலர் கேட்கலை. உடனே அவரை கொன்னு வைகை ஆத்து மணலில புதைச்சாவ. எதுவும் தெரியாத மாறி ஜெயிலு க்கு வந்து ராமசாமி தேவரை கூட்டிக்கிட்டு சிங்கபட்டிக்கு பாஞ்சு போயிட்டாவ. யாருக்குமே சந்தேகம் வரலை.
மறு நாளு மதுரையிலே ஒரே பரபரப்பு. ஜெயிலரை காணும். வடநாட்டு சேட்டு கைதியை கடத்திட்டு போயிட்டான். அதனால வடநாட்டு சேட்டைத்தான் வடக்கப்பாத்து எல்லோரும் தேடுனாவ. தெக்க சிங்கம்பட்டி ஜமீனை யாரும் நினைக்கலை.
ஒரு நாளு வைகை ஆத்துல புதைச்சு வைச்ச ஜெயிலர் உடலு மழை பெய்யும் போது வெளியே தெரிஞ்சுட்டு. போலீஸ் படை வைகை ஆத்துக்கு போச்சு.
ஜெயிலர் உடலைக் கைப்பத்தி சோதனை போட்டாவ. அப்போ குதிரை சேணத்தில சிங்கம்பட்டி சமஸ்தான முத்திரை இருந்துச்சு. அப்போ அவரு கூட நடமாடினது சிங்கம்பட்டி காரனுவத்தான்னு தெரிஞ்சு போச்சு. உடனே போலீஸ் படை சிங்கம்பட்டிக்கு வந்துச்சு. ஜமீன்தார் அடையாளத்தை வச்சி. இவர்தான் வடநாட்டு சேட்டா நடிச்சாருன்னு கண்டு பிடிச்சிட்டாவ. உடனே இவரை பிடிச்சிட்டு போயி மதுர கோர்டில ஆஜர் பண்ணினாவ.
கோர்டில இவர் செஞ்ச காரியத்துக்கு தூக்குத் தண்டனை விதிச்சிட்டாவ.
பாதிக்கப்பட்ட ஜெயிலர் மனைவி கிட்ட கேட்டாவ. அவுக ஜமீனுலத்தான் அவரை தூக்குல போடனும். அவர் உடலை கழுகு திம்பதை மக்க பாக்கணுமுன்னு சொல்லிபுட்டாவ”
ஆச்சி மூச்சி விட்டால். ஆர்வத்துடன் அப்புறம் ஆச்சி என்றான் ராசுக்குட்டி.
திருநெல்வேலி கலெக்டர் அதுக்கு ஏற்பாடு பண்ணினாவ.
இதுக்கு இடையில ஜமீன்தார் பெரியசாமிச் தேவரோ இதைப்பத்தி கவலைபடலை.
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிச்சுதானே ஆகணும். எனக்கென்ன பொண்டாட்டியா? பிள்ளையா? நான் என் நண்பனை காப்பாத்துனது சரிதானே” ன்னு சொல்லிட்டு தூக்குமேடைக்கு வந்தாரு.
கூட்டமுன்னா கூட்டம் அப்படியரு கூட்டம். ஜமீன்தாரால் தூக்கு மேடைக்குப் போவ முடியலை. ஜமீன் காரவிய அவரை சுத்தி நின்னாவ. ஆனா போலீஸ் காரவிய விடாம அவுகளை தூக்கு மேடைக்கு கூட்டிட்டு வர முயற்சி செய்தாவ ஆனா முடியலை.
ஜமீன்தாரு உயிருக்கு பயப்படாம கிண்டல் பேசிக்கிட்டே வந்தாரு. காவலர்களுகிட்ட “எனக்குச் சிலம்பம் தெரியும். ஒரு கம்பு கொடுத்தியன்னா சிலம்பம் ஆடி இந்தக் கூட்டத்தை விலக்கிக்கிட்டு தூக்கு மேடைக்கு வந்துருவேன்னாரு.
அங்க கலெக்டர் வந்தார், “சரி? உம்ம கடைசி விருப்பத்தை சொல்லும்?” முன்னு கேட்டாரு.
அந்தச் சமயத்தில் கூட ஏதாவது நல்ல வார்த்தை சொன்னா அவரைத் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாத்திடலாமுன்னு கலெக்டர் நினைச்சாரு.
ஜமீன்தாரோ, அழகிய சிவப்பு தோல்காரியான உன் மனைவிதான் எனக்கு வேணுமுன்னாரு.
அதைகேட்டவுடன் அனைவரும் கலெக்டரை கேலி செஞ்சு சிரிச்சாவ.
அவமானப்பட்டுப் போன கலெக்டர் ராக்டன் கண்கள் சிவந்துச்சு. அப்போ அரசு சிப்பந்தி ஒரு கடிதத்தை கொண்டு கலெக்டர் கிட்ட கொடுத்தாரு. அவரை படிச்சு பாத்துட்டு ரொம்ப கோபத்தோட “இவனைத் தூக்கிலிடுங்கள் அந்தத் தூக்கு மரத்திலிருந்து இவன் உடலைக் கீழே இறக்கக் கூடாது, கழுகும், பருந்தும் கொத்தித் திங்கட்டுமுன்னு சொல்லி உடனே தண்டனை யை நிறைவேற்றினாரு.
இதுல என்னென்னா ஜமீன்தார் உறவினர்கள் தூககுத்துரையை விடுதலை செய்ய சொல்லி அனுப்பிய மனுவுக்கு ஆங்கிலேய அரசு இறங்கி வந்துட்டாவ.
ஜமீன்தாருக்குத் தூக்குத் தண்டனையை ரத்து செஞ்சு புட்டாவ. ஜமீன்தாரு திருமணம் ஆகாத இளம் வயசு, வாரிசு இல்லாமல் ஜமீன் அழிந்து போவக் கூடாதுன்னு நினைச்சு பிரிட்டீஷ் அரசாங்கம், அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அந்தமானுக்கு அனுப்பும் படி உத்தரவு பிறப்பிச்சு இருந்தாவ. ஆனால், உன் அழகிய மனைவிதான் எனக்கு வேணுமுன்னு ஜமீன்தார் சொன்னதாலத்தான் தண்டனையை நிறைவேத்திப்பட்டாரு”.
“அய்யோ அடப்பாவமே.
ஆச்சி. பெரியசாமித்தேவர் கதை ரொம்ப பாவமா இருக்கே”.
“ஆமாம் அதுக்கப்புறம் அவரை தூக்குத்துரைன்னுதான் சொல்லுதாவ. அவரு சிலை மணிமுத்தாற்றங்கரையில சுப்பிரமணிய சாமி கோயிலுக்குள்ள சிங்கம்பட்டியில இருக்கு”. ஆச்சி சொல்லி முடித்தாள்.
“ஆச்சி. தூக்கு துரை வாள் அனுப்பி கல்யாணம் முடிச்சாவளே அந்த பெண் என்ன ஆனாவ?”.
“அவுக தான் தூக்கு துரைக்கு பொறவு சிங்கம்பட்டி ஜமீனை ஆட்சி செஞ்சாவன்னு சொல்லுதாவ”.
“இருந்தாலும் தூக்குதுரை கதை சொல்லும் போது எல்லோருக்கும் வருத்தமாத்தான் இருக்கு. சிங்கம்பட்டி ஊருல தூக்கு வயல், தூக்கு துரை சிலை எல்லாத்தையும் பாக்கும் போது அவர் தோரணையும், அவர் செயலும் தான் நம்ம நினைவுக்கு வருது ஆமா”
என்றாள் ஆச்சி.
அமைதியாக இருந்தான் ராசுக்குட்டி. அவனால் தூக்குத்துரை கதையை சீரணிக்கமுடியலை.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


