தாமிரபரணியில் வரலாறு(ஜுலை 2023) காணாத வறட்சி ஏற்பட்ட காரணத்தினால் ஸ்ரீவைகுண்டத்தில் வற்றிய தாமிரபரணி, அருகில் உள்ள வட கால்வாயில் மீன்கள் செத்து மிதக்கின்றன. தொடர்ந்து சாக்கடை தேங்கி வருவதால் தண்ணீரை குடிக்கும் மனிதர்கள் நிலை என்ன? கேள்வி குறி கிளம்பியுள்ளது.
சென்னையில் ஒரு காலத்தில் தூய நதியாக ஓடிய கூவம் ஆறு தற்போது கழிவுகளின் சங்கமத்தால் சாக்கடையாக மாறிவிட்டது. அதுபோல தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளின் மூல ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதி தற்போது அளவிற்கு அதிகமாக கலக்கும் சாக்கடைகளால் சென்னை கூவம் நதி போல மாறத் தொடங்கியுள்ளது. இதனால் திருநெல்வேலியில் போராட்டம் நடத்தினர் தாமிரபரணி ஆர்வலர்கள் . இவர்கள் போராட்டம் எல்லாம் ஒற்-றுமை இல்லாத காரணத்தினால் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது. இவர்களின் ஓசை கேட்கப்பட வேண்டியவர்கள் காதில் கேட்கவே இல்லை.
இந்த நிலையில் தாமிரபரணி தன் வரலாற்றை இழந்து விடும் நிலையில் தற்போது வற்றாத ஜுவநதி என்ற பெயரை இழந்து விடும் அபாய நிலையில் சிக்கி தவித்து வருகிறது.
இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் வெகுவாக தண்ணீர் குறைந்து விட்டது. கருங்குளம் ஆற்றில் நதிவற்றி ஓடையாக மாறி ஓடுகிறது. இதே நிலை ஏற்பட்டால் 10 நாட்களில் முழுவதும் வற்றி வறண்டு விடும் நிலை உள்ளது.
தற்போது ஸ்ரீவைகுண்டம் வடகாலில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களால், இந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்து விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் வற்றி விட்டன. ஜூனில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழையும் இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை. இதனால் நதியே வறண்டு காணப்படுகிறது. இதில் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுவதுடன் மணல்மேடாகவும் காட்சி அளிக்கிறது. வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால்களில் மீன்கள் தண்ணீர் இன்றி செத்து மிதக்கின்றன.
இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் செத்து மிதக்கும் மீன்களை உணவாக எண்ணி சாப்பிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கழுகுகளும் வடகால் வாய்க்காலில் செத்து மிதக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
என்னைப்பொறுத்தவரை வேதனையான விசயமாக உள்ளது. கடந்த 35 வருடகாலமாக தொடர்ந்து தாமிரபரணியில் பயணித்து வருகிறேன். என் கண் முன்னே தாமிரபரணி அழிந்து வருவதை காணும் போது வேதனையாக உள்ளது.
தமிழரின் நாகரீகமான ஆதிச்சநல்லூர் நாகரீகத்தினை கூட மீட்டெடுக்க உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் கண்டு விட்டோம். ஆனால் தாமிரபரணி வழக்கு மதுரை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் தாமிரபரணிக்கு விடிவு காலம் பிறக்க வில்லை.
சங்கிலக்கியங்கள் போற்றிக் கொண்டாடிய நதி தாமிரபரணி நதி. சங்க இலக்கியங்களில் தாமிரபரணி நதி தண் பொருநை நதி என்று அழைக்கப்பட்டது. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடிய நாட்டை தன் பொருநை புனல் நாடு என்கிறார். “பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திரு நதி” என்கிறார் கம்பர். “அழகர் கருணை போல பொருநை பெருகி வரும் அழகை பாடும் பள்ளீரை” என்கிறது முக்கூடற்பள்ளு. சங்க இலக் கியங்களில் இவ்வளவு பெருமை யுடன் பேசப்படும் தாமிரபரணி நதி பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தூத்துக்குடி மாவட்டம் வரை 128 கிலோமீட்டர் பயணம் செய்து பழைய காயலில் சங்கு முகம் அருகில் கடலில் கலக்கிறது.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தாமிரபரணி நதியால் பாசன வசதி பெறுகின்றன. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது இவ்வளவு பெருமைகளும் மக்கள் பயன்பாட்டிற்கும் உரிய தாமிரபரணி நதி சமீப காலமாக அளவிற்கு அதிகமாக கலக்கும் சாக்கடை மற்றும் வீசப்படும் குப்பைகளால் கூவம் நதியாக மாறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழை பொய்த்த காரணத்தினால் தண்ணீர் முழுவதும் வற்றி விட்டது. இதனால் குடிதண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதோடு, நதியில் உள்ள உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாமிரபரணியை நாம் பாதுகாக்க விட்டால் நெல்லை தூத்துக்குடி தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பாலைவனமாகும். தாமிரபரணி நதியின் அருமையை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் உலகில் பல நாடுகள் மாசடைந்த நதிகளை தங்களின் நடவடிக்கையால் மீட்டெடுத்து தெளிவான நீரோடும் நதியாக மாற்றியுள்ளன. அதுபோல மத்திய மாநில அரசுகள் தாமிரபரண நதியே பாதுகாப்பதற்கு களமிறங்க வேண்டும் நர்மதை நதி போன்றவை மத்திய அரசு நிதி உதவியால் தற்போது தூய்மையான நதியாக மாற்றப்பட்டு வருகின்றன.
எனவே தாமிரபரணி நதியே பாதுகாக்கவும் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கி ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். தாமிரபரணி கரைகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு நமது பாரம்பரியமான மர வகைகள் நடப்படுவதோடு, நீரை சுத்தப்படுத்தும் தன்மை உடைய புல்லினத்தை சார்ந்த வெட்டிவேர் நடப்பட வேண்டும்.
வறட்சியின் காரணமாக தற்போது மீன்கள் செத்து மிதக்கின்றன. இதே நிலை ஏற்பட்டால் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் ஆதாரத்தினை நம்பி இருக்கும் அனைத்து குடிதண்ணீர் ஆதாரங்களும் அழியும் நிலை ஏற்படும் போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட குடிதண்ணீர் சாக்கடையாக மாறி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு விடும். எனவே அதற்கு முன்பு அரசு முறையான நடவடிக்கை எடுத்து நதியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்கு முன்பு தாமிரபரணி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நேரடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க பைப் லைன் போட்ட போது அணை 16&12&2012 அன்று முழுவதுமாக வற்றி விட்டது. தற்போது அதே நிலை ஏற்பட்டுள்ளது. மருதூர் அணை எப்போதுமே வறண்டது கிடையாது. ஆனால் 2021 ஜனவரியில் இந்த அணையும் வறண்டு விட்டது. எனவே தொடர்ந்து வறட்சியை தாக்கு பிடிக்காமல் தாமிரபரணி தவிக்கிறது. நதியை காப்பாற்றவும் , ஊற்றுகளை பாதுகாத்து , சாக்கடை கலக்காத தாமிரபரணியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாகும்.
(நதி வற்றாமல் ஓடும்)


