ஆச்சி சொன்ன கதையை கேட்டுக்கொண்டிருந்தான் ராசுகுட்டி. அவள் கதையை கேட்டு சந்தோசப்பட்டான். ராசுகுட்டி ரசிப்பதை ஆச்சி நன்றாக புரிந்தாள்.
ஆச்சி தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“ கேரள ராஜாவுக்கு மனதில் திட்டம் ஒன்று தோன்றியது. “ குருக்களே நாளை நீர் பூஜை செய்யும் கோவிலில் சிவனைக் கட்டிக் கொண்டு இவை முழுவதும் தவிட்டு மூட்டை தான்னு சத்தியம் செய்து கொடுத்திடும்” என்று குருக்களிடம் ஆணையிட்டாரு. சபையில இருந்தவியளும் அதை ஒத்துக் கொண்டுட்டாவ. உண்மைதானே அந்த கடவுளே உண்மையை சொல்லட்டுமே என நினைச்சாவ”
ராசுகுட்டியும் அமோதித்தான். “ஆமாம் ஆச்சி உண்மைதானே?”
ஆச்சி தொடர்ந்தாள்.
“சபை கலைஞ்சு போச்சி. எல்லாரும் அவுக அவுக வீட்டுக்கு போயிட்டாவ. கனத்த மனசோட கன்னட பிரம்மச்சாரி கோயிலில வந்து படுத்துக்கிட்டாவ. அவருக்கு அழைஞ்ச அழுப்பு வேறே. அப்படியே தூங்கி போனாவ. அவுகளுக்கு ராத்திரி கனவு வந்துச்சு. அதுல சிவபெருமான் தோன்றினாரு. ஏய் பிரம்மசாரி குருக்கள் உன்னை ஏமாத்த போறாரு. அதனால காலையில குருக்கள் சத்தியம் செய்ய வரும் போது புளியமரத்தைத் தொட்டு சத்தியம் செய்ய சொல்லு” ன்னு சொல்லிட்டு மறைஞ்சி போயிட்டாரு”.
கதையை உச்சுகொட்டி கேட்டுக்கொண்டே இருந்தான்.
“அதுல ஒரு உண்மையும் இருந்துச்சு, குருக்கள் மந்திரம் தெரிஞ்சவரு. அதனால அவரு சிவலிங்கத்தில இருந்த சுவாமி அருளை ஆவாகனம் செய்து இராத்திரியோட இராத்திரியா புளியமரத்துக்கு மாத்தி வைச்சி புட்டாரு. இதனால் பகவான் சிலையாத்தான் இருந்தாரு. அங்க அவரு இல்லை. இதனால லிங்கத்தை கட்டி புடிச்சி சத்தியம் செஞ்சா ஒண்ணும் ஆவாது. அதனாலத்தான் அப்படி திட்டம் போடும் போது சத்தியம் ªச்ய்ய தயாருன்னு சொல்லி இருந்தாரு. ஆனா பகவான் சும்ம விடுவாரா?”
“அதான” ராசுகுட்டி சொன்னான்.
“மறுநாள் காலையில கூட்டம் கூடிச்சு. ராஜாவும் வந்துட்டாரு. அவரு முன்னால எல்லோரும் வந்துட்டாவ. கன்னட பிரம்மசாரியும் பாவம் போல வந்து நின்றாரு. பாவத்தை வாங்கி, பொன் மூட்டையும் வாங்கி அதை வச்சி நல்ல காரியம் பண்ணணுமுன்னு நினைச்சவரு. இப்போ அதையும் இழந்து பரிதவிச்சி கிட்டு நிக்காரு. இதுக்கிடையிலே கோவில் குருக்கள் ரொம்ப சந்தோசமா இருந்தாரு. அதனால அவரு வேகமா போய் சிவலிங்கத்தை தொட்டு சத்தியம் செய்ய தயரானரு”.
ஆவலோடு கேட்க ஆரம்பித்தான் ராசுகுட்டி.
“ஆனா கன்னட பிரம்மச்சாரி இடை மறிச்சாவ, “ராஜாவே இது சாதாரண பொன், பொருள் சம்பந்தப்பட்டது. இதில் பரமேஸ்வரனை இழுப்பது முறையானது அல்ல, அதனால சத்தியம் செய்யும் குருக்கள் இந்த புளியமரத்தைக் கட்டிப்பிடித்து சத்தியம் செய்தாலே போதும்” முன்னு சொன்னாரு”.
“எல்லோருக்குமே அதுதான் ச்ரின்னு பட்டது. பச்சை மரத்தைத் தொட்டு யாரும் பச்சைப் பொய் சொல்ல மாட்டாவ. அதனால குருக்கள் புளிய மரத்தை தொட்டு சத்தியம் செய்யட்டுமுன்னு பொதுமக்களும் சொன்னாவ”.
“ராஜாவுக்கும் அது தான் சரியின்னு பட்டுச்சு. உடனே அவரு குருக்களை பாத்து, பிரம்மச்சாரி கூறுவது போல் நீர் இந்தப் புளியமரத்தைத் தொட்டு அவரது பொன் பொருட்களை எடுக்கலைன்னு சத்தியம் செய்யும்வே”. என்று சொன்னாரு.
“குருக்களுக்கு மனசுக்குள்ள பயம் தான். அந்த சூழ்நிலையில் குருக்களுக்கு எதுவுமே தெரியலை. புளியமரத்தில் பகவானைத் தாம் தானே மாந்திரீகம் மூலம் மாற்றி வைத்தோம் என்ற நினைப்பு கூட பொன் பொருள் முன்பு தெரியாம போயிட்டு. அப்படியே இந்த கூட்டம் முன்னால உண்மையை சொல்லவும் பயம். அதே நேரம் நம்ம தினமும் தொட்டு பூஜை பண்ணுற சிவன் தானே. அவரு நம்மள என்ன செய்வாருன்னு தைரியம். இதுனால தைரியமாக போய் அந்த புளியமரத்தைக் கட்டிப்பிடிச்சி கிட்டு, இந்தக் கன்னட பிரம்மச்சாரி என்னிடம் தந்தது தவிட்டு மூட்டை தான். பொன் அல்ல ன்னு பொய்ச் சத்தியம் செய்தாரு குருக்கள் சாமி. ஆனால் சிவன் எப்பேர் பட்டவரு. அவரு இவரை சும்மா விடுவாரா? மறுநிமிசம், தீ மாரி பெரிய சுவாலை ஏற்பட்டுச்சு. அப்படியே மரத்துடன் குருக்கள் எரிஞ்சு சாம்பல் ஆகிட்டாரு. தீடிருன்னு தீபற்றி எரியுறதை பாத்து அவ்வளவு பேரும் பதறி போயிட்டாவ. சுற்றி இருந்த மக்கள் எல்லாம் பகவானின் தீர்க்க தரிசனத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனாவ. பொய் சத்தியம் செஞ்சா இப்படித்தான் நடக்குமுன்னு பயந்தே போனாவ. சிவபெருமானின் திருவிளையாடலே ஆடலுன்னு நினைச்சாவ. சாமிக்கு பூஜை போடுத குருக்களே பொய் சத்தியம் செஞ்சாலும் குற்றம் குற்றமேன்னு நினைச்சாவ”.
“பொறவு 10 மூட்டை பொன்னை மொத்தமான அமுககணுமுன்னு நினைச்சா பகவான் விடுவாரா?” ராசுகுட்டி சிரித்தான்.
“குருக்களை எரிச்ச காரணத்தினால இந்த சாமிக்கு தாகேஸ்வரர், எரிக்கட்டி சுவாமி, எரிச்சாமுடையார், எரிச்சாவுடையாருன்னு பெயர். இன்னைக்கும் இந்த கோயிலுக்கு இந்த பேருத்தான்”.
“ம். நல்ல பேருத்தான் ராசுகுட்டி சொன்னான். ஆச்சி தொடர்ந்தார்.
“கோர்ட்டுக்கு போய் பொய் சாட்சி சொல்றவீய கூட இந்த எரிச்சமுடையார் கோயில் முன்னால பொய் சத்தியம் செய்யணுமுன்னு சொன்ன ஓடியே போயிருவாவ. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவ தான் இங்குள்ள சிவபெருமான்”.
“சரி ஆச்சி. அதை விடு. மற்ற கதையை சொல்லு”.
“ம் சொல்லுதேன்”.
“குருக்கள் பொன் மூட்டையை எங்க வச்சிருப்பாருன்னு தேடணும். அவரு எங்க வைச்சிருக்காரோ. யார் கிட்ட கொடுத்தாரோன்னு தேடுனாவ. கடைசியில் குருக்கள் வீட்டில தான் பொன் மூட்டை இருந்துச்சு. ராஜா போய் படை வீரர்களை தேட சொல்ல, அவுக கண்டு பிடிச்சு கொண்டு வந்தாவ. அதுக்கப்புறம் அந்த பொருளை யெல்லாம் பிரம்மசாரிக்கிட்ட கொடுத்துட்டு ராஜா கேரளாவுக்கு போயிட்டாவ”.
“அந்த பொன் பொருளையெல்லாம் கொண்டு வந்து அகத்தியர் உத்தரவு படி கன்னட பிரம்மச்சாரி கால்வாய் வெட்டினாரு. பசு ஏற்கனவே சென்ற இடத்தில் அடையாளம் போட்டு வைத்திருந்தாருல்லா. அந்த இடத்தில தாமிரபரணியில ஒரு அணை கட்டினாரு. அப்புறமா அவரு பசு ஓடுன வழியா அணையில் இருந்து கால்வாய் வெட்டினாரு. பசு சாணம் போட்ட இடத்தில் மடைகள் கட்டினாரு. பசு சிறுநீர் கழித்த இடத்தில் வடிகாலும் அமைச்சாரு”.
“சீனியாபுரத்தில் கலாசி என்ற தாசி வீட்டை இடித்து அதில் மடை வைத்தாரு. அவ ஏற்கனவே சொன்னப்படி பணமில்லாம இடம் தந்துட்டா. அந்த இடத்துக்குக்கு கலாசி மடை ன்னு அவ பெயரையே வச்சாரு. அப்புறமா பிராஞ்சேரியில் கொண்டு வந்து கால்வாயை முடித்து வைத்தாரு. இடம் கொடுத்த தாசி கலாசியின் பெயரையே மடைக்கு வைத்தவரு தனது பெயரை உலகிற்குத் தெரிவிக்காம விட்டுட்டாரு”.
“எப்படி இருந்திருக்காவ. நம்ம ஊருல ஒரு லட்டை கட்டிட்டு நான் தான் கட்டினேன். கட்டினேன்னு சொல்லுதாவ. வில்லு காரிக்கு 1 ருபாய் கொடுத்துட்டு 9 தடவை பாராட்ட சொல்லுதாவ. ஆனா கன்னட பிரம்மசாரி பேரே சொல்லாம போயிட்டாவளே. ஆச்சரியமா இருக்கே”
“ம். அவரை பாராட்டாம இருக்க முடியாது? ம். இதுக்கப்புறமும் விடலை பிரம்மசாரி. கால்வாயை கண்காணிச்சிகிட்டே இருக்காரு. நல்ல தண்ணீ வருதா. மக்க நல்லா பயன்படுத்துதாவுளான்னு பாத்துக்கிட்டே இருந்தாரு”.
“அதுக்காக என்ன சென்ன செஞ்சாரு ஆச்சி?”.
“கால்வாய் வெட்டிய பொறவும் மடை கட்டி குளங்கள் எல்லாம் வெட்டிய பொறவும் தாமிரபரணி தண்ணீரைக் குளத்தில் ஏற்றி பயிர்களை விளைய வைத்துப் பாக்கணுமே. ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி விளைஞ்சு கிடப்பதைக் கண்ணால் பார்க்கணுமே. இந்த ஏக்கம் கன்னடியனுக்கு இருந்துச்சு. ஆனால் கன்னடியனுக்கு இந்தப் பெரிய காரியம் செய்த வகைக்கு மமதை வந்துட கூடாதுன்னு சிவபெருமான் சோதிக்க ஆரம்பிச்சாரு. ஆகவே மழை இல்லாமல் போக வச்சாரு. பொதிகை மலையே வறண்டு போச்சு. வற்றாத ஜீவநதி ன்னு சொன்ன தாமிரபரணியே நீர் வற்றிப் போச்சு. கன்னடியன் கால்வாய் வறண்டு போச்சு. மீண்டும் விரக்தி அடைஞ்சாரு கன்னடிய பிரம்மச்சாரி”.
“அய்யய்யோ அப்புறம்”
“ ஒரு வருசமா 2 வருசமா 3 வருடம் வறட்சி தொடந்துட்டு. இனி மழை வேண்டுமுன்னா அகத்தியரை வணங்கியே தீரணும். கன்னடியப் பிரம்மச்சாரி சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றுக்கு வந்தாரு. ஆற்று மணலில் தலைகீழாய் நின்னு தவம் புரிய ஆரம்பிச்சாரு. தன்னுடைய தோஷம் போக்கணும். அதே நேரம் உலக மக்கள் வாழணுமுன்னுங்கிற எண்ணத்தில் இருந்த பிரம்மச்சாரியின் தவம் அகத்தியர் ஞானதிருஷ்டியில் தெரிஞ்சது. உடனே சாமி வந்துட்டாரு. வந்தவரு சாதராண மனிசன் மாரியே பிரம்மச்சாரி முன்பு வந்தாரு. அங்க மகாகணபதி ஒருவரை உருவாக்கினாரு. கன்னடியப் பிரம்மச்சாரியிடம் வந்தாரு. இளைஞனே மிளகுபொடியைத் தாமிரபரணித் தண்ணீரில் கெட்டியாகப் பிசைந்து கணபதி உடம்பு முழுவதும் அப்பி வை. அப்புறம் எவ்வளவு கஷ்டமிருந்தாலும் எங்கிருந்தாவது தண்ணீர் கொண்டு வா. பிள்ளையார் உருவமே வெளியே தெரியாத அளவுக்குத் தண்ணீரை மடமடன்னு ஊத்து. மகா கணபதி குளிர குளிர மழை வந்துடும். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்து அணை, கால்வாய் எல்லாம் நிறைஞ்சுடும்”. என்று கூறினவரு. அப்புறமா அகத்தியரா தோன்றி அவரை ஆசிர்வதித்துட்டு மறைஞ்சுபோயிட்டாரு”.
“நல்லா இருக்கே”
“சொல்வது ரொம்ப இலேசு. ஆனாலும் அந்த நேரத்தில் தண்ணீர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அகத்தியர் வாக்கை வேத வாக்காக நினைச்சாரு நம்ம கன்னடியப் பிரம்மச்சாரி. விநாயகர் மீது மிளகைக் கரைத்து அவர் மீது அப்பினாரு. தொடர்ந்து தண்ணீர் பல இடத்தில இருந்து சுமந்து வந்து அபிஷேகம் செஞ்சாரு. விநாயகரை தலை முட்டுற வரைக்கும் தண்ணீர் ஊற்றி நிறைச்சாரு”.
“ரொம்ப கஷ்டமாச்சே”
“ பொறவு கன்னடியன் பட்ட பாடு கடவுளுக்கு தெரிஞ்சு போச்சு. உடனே வருண பகவான் வந்தாரு. இந்த இடத்தில உடனே மழை பெய்ய வைச்சாரு. இந்தச் சம்பவம் எல்லாம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னால நடந்துச்சாம்”.
“அடப்பாவமே பாவத்தை போக்க இப்படியா கஷ்டப்பட்டாரு”.
“ஆமா அது மட்டுமா? மீதிஇருகக காசை வச்சி , திரும்பவும் பல அணையை கட்டினாருன்னு சொல்லுவா?
அப்புறம்.
“இப்பவும் மழை பெய்யலைன்னா சேரன்மகாதேவியில் அகத்தியர் பிரதிஷ்டை செய்த அந்தப் பிள்ளையாருக்கு மிளகு பொடி காப்பு சாத்தி அபிஷேகம் செய்தால் உடனே மழை வருமாம்-. அது மட்டுமா? வருடந்தோறும் சேரன் மகாதேவி வேதபாடசாலைக்குப் பக்கத்திலுள்ள கால்வாய் மடை முன்னால வருடா வருடம் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் மகா கணபதிக்குப் பிரார்த்தனை நடத்துறாவலாம். இந்த பிள்ளையாரை “மிளகு பிள்ளையார்” ன்னு கூப்பிடுதாவளாம்”.
ஆச்சி கதையை சொல்லி முடித்தாள்.
ராசுகுட்டி ஆச்சி கதையை கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போயிட்டான்.
“இப்படியுமா? மக்களுக்கு கஷ்டப்பட ஆளு இருக்காவ என ஆச்சரியப்பட்டான்”.
உண்மைதானே. இவ்வளவு பெரிய காரியத்தை செய்துட்டு தன்னோடு பெயரை கூட வெளியே சொல்லாம போன அந்த கன்னடியன் பெருல தான் கன்னடிய கால்வாய், கன்னடியன் அணை இப்போதும் மக்களுகக்கு பயன்கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கு.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


