233. சாக் கடையாகும் தாமிரபரணி
முன்னீர் பள்ளத்தில் பிறந்த எழுத்தாளர் உமா கல்யாணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியிலும் இவரது சில சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன நூற்றுக்கணாக்கான சிறுகதைகளை எழுதியிருக்கிறார் உமாசந்திரன் “புகையும் பொறியும்” “விண்ணாசை’ ‘திரும்பவில்லை’ போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள் கிட்டத்தட்ட 20 நாவல்களை எழுதி யிருக்கிறார். ‘வாழ்வுக்கு ஒரு தாரகை; ‘ஒன்றிய உள்ளங்கள், பாச வியூகம் பொழுது புலர்ந்தது. “காய்சுலபம்’ புகையும் பொறியும்’ ‘அன்புச்சுழல்’ ‘அன்புள்ள அகிதா’ ஆகாயம் பூமி, முள்ளும் மலரும்’ ‘பெண்ணுக்கு நீதி, வேர்ப்பலா, முழு நிலா: ‘ஒன்றிய உள்ளங்கள், ‘திரும்ப வழியில்லை’ ‘சக்கரவியூகம் ‘பண்பின் சிகரம்’, ‘அனிச்சமலர் இதய கீதம்’ போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த நாவல்கள் ஆகும். “கனகும் பொழுது புலர்ந்தது’ பத்திரிகைகளில் தொடராக வெளியாகாமல் நேரடியாகப் புத்தகமாக வெளிவந்த சிறப்பை உடையது. ‘காயகல்பம்’, ‘முழுநிலா’, ‘வாழ்வே வா போன்றவை பெண்ணியச் சிந்தனைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்கள்.
‘முழுநிலா” நாவலில் தனது தந்தைக்கு இரண்டாவது மனைவியாக அமையும் தனது சித்திமூலம் பிறக்கும் தனது தம்பியையே தனது மகனாக வளர்க்கும் சூழல் அமைகிறது கதையின் நாயகி மஞ்சுளாவிற்கு. திருமணமாகிக் காதல் கணவனுடன் வசிக்கும் அவள்.
ஏன் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான். என்ன காரணம். அதனை அவன் எப்படி எதிர் கொள்கிறாள், அவன் கணவரின் மனநிலை என்ன என்பதை யெல்லாம் சிறப்பான பாத்திரப் படைப்புகள் மூலம் வாசகர்களின் உள்ளத்தில் நிலைபெறும் நாவலாக்கி யிருக்கிறார் உமாசந்திரன்.
குறுநாவல்கள் கட்டுரைகள், நாடகங்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார் ‘வானொலியில் சங்கமித்த இதயங்கள் என்பது இவரது கட்டுரைத் தொகுப்பு ‘விஷப்பரீட்சை, பரிகாரம்’, ‘கலாவின் கல்யாணம்’ மன்னித்தான், உரிமைக்கு ஒருத்தி’ ‘குமாரி காவு’ போன்றவை குறுநாவல்கள் உமாசந்திரன் நேபாளத்துக்குச் சென்றிருந்தபோது அங்கு கண்ட, கேட்ட விஷயங் களைத் தொகுத்து ஒரு நாவலாக எழுதினார். ‘குமாரி காவு’ என்னும் அந்நாவல் மாலைமதி இதழில் வெளியானது. அக்காலத்தில் வாசகர் கவனத்தை ஈர்த்த நாவல்களில் இதுவுமொன்றாகும்.
மனமாளிகை இவரது குறிப்பிடத் தகுந்த நாடகங்களில் ஒன்று ‘காதம்பரி போன்ற இதழ்களிலும் எஸஹதர்மினி. “பெற்றமனம்’, ‘அவன் வஞ்சம்’ போன்ற பல நாடகங்களை எழுதியிருக்கிறார்.
உமாசந்திரன் பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை ஆலோசகராகவும் வசனம் எழுதுபவராகவும் பங்களித் திருக்கிறார். ‘தாய் உள்ளம்’ படத்திற்கு எஸ்.டி சுந்தரத்துடன் இணைந்து கதை-வசனம் எழுதியுள்ளார். ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தின் கதை உமாசந்திரன் எழுதியது. ‘கணவனே கண்கண்ட தெய்வம் படத்திற்கும் கே.வி. சீனிவாசன், வி சதாசிவப்ரம்மம் ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார். ‘மொகல் ஏ ஆல்பம்’ தமிழில் ‘அக்பர்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியானபோது அதற்கு வசனம் எழுதினார் உமாசந்திரன்.
அண்ணா, காமராஜர் மறைந்தபோது இறுதி ஊர்வலங்களை வானொலியில் மனமுருக நேர்முக வர்ணனை செய்தது இவரே. தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் சம்ஸ்கிருதம், ஹிந்தி எனப் பல மொழிகள் அறிந்த இவர், அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஒழுக்கம், நேர்மை, எளிமை, அன்பு, இரக்கம் இவற்றையே தனது வாழ்நெறியாகக் கொண்டவர் உமாசந்திரன் தன்மகவுகளையும் அவ்வாறே வளர்த்தார். பூர்ணிமா, பாரதி என இரு மகள்களுடனும் நட்ராஜ், கிஷோர் என இரு மகன்களுடனும் நிறைவாழ்வு வாழ்ந்தவர். ஏப்ரல் 11, 1994 அன்று காலமானார்.
இவரது படைப்புகளை மீள்பிரகரம் செய்து தற்கால வாசகர்களும் இவரை நன்கறியச் செய்வது அவசியம்.
முன்னீர் பள்ளத்தில் அடுத்த ஒரு தகவலை அறியும் முன்பே தற்போது தாமிரபரணியின் நிலையை அறிவது அவசியமாகிறது.
இந்த தொடர் பிரசுராகி உள்ள 2.07.2023 அன்று தாமிரபரணி முழுவதும் வற்றி விட்டது. சாக்கடை கலந்த நதியாக மாறி விட்டது. இந்த நதியில் மழை பெய்யவில்லையென்றால் இனி நெல்லை,தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டம் தண்ணிர் இன்றி தவிக்கும் நிலையில் உள்ளது.
இந்த நதி குறித்து நியூஸ் 18 எடுத்த சர்வே முடிவில் இனி குடிக்கவே லாயக்கற்ற தண்ணீர் தாமிரபரணி என அதிர்ச்சி தகவல் ஒன்றை தந்து விட்டது.
இந்தியாவில் உள்ள மிகச்சிறப்பான நட்சத்திர அந்தஸ்து கொண்ட 12 நதிகளில் தாமிரபரணி நதியின் நிலை அதோ கதியாகிவிட்டது. இதற்கு காரணம் மணலை தோண்டி விற்றவர்களா?, அல்லது தனியார் கம்பேனிக்காக தண்ணீரை தாரை வார்த்தவர்களா?, அல்லது தண்ணீர் நமது உரிமை, நமக்கானது என தெரியாமலேயே சாக்கடைகளை தாமே தாமிரபரணியில் கலந்துகொண்டிருக்கும் பொதுமக்களா? தாமிரபரணியின் அருமையையே தெரியாமல் அறியாமை வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம்ம மக்களுக்கு யாரு தான் விடைச்சொல்லித்தருவார். தாமிரபரணியை யார்தான் காப்பாற்றுவார்?
(நதி வற்றாமல் ஓடும்)