“ஆச்சி எனக்கு இன்னைக்கு நல்ல சாமி கதையா சொல்லு”, ராசுக்குட்டி ஆச்சி வந்து அமர்ந்தான்.
“சொல்லிருவோம். இந்த கதை நம்ம ஊருல நடந்த கதை. பல தலைமுறையா பேசுற கதை. நம்ம ஊரு ராமன் அலைஞ்சி திரிய காரணமா ஒரு சாபம் வாங்கின கதை” என்றாள் ஆச்சி.
அவ்வளவு தான் ராசுக்குட்டிக்கு சந்தோசம் பிறந்தது. “சொல்லு ஆச்சி”. என கால்மேல் கால் மேல் போட்டு அமர்ந்தான்.
“என்னலே கதை சொல்லப்போறேன்னு சொன்னவுடனே அட்ன கால் போட்டுட்ட” ஆச்சி சிரித்தாள்.
“சாமி கதைங்க, ராமர் கதைங்க நாமும் கொஞ்சம் கம்பீரமான இருக்குமேன்னு நினைச்சேன்” என்றான் ராசுக்குட்டி.
“சின்ன பய என்னா பேச்சு பேசுறான் பாரு. ஏலே சாமி கதை சொன்னா பயப்பக்தியா இருக்கணும்”. ஆச்சி முறைத்தாள்.
ஆச்சிக்கு கோபம் வந்திறக்கூடாது. பொறவு அவக்கிட்டே இருந்து கதை வராது என நினைத்த ராசுக்குட்டி தன் நிலைக்கு வந்து “இப்போ சொல்லு ஆச்சி” என்றான்.
கதை சொல்ல ஆரம்பித்தாள் ஆச்சி.
“நம்ம தாமிரபரணி ஆத்தங்கரையில் நடந்த கதை இது. பிருகு முனிவர் இட்ட சாபத்தில் தான் மகாவிஷ்ணு ராமனாக இந்த மண்ணுலகில் பிறந்து அப்புறம் சீதாதேவியை இராவணன் சிறைபிடித்துச் சென்ற பொறவு அவளைத் தேடி தாமிரபரணி ஆற்றங்கரை வழியாகக் காட்டில் அலைஞ்சிருக்காரு.
அந்தச் சம்பவத்திற்கு காரணம் மகாவிஷ்ணுவுக்கு பிருகு முனிவர் சாபம் இட்டுள்ளார். அதற்குக் காரணம் என்ன? ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று உண்டு அதைத்தான் சொல்லப்போறேன்”.
என்று சொல்லி விட்டு கதையை மள மளவென்று சொல்ல ஆரம்பித்தாள் ஆச்சி.
“ஒருசமயம் அசுரர்களும் தேவர்களும் ஆக்ரோஷமாக மோதிக்கிட்டாவ. வெற்றித் தோல்வி யாருக்கும் இல்லாமல் சண்டை நீண்டு கிட்டே போச்சு. சுமார் 400 வருடங்கள் போர் நடந்துச்சாம். முடிவே தெரியலையாம்.
அசுரர்களின் தலைவன் இரும்பாசுரன் முதல் முறையாக மிகப் புத்திசாலித்தனமாகச் சிந்தித்தான். தன்னுடையச் சிந்தனையை மற்ற அசுரர்களிடம் சொல்லி ஆலோசனை நடத்தினான். சண்டை போட்டுச் சலித்து போய் இருந்த அசுரர்களும் சந்தோஷமாக அதற்குச் சம்மதித்தனர். அடுத்த நாள் போர் ஆரம்பிச்சது. ஆவேசமாகப் போர் செய்து கொண்டிருந்த அசுரர்கள் திடீரென்று பின்வாங்கினர். தேவர்களுக்கு வெற்றி பெறப்போகிறோம் என்று தெரிந்து சந்தோஷமாய் கூடுதல் வேகத்துடன் போரிட்டனர்.
அசுரர்கள் ஓட ஓட தேவர்கள் விரட்டி விரட்டி அடித்தனர். ஓடிப்போன அசுரர்கள் பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார்கள். பிருகு முனிவர் வெளியே போயிருக்கப் பிருகு முனிவரின் மனைவி மாசவி மட்டும் பூஜையில் இருந்தாவ.
தப்பி வந்த அசுரர்கள் அனைவரும் அபயம் அபயம் ன்னு மாசவி பாதத்தில் சரணடைஞ்சாவ. காலில் விழுந்திருப்பது யார்? எதற்காக அபயம் கேட்காவ என எதுவும் புரியலை ஆனாலும் வீடு தேடி வந்தவியளை உதாசீனம் செய்து விடக்கூடாது ன்னு எண்ணத்தில் தந்தேன் அபயம் என்றாவ மாசவி. அசுரர்களுக்கு ஆனந்த பெருக்கே வந்தது. அனைவரும் எழுந்து நின்று அவுகளுக்கு நன்றி சொன்னாவ.
இதற்கிடையில் தேவர் படையினரும் அங்கு வந்தாவ. ஆசிரம வாசலில் பெரும்படை வந்திருக்க கூச்சல் கேட்டு வெளியே வந்தாவ குரு பத்தினி. அங்கே இந்திரன் தலைமையில் பெரும் படை திரண்டிருந்துச்சு. Ôதாயே அசுரர்களை வெளியே அனுப்புங்கள் என்று தேவர்கள் கேட்க அனுப்ப முடியாது மன்னியுங்கள்Õ என்று பணிவுடன் சொன்னாவ பத்தினி.
போர்க்கோலம் பூண்டிருந்த இந்திரன் அவுகளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் பேசினாரு. இப்பொழுது அவர்களை வெளியே அனுப்பாவிட்டால் நாங்கள் உள்ளே நுழைவோம் ஆசிரமத்தையும் நாசமாக்குவோம் என்று கோபத்தில் கொந்தளித்தாரு இந்திரன். அமைதியாகப் பேசிக் கொண்டிருந்த மாசவிக்கு கோவம் வந்துட்டு.
“வேண்டாம் இந்திரனே.. நீயே திரும்பிப் போய்விடு” ன்னு சொன்னாவ.
ஆனால் இந்திரன் அவுக எச்சரிக்கையை மீறி அவுக ஆசிரமத்திற்குள் நுழைந்தாவ. இப்போதான் மாசவி அம்மாவுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சு. “நான் பிருகு முனிவரின் கற்பு நெறி தவறாத மனைவி என்பது உண்மையினா இந்த ஆசிரமத்தில் என்னை மீறி நுழையும் எவரும் கல்லாக மாறட்டும்” ன்னு ஆணையிட்டுட்டாவ.
அடுத்த கணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லாக மாறினான் இந்திரன். பயந்து போய் பின் வாங்கியத் தேவர்கள் “இறைவா எங்களைக் காப்பாற்று” என்றபடி வைகுண்டம் நோக்கி ஓடிப்போய் திருமால் பாதத்தில விழுந்தாவ.
பாதம் பணிந்த தேவர்களைப் பாசத்தோடு பார்த்தாவ பரந்தாமன். நடந்த விஷயங்களைக் கேட்டறிஞ்சாவ உதவிச் செய்கிறேன் ன்னு பூமிக்கு ஓடோடி வந்தாவ. பிருகு முனிவரின் ஆசிரமத்துக்கும் வந்துட்டாவ. அங்க கல்லா நின்னுக்கிட்டு இருந்தாரு இந்திரன்.
பகவான் மந்திரம் ஜெபிக்க அடுத்த நொடி இந்திரனைப் போத்தியிருந்த கற்கள் தூள் தூளாக வெடிச்சுது. பழைய மாரியே உடலோட வெளியே வந்தாவ இந்திரன். தன்னால் சாபமளிக்கப்பட்டவனை விஷ்ணுவே நேரில் வந்து விமோசனம் அளித்ததைப் பார்த்ததும் கோபத்தின் எல்லைக்கே போயிட்டாவ குரு பத்தினி.
“நான் தினமும் வணங்கும் பெருமாளே எனக்கு எதிராக நீங்கள் செய்திருப்பது பெரும் குற்றம். நான் உங்களையும், தேவர்களையும் மன்னிக்கப் போவதில்லை. உங்கள் அனைவரையும் கல்லாக போகும்படி சபிக்கப் போகிறேன்” என்றபடி மந்திரங்களை உச்சரிக்க தொடங்கினாவ மாசவி. அதன்முன் விஷ்ணு தன் சக்கராயுதம் மூலம் மாசவியின் கழுத்தை அறுத்துக் கொன்னு புட்டாவ.
அசம்பாவிதம் நடக்குது என்பதை ஞானக்கண் மூலம் அறிந்த பிருகு முனிவர் ஆசிரமம் நோக்கி ஓடோடி வந்தாவ. ஆனால் அவுக வந்து சேரும் முன்னால் மாசவியின் உடல் தனித்தனியே பிரிஞ்சு போய் கிடந்துச்-சு. அதிர்ச்சி அடைந்த பிருகு முனிவர் எதிரே நின்று கொண்டிருந்த இறைவன் மகாவிஷ்ணுவையும், இந்திரன் முதலானத் தேவர்களையும் பார்த்தாவ.
மாசவியின் மரணத்தைப் பார்த்ததுமே அசுரர்கள் அப்படியே பாதாள லோகம் போய் பதுங்கிக் கிட்டாவ. பிருகு முனிவரைப் பார்த்ததும் அனைத்து தேவர்களும் பயந்து போய் செய்வதறியாது திகைத்து நின்னாவ. மகாவிஷ்ணு மட்டும் பிருகு முனிவரைக் கண்டதும் புன்னகையுடன் பேசினாவ.
“நடந்தது விதியின் வினை. Ôமனதைத் தேற்றிக் கொள்” ன்னு சொன்னாவ விஷ்ணு. ஆனால் கோபம் கொண்ட பிருகு முனிவரோ “இன்று ஒரு பெண்ணைக் கொலை செய்ய இத்தனைப் பெரியப் படைகளுடன் நீங்கள் வந்திருப்பதைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன். அபயம் அளிப்பது ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை. அதில் எந்தத் தவறும் கிடையாது” என்று கோபமாகவே பேசினாவ. “இறைவனால் என் மனைவி அழிக்கப்பட்டால் கூட அவளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க என்னால் முடியும்” என்று மந்திரம் ஜெபித்து கமண்டல நீர் தெளிச்சாவ.
உடனே மாசவியின் உடலுடன் தலை ஒட்டிக் கிட்டு. உடனே அப்பொழுது தான் விழித்தவள் போல் எழுந்தாள் மாசவி.
பிருகு முனிவருக்கு கோபம் அடங்கலை. “எந்த தேவர் இனத்தைக் காப்பதற்காக என் மனையின் உயிரையே எடுத்தீர்கள். அந்தத் தேவர்கள் இனத்தை நிம்மதியாக இருக்க விடமாட்டோம். என் மகன் சுக்கிராச்சாரியன் அசுரர்களின் தலைமைக் குருவாக இருந்து உங்கள் அனைவரையும் பதட்டத்துடனேயே இருக்கச் செய்வான்” எனச் சாபமிட்டாவ பிருகு முனிவர்.
பகவான் விஷ்ணு தன் தலையைக் கொய்ததைப் பிருகு முனிவரின் மனைவி மாசவியால் சீரணிக்க முடியவில்லை. ஆகவே பகவான் என்று பாராமல் அவருக்கே சாபமிட்டாவ.
“ஒரு பெண்ணென்று பாராது என்னைக் கொன்ற காரணத்தினால் உமது மனைவியை மாற்றான் சிறை பிடிக்க, எதுவும் செய்ய இயலாமல் தவித்துப் போய் விடுவாய்” என்று சாபம் இட்டாவ. அந்தச் சாபம் பிற்காலத்தில பலித்தது. மகாவிஷ்ணு இராம அவதாரத்தில் சீதையுடன் வாழ்ந்து வரும் போது இராவணன் சீதையைத் தாமிரபரணி நதிக்கரை வழியாகச் சிறையெடுத்துச் சென்றான்.
இராமபிரானோ அவரைத் தேடி தாமிரபரணி கரையில் அலைந்தார். கதையை சொல்லி முடித்தாள் ஆச்சி.
“தப்பு செஞ்சா கடவுளாவே இருந்தாலும் தண்டனை தண்டனைத்தான்”. யோசித்தான் ராசுக்குட்டி.
“சரி இந்த சம்பவம் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஊர்காடு எனும் கிராமத்தில நடந்ததுன்னு சொல்லுவவா. அதே ஊருல ஒரு ராஜா இருந்தாரு. அந்த ஊர்காடு ராஜா வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்துச்சு அதையும் சொல்லுதேன் கேளு”. மற்றொரு கதை சொல்ல தயாரானாள் ஆச்சி.
ஆகா ராசுக்குட்டிக்கு இன்னைக்கு ஒரு கல்லுல இரண்டு மாங்கா. அதான் இன்னொரு கதையும் ஆச்சி சொல்லப்போறா. என அடுத்து கதையையும் கேட்க ஆரம்பித்தான்.
ஆச்சி தொடர்ந்து பேசினாள்.
ஊர்காட்டுல பிரம்மாண்டமான சிவன் கோவில் உள்ளே நுழைந்தவுடன் நந்தியும் கொடிமரமும் இருக்கு அது பக்கத்துல இடதுபுறம் கல் தூண்களில் பிரமாண்டமான
ராஜா சிலை ஒன்னு இருக்கு. கோடீசுவரர் கோவிலைக் கட்டிய ஊர்க்காடு ராஜாவின் சிலைதான் இது. இந்த ராஜா கும்பிட்டப்படி இருப்பார். ஆனால் அவரது கை உடைக்கப்பட்டு இருக்கும். கையை உடைக்காமல் முழுமையாக இருந்தால் அந்தச் சிலையைப் பார்க்கவே மிகவும் அம்சமாக இருந்திருக்கும். ஆனால் இப்படி அநியாயமாய் ஒரு நல்ல கலை நயம் மிக்க சிலையை உடைத்து விட்டார்களே என்று வருத்தப்பட்டேன். அது பத்தி விசாரிக்கும் போது தான் எனக்கு அங்க உள்ளவிய இந்த கதையை சொன்னாவ.
ராஜா தனது வயதான காலத்தில் மிகவும் நோயுற்றார். இதனால் ரொம்ப நாட்களாகக் குற்றுயிரும் குறை உயிருமாக படுக்கையில கிடந்திருக்காரு. ராஜ வைத்தியம் எல்லாம் பாத்தாச்சி. இனி அவரைக் காப்பாற்ற முடியாது ன்னு மருத்துவர்கள் கைவிரித்து விட்டாவ. ஆனால் இவரது உயிர் போகலை.
பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவர் உயிர் மட்டும் போகாமல் இழுத்துக் கிட்டே இருந்துச்சு. ஏதோ ஆசையினால் தான் ராஜாவின் உயிர் போகாமல் இருக்கு என்று பலரும் பேசிக்கொண்டிருந்தாவ. என்ன ஆசையாக இருக்கும் என்று உறவுக்காரர்கள் தெரியாமல் தவிஞ்சாவ. உறவினரைக் கூப்பிட்டு “யாரிடமாவது ராஜா ஏதாவது ஆசையைக் கூறினாரா?” என்று விசாரிச்சாவ.
ஆனால் யாரிடமும் அவர் எந்த ஆசையையும் கூறலை.
ஒரு கோவிலைக் கட்டிய மகாராஜா இவர். பல புண்ணியங்களைச் செய்தவர். இவருக்கு நல்ல சாக்காலம் கிடைத்தால் தானே எல்லோருக்கும் மனநிறைவாக இருக்கும். யாருக்கும் இவர் தீங்கு நினைக்காதவர். அப்படியென்றால் எதனால் உயிர் வதைத்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லையே? ன்னு ஜோதிடரை அழைத்துக் கேட்டாவ. ஜோதிடர் இவருடைய ஜாதகத்தைப் பார்த்தார். பின்பு கோவிலுக்கு போய் கோட்டியப்பரை மனமுருக வேண்டி னாரு.
அப்போது அங்குச் சிவனை வணங்கும் ராஜாவின் பிரமாண்டமான சிலை அற்புதமாக அமைக்க பட்டிருப்பதைக் கண்டாவ. பொறகு வீட்டுக்கு வந்தாவ. ராஜாவின் உயிர் எதற்கு வதைச்சு கிட்டு இருக்குன்னு எனக்குத் தெரியலை. ஆனால் ராஜாவின் உயிரைப் போக்க வழி கண்டுப்பிடிச்சு விட்டேன்னு சொன்னாவ.
“அப்படியா என்ன சொன்னாவ?” ராசுக்குட்டி ஆர்வமாக கேட்டான்.
“ராஜாவின் உயிர்போகாததற்குக் காரணம் கோவிலில் அவர் சிவபெருமானை வணங்கும் வகையில் சிலை வடிவாக, கையால் கும்பிடும்படி இருக்கு அந்தச் சிலையில் கும்பிடும் கையை உடைச்சிட்டா ராஜாவின் உயிர் பிரிஞ்சுடும்” முன்னு சொன்னாவ. ஆசாரியை கூட்டிட்டு வந்தாவ. ராஜா சிலையில் உள்ள கையை உடைச்சாவ. மறு நிமிசம் ராஜா உயிர் போயிட்டு.
அதான் இப்பவும் ஊர்காடு கோட்டிஸ்வரர் கோயில் தூணுல ராஜா கும்பிட்ட கை உடைஞ்சு போய்தான் இருகக்கும்” என்றாள் ஆச்சி.
ராசுக்குட்டி நம்ம முடியாமல் இருந்தான்.
“ஆச்சி ஆச்சி ஒரு நாளு என்னை ஊர்காடு கோயிலுக்கு கூட்டிட்டு போயேன். அந்த உடைஞ்ச கை ராஜாவை பாக்கணும்” என்றான்.
“கண்டிப்பா கூட்டிட்டு போறேன்” என்றாள் ஆச்சி.
அன்று இரண்டு கதை கேட்ட நிம்மதியுடன் தூங்கினான் ராசுக்குட்டி.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


