தோ.பா வின் நூல்கள் குறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அவரை மேலும் அறிந்துகொள்ளவும், அவ்வப் போதைய அவரது விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டதன் விளைவுகள் தாம் இந்த நேர் காணல்கள். நாட்டார் தெய்வங்கள் Ôபெருந்Õ தெய்வங்கள், சாத்திரங்கள் சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், பண்பாடு இழையோடும் அன்றாட நடைமுறைகள், கலை, இலக்கியம், கல்வி, சாதியம், திராவிடக் கருத்தியல், ஆளுமைகள் என அனைத்தையும் பற்றிய பார்வைகள் இயல்பான உரையாடலில் சுவையாக வெளிப்படுவதை இந்நேர்காணல் களில் அனுபவிக் கலாம்.
திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குறியவர். தொ.பா.வின் தொடர் பயணத்தில் இத்தொகுப்பு இன்னும் கவனம் பெறாத சிலவற்றை முன்வைத்து நகர்கின்றது. சிதம்பரம் கோயிலைக் பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? என்பன போன்ற நுட்பமான பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடையளிக்கின்றது.
பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப் பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் மருத்துவம், திராவிட இயக்கச் சார்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய வற்றை கொண்ட நூல் பயன்படுத்தப் பட்டுள்ளது.
உ.வே.சா. அவர்களின் சங்க இலக்கிய மீள் கண்டுபிடிப்பே வைதீகத்துக்கு மாற்றான ஒரு பெரும் பண்பாடு தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த வரலாற்று உன்மையினைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துக் காட்டியது அதுவே தமிழ்த் தேசிய இன அடையாளத்தைக் கண்டது. திராவிட இயக்கத்தார்க்கும் முற்போக்கு இயக்கத்தார்க்கும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கான திசையினையும் காட்டியது என்று இந்நூளில் தொ.ப. மதிப்பிடுவது கவனத்துக்குரியது.
பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?, இந்து தேசியம், சங்கரமடம்; தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம்; ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் ‘இந்து ‘தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நுட்பமான அணிந்துரை இடம் பெற்றுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சம் ஆகும்.
.
அடுத்து இவருடைய சிறப்பான நூல், பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு
இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங் கோட்டை நகரம் Ôஸ்ரீ வல்லப மங்கலம்Õ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது.
பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.
அடுத்த நூல் மஞ்சள் மகிமை. பண்பாடு என்பது தொன்மையான மற்றும் உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள். Ôஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாதுÕ என்ற வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.
மரபும் புதுமையும் என்ற நூலில் அவர் கூறியது மிகவும் சிறப்பான தாகும்.
நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன ÔமரபுÕகளுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து கூட்டுவனவே தொ.ப.வின் ஆய்வுகள். அவ்வாறு கெட்டி தட்டிப் போனவற்றின், போக வாய்ப்புள்ள வற்றின் ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.
இதுவே சனநாயகம் என்ற நூலில், வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும் போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த முறையியல் கொண்டு தொன்மைகளை மட்டுமன்றி அண்மைப் போக்குகளையும் கூட அகழ்ந்து காட்ட அவரால் முடிகிறது. இத்தொகுப்பு Ôசமயமும் வழிபாடும்Õ, Ôஉறவும் முறையும்Õ Ôஆளுமைகள்Õ, Ôமதிப்புரைகள்Õ, Ôஆய்வுப்பார்வைÕ போன்ற அவரது கட்டுரைகளை வகைக்குள் அடக்க முயன்றிருக்கிறது.
அடுத்து நூல், செவ்வி.“பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல. பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது.”
பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்கு காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டதுபோல இந்த பத்தாண்டுகளில் பெரியாரை பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப்போய்விட்டது. என்பதே அந்த நூலின் சாராம்சம்.
மிகப்பெரிய அறிஞரான தொ. பரமசிவன் அவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு 2020 திசம்பர் 24 அன்று பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கும் எனக்குமான நெருக்கம் உண்டு. அதைப்பற்றி பேசலாம்.
(நதி வற்றாமல் ஓடும்)