“ஆச்சி இன்னைக்கு நீ என் கிட்டே இருந்து தப்பிக்கவே முடியாது. எனக்கு இன்னைக்கு ஒரு கதை சொல்லனும்”.
என ராசுக்குட்டி சொன்னவுடன் “ஆமாம் இவருக்கு கதை சொல்லனும் உடனே. வேலை சோலி கிடையாது” என்று சலித்துக்கொண்டாள் ஆச்சி.
ஆனாலும் ஆச்சிக்கும் கதை சொல்வதில் ஒரு சுகம் தான். எனவே “சரி வாடே உனக்கு இன்னைக்கு நல்ல கதை சொல்லுதேன்” என்றாள்.
இருவரும் சாப்பிட்டு விட்டு மொட்டை மாடிக்கு பாயையும் தலைவாணியையும் தூக்கிக்கொண்டு சென்றனர்.
நிலவு வந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது.
ஆச்சி. வெற்றிலையை எடுத்து காம்பை கிள்ளிப்போட்டு விட்டு அதை பாக்குடன் சேர்த்து இடிக்க ஆரம்பித்தாள். உரலில் இருந்து டொக் டொக் என சத்தம் வந்து கொண்டிருந்தது.
“ஆச்சி. வெற்றிலையில் இருந்து ஏன் காம்பை கிள்ளி போடுதே. பேசாம அதை அப்படியே சாப்பிட வேண்டியது தானே .அதுல என்ன விஷமா இருக்கு” என்றான்.
“ஏடே உனக்கு வெற்றிலை பற்றி வரலாறு தெரியுமா?” என்றாள்.
அப்போது பக்கத்து வீட்டு ஆச்சி அலமேலு மேலே வந்தாள்.
“வெற்றிலை ஆகாயத்தில் இருந்து ஒரு பெண் இடுப்பில் மறைச்சு வச்சு கீழ் உலகத்துக்கு கொண்டுவந்ததாக கூறுவாக” என்றாள்.
“அட போ ஆச்சி. வெற்றிலை போட்டால் மாடு முட்டும் தெரியுமா?” என்றான் ராசுக்குட்டி.
எல்லோரும் சிரித்தனர்.
“வெற்றிலை என்றாலே ஆகாயத்தின் சக்தி உள்ள இலை எனவே சித்தர்கள் இதற்கு வெற்றிலைன்னு பெயர் வச்சிருக்காவளாம்”. என்றாள் ஆச்சி.
“சரி தான் அப்படின்னா இந்த வெற்றிலை நமக்கு சித்தர்கள் தந்ததா?.”
“ஆமாம் வெற்றிலை சாப்பிட்டால் நிறைய நன்மை கிடைக்கும்” என்றாள் அலமேலு ஆச்சி.
என்ன பெரிசா நன்மை கிடைக்கும்.
” சொல்லுதேன் கேளு. நெஞ்சு சளியை கரைக்கும், செரிமாணத்தை துரிதபடுத்தும், எலும்பு வலுபெரும், வாயு தொந்தரவு வராது, ஆயுட்காலத்தை அதிகரிக்கும், புற்று நோய் வராமல் தடுக்கும்”.
“வெற்றிலையில பல வகை இருக்கு. பல சுவை இருக்கு. கருப்பு வெற்றிலை காரம் அதிகம், வெள்ளை வெற்றிலை காரம் குறைவு”. என்று அடுக்கி கொண்டே போனாள் நம்ம ஆச்சி.
“வெற்றிலையை தாம்புலமுன்னு கூறுவாவ. பல் துலக்கு முன் வெற்றிலை பாக்கு போடக்கூடாதுன்னு சொல்லுவாவ. வெற்றிலையின் நுனியையும் காம்பையும் கிள்ளி எறியணும் அது தான் நல்லது என்பாவ. முதுகு நரம்பை நகத்தால் எடுத்துடனுமுன்னு சொல்லுவாவ” என ஆச்சி தொடர்ந்தாள்.
“அடேங்கப்பா வெற்றிலையில இவ்வளவு விசேஷம் இருக்கா?”
“வெற்றிலை போடுறதுல பல விசயம் இருக்கு. காலையில் பாக்கு நெறைய போடணும் மதியம் சுண்ணாம்பு மிகுதியா போடனும், சாயங்காலம் வெற்றிலை மிகுதியாகவும் வைச்சு போடனும் ஆமாம்” என்றாள் ஆச்சி.
ஆச்சி சொல்லிக்கொண்டே வெற்றிலையை வாயிலில் போட்டாள். “வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொண்டு மென்றவுடனே முதல் இரண்டு முறை ஊறும் நீரை விழுங்காமல்; உமிழ்ந்து விடனும்” என்றாள்.
“ம்”. என்றான் ராசுக்குட்டி
“தாம்பூலம் போடத் தொடங்கும்போது முதலில் ஒரு வெற்றிலையை வாயில் போட்டுக் கிட்டு பொறவு தான் பாக்கை போடனும்” என்றாள் ஆச்சி.
ஆச்சி கதை சொல்லுவது இருக்கட்டும் நாமும் கொஞ்சம் வெற்றிலை பற்றி அசைப்போடுவோம்.
100 வெற்றிலை கொண்ட கட்டு கவுளி என்றழைப்பர். வீடு, கடை, தொழி¢ற்சாலை, வயல் என எங்கு என்ன விசேஷம் நடந்தாலும் அங்கு தவறாமல் இடம்பெறுவது வெற்றிலை.
பச்சை பசேல் என யானையின் காது மடல் போல் இருந்தாலும் வடிவில் சிறியதுதான். வெற்றி லையை வளர்க்க தனி இடம் தேவையில்லை. வெற்றிலை வேர் குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து, அருகில் உள்ள மரம், சுவற்றில் பற்றி வளரும். மண் வளத்தைப் பொறுத்து ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வெற்றிலையைப் பறிக்கலாம். வீட்டில் நடக்கும் விசேஷங்கள், திருமணம், காது குத்து, சீமந்தம் என அனைத்து சுப நிகழ்ச்சி யானாலும் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வெற்றிலையைப் பற்றி, 20-ம் நூற்றாண் டில் பிறந்த உணவு விஞ்ஞானி கே.டி. ஆச்சாயா “இந்திய உணவின் வரலாற்று அகராதி” என்ற தனது புத்தகத்தில் “வெற்றிலை தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். சுபத்ரா, ஜாவா, மலாய் தீபகற்ப நாடுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வெற்றிலை பயிரிடப் படுகிறது. இதன் ஆங்கில பெயர்“பெடல் லீவ்ஸ்” இதன் தாவரவியல் பெயர் “பைபர் பெடல்” ஆகும்.
“சரி ஆச்சி என்ன சொல்கிறாள்” என கேட்போம்.
“ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம் டூம் டையா.. என இரண்டு கைகளையும் தரையில் கைவிரல்களை விரித்து வைத்து விளையாடுறோமே நாம் அதன் மகத்துவத்தையும் அறிஞ்சி இருக்கோமா?. வெற்றிலையில் 3 வகை உண்டு. சாதாரண வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை. இதில், கற்பூர வெற்றிலை கற்பூரமணத்துடன் சற்று காரம் தூக்கலாக இருக்கும். கம்மாறு வெற்றிலையில் காரத்திற்கு பஞ்சமிருக் காது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோர் உடல் நலத்திற்கும் பயன்தர வல்லது வெற்றிலை. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகள், சுவாச பிரச்சனை, இருமல், சளி என பலவற்றிற்கும் வெற்றிலை ஒரு அருமருந்து. வெற்றிலை போட்டால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும். குரல் வளமும் பெருகும். கணவன், மனைவி இருவரில் யார் வெற்றிலை போட்டு நாக்கு செக்கச் செவேல்னு சிவந்தால் அவர்கள் மற்றவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் ஆமா”. என்று நிறுத்தினாள் ஆச்சி.
“அப்போ நீ வெற்றிலை போட்டால் நல்லா சிவக்கு. அப்படின்னா நீ தாத்தா மேலே நிறைய பாசம் வச்சிக்கியா ஆச்சி” என்று வெள்ளந்தியாக கேட்டான் ராசுகுட்டி.
“எடு வாரியள. அவரு கூட பாசம் வச்சிட்டாலும் விளங்கி போயிரும்” என்று சீறினாள் ஆச்சி.
“அச்சச்சோ தெரியாம கேட்டுட்டுடோமோ. தாத்தா பேச்சை எடுத்தாலே பாட்டிக்கு கோபம் பொத்துக்கிட்டு வருதே. சரி அடக்கி வாசிப்போம்” என அமைதியானான் ராசுக்குட்டி.
“சரி தாத்தாவை விடு நீ. வெற்றிலை காம்பை ஏன் பிச்சு போடுதாங்கன்னு சொல்லு ஆச்சி” என்றான் ராசுக்குட்டி.
ஆச்சி அந்த பெரிய கதையை மூச்சி விடாமல் கூற ஆரம்பித்தாள்.
“திருவிதாங்கூருல 3ம் சேரமான் பெருமான் ஆண்டு வந்தாரு. அவர் சீரும் சிறப்புமாய் ஆண்டு வந்த காலத்தில் ஒருநாள் தனது உப்பரிகையில் உலாவிக்கிட்டு இருந்தாரு. அப்படி உலாவிக் கிட்டு இருக்கும் போது திடீருன்னு சந்திரன் இரண்டாக பிளந்தது. அதை கண்டு ஆச்சரியப்பட்டு போன சேரமன்னன் உடனே தனது மந்திரியையும் அரசவை ஜோசியர்களையும் கூட்டினாரு. சந்திரன் இரண்டாக பிரிகிறது. அதுவும் அமாவாசை அன்னைக்கு பிரியுது? இதுக்கு காரணம் தான் என்ன ன்னு கேட்டாரு.
அரசவை ஜோதிடர்கள் எல்லோரும் ஆராய்ந்து முடிவில முகம்மது நபி என்பவர் மெக்கா நகரில் இருந்து இந்த சந்திரனை இரண்டா பிளந்துட்டாருன்னு சொன்னாவ. அரசனுக்கோ ஒன்றும் புரியலை. உடனே முகம்மது நபியை பார்க்க ஆசைப்பட்டாரு. மெக்கா நகரை நோக்கி பயணம் செஞ்சாரு.
நபி மிகப் பெரியவரு. அவரை பார்க்க போவும் போது விரதம் இருந்து மிக நல்ல படியாக போணுமுன்னு ஆசைப்பட்டார் மன்னர். இதுக்கிடையில சேரமன்னர் ªவ்ற்றிலை போடும் பழக்கம் உடயவர். மகானை பாக்க போறோம். இந்த நேரத்தில வெற்றிலை போடக்கூடாதுன்னு முடிவு செஞ்சாவ. முதன் முதலில் அவர் வெற்றிலை போடும் பழக்கத்தை கை விட்டாரு. பின் பல காலம் பயணம் செஞ்சி முகம்மது நபியை மெக்காவில பார்த்தாரு. நபியோ சேரமன்னரை பார்த்து ஏன் உம்ம கன்னம் வீங்கி இருக்குன்னு கேட்டாராம்.
வெற்றிலை போடுவதை நிறுத்திய காரணத்தால் சேரமன்னரின் கன்னம் புடைச்சி போய் இருந்துச்சு. அந்த காரணத்தையும் முகம்மது நபியிடம் சேரமன்னர் சொன்னார்.
உடனே நபி சொர்க்கத்துக்கு சென்று வெற்றிலையை கொண்டு வரும் படி நாக பாம்புகளை ஏவினாரு. பாம்பு உடனே செர்க்கம் போயி வெற்றிலையை பறிச்சிக்கிட்டு வந்துச்சு . பாம்பு கொண்டு வந்த வெற்றிலையில் விஷம் இருக்க கூடாது ன்னு நபி வெற்றிலை காம்பு மற்றும் நுனியை கிள்ளி விட்டு வெற்றிலையை சேரமன்னரிடம் கொடுத்தாராம். அன்று முதல் நாட்டில அனைவரும் வெற்றிலையை கிள்ள ஆரம்பிச்சிட்டாவ” என்றாள் ஆச்சி.
“அப்படியா ஆச்சி. அப்புறம் ராஜா என்ன ஆனாரு” என ஆச்சரியத்துடன் கேட்டான் ராசுக்குட்டி. ஆச்சி அவரின் வரலாற்றை சொல்ல தொடங்கினாள்.
“நபிகள் நாயகம் போதைனையை ஏற்றுக்கிட்ட ராஜா, ஹலிப்ராஜன் என்று பெயரை மாற்றி முஸ்லிம் ஆக மாறிட்டாரு. அங்கேயே இருந்த அவரு ஒரு நாளு மரணமும் அடைச்சிட்டாரு.
அவர் இறக்கும் போது என் உடலை கல்தொடடியில வச்சி கடலில் விட்டு விடுங்க. நான் அடக்கம் ஆகும் இடத்தில நானே போய் சேந்துக்குவேன்னு சொல்லிட்டாரு. ஆகவே அவருக்கு கல்தொட்டி தயார் செய்து அதை மூடி கடலுக்குள் தூக்கிப் போட்டுட்டுடாவ.
ஒரு நாள் குலசேகரன் பட் டினம் அருகே மீனவர் வித்தியாசமான கல்தொட்டியை பார்த்து பயந்து மிரண்டு போயிட்டாரு. அதை பிடிக்க முயற்ச்சி செஞ்ச போது அவர்களால கல்தொட்டியை பிடிக்க முடியலை. தொட்டி அவர்களை விட்டு விலகி விலகி போயிட்டு. உடனே மீனவர்கள் தங்கள் கடவுளை வணங்கி இது என்னவாக இருந்தாலும் அதற்குரிய மரியாதை கொடுப்போமுன்னு கும்பிட்டு இருக்காவ. அதன் பிறகு மீனவர்களை நோக்கி அந்த தொட்டி வந்திருக்கு.
அந்த கல்தொட்டியை மெதுவாக கடல் கரைக்கு தள்ளிக்கொண்டு வந்திருக்காவ. பின் சாயங்கால வேளை மிகவும் கஷ்டப்பட்டு அந்த தொட்டியை தூக்கினாவ. ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தில அதை வைச்ச பிறகு அதில் இருந்த அசைய மறுத்துட்டு. முயற்சி செய்து பார்த்துட்டு மீனவர்கள் இனிமேல் தொட்டியை தூக்க முடியாதுன்னு நினைச்சி வீட்டில வந்து படுத்துட்டாக.
அன்னைக்கு ராத்திரி மீனவர் தலைவனுக்கு கனவு வந்துச்சு. அதில் நான்தான் சேரமான் பெருமான் நான் முஸ்லீமாக மாறி கல்தொட்டியில அடக்கமாகி இருக்கேன் . இப்போது கல்தொட்டி இருக்கும் இடத்தில் எனக்கு ஒரு தர்க்கா கட்டுங்க. அதுக்கு பொதிகை மலையில் இருந்து கல் எடுத்துட்டு வாங்கன்னு சொல்லியிருக்காவ. அதன் படித்தான் இப்போ குலசேகரபட்டினத்தில தர்க்கா அமைச்சி இருக்காவ.
ஒரு விசயம் தெரியுமாம? இன்னைக்கும் அந்த கல்தொட்டியில கால் படக்கூடாதுன்னு கந்தூரி அன்னைக்கு அதுல சந்தனம் வைக்க ஒரு மனுசன தலை கீழா கயிறு கட்டித்தான் விடுவாவளாம்” என்றாள் ஆச்சி.
“அடேங்கப்பா எவ்வளவு சிறப்பு” என ஆச்சரியப்பட்டான் ராசுக்குட்டி.
“ஆச்சி ஆச்சி எனக்கு அந்த தர்க்காவை பார்ககணும் ஆசையா இருக்கு ஆச்சி”
“உங்க தாத்தா கிட்ட சொல்லு கந்தூரி நடக்கும் போது உன்னை கூட்டிட்டு போவாரு” என்று சொல்லிவிட்டு படுத்து குறட்டை விட்டாள் ஆச்சி.
பாவி மனுசி படுத்த உடனே தூங்கிட்டா. இந்த அலமேலு ஆச்சி அப்பவே தூங்கிட்டா. இவளுவ குறட்டை நம்மள எங்க தூங்க விட போவுது என சலித்தான்.
அதே நேரம் குலசேரக பட்டினம் தர்க்காவை பார்க்க போக வேண்டும் என தூக்கம் வராமல் தவித்தான் ராசுக்குட்டி.
ஆச்சி சொன்ன ஆத்தோர கதைகள் தொடரும்)


