முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். இதனால் 100 வீடுகள் தீக்கிரையானது. தீ வைத்தவர்களை ராஜதுரை கண்டு பிடித்து உதைக்கிறான். அவர்கள் அங்கிருந்து தப்பித்து பண்டாரவிளை நாடாரிடம் மருத்துவம் செய்கிறார்கள். அவர்களுக்கு உதவ கிறிஸ்தவ மேலை நாட்டு பிரசங்கியார் ரேணியஸ் அடிகளார் குதிரையில் வருகிறார். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமே ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
இனி.
54. தேடி வந்த தெய்வம் .
யோசனை செய்து பார்த்தான் ராஜ துரை.
உலக்க நாடாரும், பொன்னு நாடாரும் அருகில் அமைதியாக இருந்தார்கள். அவர்களுக்கு எப்படியாவது இந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது தான் ஆசை.
“யய்யா, இந்த பயலுவக்கிட்ட இருந்து நாம் தப்பிக்கணுமுன்னா நாம் கண்டிப்பா வேதத்துக்கு மாறித்தான் ஆகணும்”. பொன்னு நாடார் தன் நிலையை விட்டு கொஞ்சம் கீழே இறங்கி வந்தார்.
பொன்னு நாடார் சொன்னவுடன் உலக்க நாடருக்கு சுர்ரென்று கோபம் வந்தது.
“ஏடே நீ இல்லாதத பொல்லாததை சொல்லாதடே. வேதத்துக்கு மாறுன பிரச்சனை தீருமா?. நமக்கு பிரச்சனை வேதம் இந்து இல்லைடே. நம்ம ஊருல பெரிய கோயிலுக்குள்ள போகக்கூடாதுன்னு நம்மளை ஆட்டி படைக்கது யாரு. இந்த அய்யர்மாருக. இப்ப கூட நம்மள போட்டு படாத பாடு படுத்துறது அய்யர்மாருகத்தான். அவியளுக்கு நாம என்ன பாவம் செஞ்சோம். நம்மை பாத்தா இப்படி எரிச்சல் படுதாவ” உலக்கநாடார் சொன்னதை கேட்டவுடன் பொன்னு நாடார் சொன்னார். அதுதான் சொல்லுதேன். பேசாம நாம வேதத்துக்கு போகணுமுன்னேன்”
மீண்டும் உலக்க நாடாருக்கு கோபம் வந்தது.
“அதுக்காக இவுகளுக்கு பயந்துகிட்டு நாம வேதத்துக்கு போக முடியுமா?”
“ஏடே நாம இப்போ அய்யமாரு கும்பிடுத கோயிலுக்கு போவ மாட்டோம். அப்படியே போனாலும் நம்மள உள்ளேயா விடப்போறவ. விட மாட்டாவ. பெறவு எதுக்கு நாம கோயில் கொளமுன்னு ஆசைபடனும். பேசாம வேதத்துக்கு போனா நம்மளுக்கு ஒரு கோயில் கட்டி தருவாவ. அதுல நம்ம பிள்ளையல உபதேசியரா போடுவாவ. அப்புறம் பக்கத்திலேயே ஒரு பள்ளி கூடம் கட்டுவாவ. நம்ம புள்ளையள அதுல வாத்தியரா போடுவாவ. அப்படியே நம்ம பிள்ளையளுக்க வேலை வாய்ப்பும் கிடைக்கும்.அப்புறம் இவிய எல்லா மத்தியிலும் பெரிய ஆளா மாற வாய்ப்பு இருக்கும்”
பொன்னு நாடார் பேசினார். உலக்கநாடார் இடைமறித்தார். “அதுக்காக பெத்த தகப்பனை விட்டுட்டு மத்த தகப்பன் கிட்ட இன்சிலு கேட்க முடியுமாடே”. உலக்க நாடார் கிறிஸ்தவ பாதிரியார் கிட்ட நெருங்கி பேசுறவரு. அதனால அவருக்கு இங்கிலிஷ் வார்த்தையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வரும்.
“அப்படின்னா நம்ம ஊரு கோயிலுக்குள்ள நாமா போக கூடாதாடே”.
“ ஏடே ஒரு விஜயம் தெரியுமா? நம்ம பெரிய கோயிலுக்குள்ள அவிய எங்க விட. நாமளே மானம் மரியாதை உள்ளவிய. பாதிபேரு அவிய கோயிலுக்குள்ள நாம ஏன் போவணுமுன்னு வைரக்கியமா நாமளே போவ மாட்டோம். தெரியுமா?”
“ஏன் போணும். நம்மள மதிக்காத இடத்துக்கு நாம ஏன் போணும். நமக்குன்னு தெய்வமில்லையா?”. பொன்னு நாடார்.
“இருக்குடே. ஒரு காலத்தில நாடாண்ட பரம்பரை தான். கோயில் கட்டி அதுக்கு நிலத்தை எழுதி வைச்சு. ஆண்டாண்டு காலமாக பூஜை நடைபெற காரணமான பரம்பரை தான் இது. இதுக்காக இமயமலை வழியா வரவலைச்சு, பூஜை செய்ய வந்த புறம் போக்குதான் இப்போ நம்ம கோயிலை நம்மக்கிட்டே இருந்து புடுங்கிகிட்டு, நீ வேதத்துக்கு போன்னு விரட்டுது. காலமுடே. காலம். இவனுவ மட்டுமா? இவனுவ கூட அடியாள சில பயலுவ சேந்துக்கிட்டு, நம்மளை பெரும் தெய்வமான சிவனு, விஷ்ணு , முருகன் கோயிலுன்னு உள்ள விடமா அடிச்சு துறத்துதானுவ”. உலக்க நாடார் சொன்னதை கேட்டு அதிர்ந்த ராஜத்துரைக்கு இது புதுசாக இருந்தது.
“நமக்கு தேவை யில்லைடே . நம்ம உருவாக்க பொறந்தவங்க. அவிய உருவாக்குனதை தட்டிப்பறிக்கிற கூட்டம். நாம அதுக்கெல்லாம் பயப்படக்கூடாது”. என கூறிவிட்டு மீண்டும் தொடர்ந்தார். “ஒரு விசயம் தெரியமா? நம்ம பத்திரகாளியம்மனுக்கே விருதுநகருல கோபுரம் கட்டி பெரிய கோயிலா கும்பிட்டுக்கிட்டு இருக்கோம். நம்ம பத்திகாளி தாயி பொன்னும் பொருளும் அள்ளித்தாரா. இப்போ விருதுநகரு குட்டி ஜப்பான் மாரி விளங்குது. பொறவு என்ன?”. பொன்னுநாடார் உரக்க சொன்னார்
“நீர் என்னதான் சொல்ல வாறீரு”. ராஜ துரை பொன்னு நாடாரை நோக்கி கேட்டான்.
“ஏடேய் ராஜதுரை நமக்கு பிரச்சனை இந்து கிருஸ்து இல்லை. நாம மனுசனை வாழுணுமுன்னா நமக்கு கட்டி குடியிருக்க வீடு வேணும். அதுவும் தீ பிடிக்காத வீடு வேணும். அதுக்கு என்ன செய்யணும்”. தீர்க்கமாக சொன்னார்.
ராஜா துரை நினைத்துக்கொண்டிருந்தான். இவர்கள் சொல்லும் பிரச்சனையை கொஞ்சம் யோசித்துதான் பார்க்க வேண்டும். இந்து வேதம் என்கிறார்கள். இந்துகளில் நாம் காவல்தெய்வத்தினை மட்டும் வணங்குகிறோம். நமக்கு பெருந்தெய்வம் கிடையாதா? பெரும் தெய்வத்தை நாம் வணங்க கூடாதா?” யோசித்தான்.
“அந்த அளவுக்கு நாடார் இனம் தாழ்ந்த சாதியா?” ராஜதுரைக்கேட்டான்.
“அது எப்படிடே. நாம அந்த அளவுக்கு தரம் தாழ்ந்தும் போவலை. எவன் கிட்டேயும் கைகட்டியும் நிக்கலை. அதுதான் நாடு கடத்தி புட்டானுவ. ஒரு காலத்தில தாமிரபரணி ஆத்தங்கரை புறாவும் நம்ம சொத்துதான் இருந்துச்சு. நாயக்கர் ஆட்சி காலத்தில விரட்டி அடிச்சிட்டாங்க. கடைசியில நாம எதுக்கு உதவாததுன்னு சொன்ன தேரிக்காட்டுக்கு பிழைக்க போயிட்டோம். இப்போ தேரிக்காடும் பொன்விளையும் பூமியா மாறிட்டு ஆமா” உலக்கநாடார் ஓங்கி பேசினார்.
“நாடாரிலும் பூணு நூல் போட்ட நாடார். வேதம் படிச்ச நாடார் இருக்காங்கடே. அது ஏன் திருச்செந்தூர் கோயிலில வடம் பிடிச்சி இழுக்கிற உரிமையே நம்ம நாடார் கிட்டத்தான் இருந்திருக்கு”.
“ஒரு விஜயம் தெரியுமா?.பெரிய பெரிய கோயிலுக்கு வடம் பிடிச்சு கொடுக்கிற உரிமை நம்ம கிட்டத்தான் இருக்கு”
ராஜ துரைக்கு ஆர்வம் அதிகரித்தது. “எங்க தாத்தா”
“சொல்லுதேன் கேளு. அந்த காலத்தில திருச்செந்தூருல இருந்த உற்சவ முருகன் சிலை காணாம போயிட்டு. இந்த சிலையை தங்கச்சிலைன்னு நினைச்ச டச்சுகார பயலுவ தூக்கிட்டு கடல் வழியா படகுல போயிருக்கானுவ. முருகன் விடுவாரா? நடுக்கடலில போகும் போது சூறாவளி காத்தா சுழன்று அடிச்சி வேலையை காட்டிட்டாரு. அவ்வளவு தான் உயிர் பிழைச்சா போதுமுன்னு அந்த பயலுவ சிலையை தூக்கி கடலுல போட்டுட்டு ஒடிட்டானுவ”. கெக்கெக்கே என சிரித்தார் உலக்கநாடார்.
“அப்புறம் என்னாச்சி தாத்தா” ராஜ துரை கேட்டான்.
“. கோயில சிலை இல்லாம பக்தர்கள் தவிச்சாவ. கடைசியில் எப்படியாவது முருகனுக்கு சிலை வேணுமேன்னே பக்தர்களெல்லாம் நினைச்சாவ. முருகன் கிட்ட வேண்டுனாவ. அப்பத்தான் ஆதித்தனாரு குடும்பத்தை சேந்த ஒருத்தரு கடலுல மீன் பிடிக்க போயிருக்காவ. அப்போ மீன் பிடிக்க வலையை வீசும் போது காணமா போன சிலை வலையில கிடைச்சிருக்கு. அவிய அதை மீட்டுக்கிட்டு கோயில வந்து கொடுத்துருக்காவ. அதுல இருந்து இதுவரைக்கும் சிலையை கண்டுபிடிச்ச ஆதித்தனார் குடும்பத்துக்குத்தான் தேர் வடம் பிடிச்சு இழுத்து கொடுக்கிற வாய்ப்பை கொடுத்து இருக்காவ. ஆதித்தனார் வம்பசமும் நம்ம நாடாருல ஒரு பிரிவு தாண்டே”.
“ஆகா. அப்படியா? எவ்வளவு பெரிய சாதி இது” வியந்து நின்றான் ராஜதுரை.
“அது மட்டுமா? நட்டாத்தி நாடாருன்னு ஒரு வம்சம் உண்டு. அவிய சோழநாட்டு காரவிய. திருவழுதிநாடார் தான் நாட்டாத்தி நாடாருல ஆண்ட பரம்பரை. அவரோட வம்சம் தான் நட்டாத்தி ஜமீனு ஏரல் பக்கத்தில நாடாண்டு இருக்காவ. அவுகளுக்கு அரண்மனை இப்பவும் இருக்கு. அதாண்டே நம்ம பண்டார விளைக்குஅடுத்தாப்புல இருக்கு. அதுமட்டுமா? பெருங்குளம் திருவழுதிஸ்வரர் கோயிலில தேர் இழுக்கும் உரிமை இவியளுக்குத்தான். திருச்செந்தூருல முருகன் தெய்வானை கல்யாணத்தோட, தெய்வானை வீட்டுக்காரங்களா இவுகதான் இருந்து திருக்கல்யாணம் பண்ணி வச்சிக்கிட்டு இருக்காவுன்னா பாத்துக்காங்களேன்”.
“நாடாண்ட பரம்பரைத்தான். பல உருவாக்க செஞ்சவங்கத்தான். இப்போ பாருங்க கண்ணுல காண விடமாட்டுங்காங்க. நாம என்ன ஒதுக்கப்பட்டவங்க. தாழ்த்தப்பட்டவங்க. அதை விட கீழேயா. அவியளுக்கு கூட மரியாதைகொடுக்காவ. நம்மள இப்படி ஓட ஓட விரட்டுதாவளே” ராஜதுரைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“சரி இருக்கட்டும் . ஆதித்தனார் குடும்பம், நட்டாத்தி நாடார் குடும்பம் எல்லாம் உசத்திதான். ஆனா நாமும் நாடார் வம்சம் தான். ஆனால் பனை ஏறுத தொழிலை இழிவு தொழிலா நினைக்காவ. அதனால நம்மல தீண்டாத ஜனமா நினைக்காவ”,
“ஆமாம். நாம இறக்குத பயினி வேனும், கருப்பட்டி வேனும், வீடு கட்ட பனை கட்டை வேணும், வீடு கட்ட குத்த நம்ம இறக்குத பயினி வேனும், அவுக சொகுசா இருக்க நாம நார் கட்டில் பிண்ணி கொடுக்கணும், கார்த்திகை வந்தா பனை கொலுக்கட்டை செய்ய பனை ஓலை நாம பனையில இருந்து வெட்டி இறக்கி தர வேணும், பொங்கலுக்கு பனங்கிழங்கு வேணும், ஆனால் அதை உருவாக்க நாயா பேயா உழைக்க நாம வேண்டாம். நாரப்பயலுவ. நம்ம குடியிருக்க குடிசையையும் கொளுத்தி விட்டுறுவனுவ விளங்காத பயலுவ”.
“அதெல்லாம் இருக்கட்டும். நாம பெருந்தெய்வத்தை வணங்க கூடாதுன்னு கட்டுபாடு போட்டு வச்சிருக்காவ. ஆனாலும் நமக்கு எதுக்கு அவனுவ வம்புன்னு நம்ம பாட்டுக்கு நமக்கு வேண்டப்பட்ட சாமியை வச்சி கும்பிட்டுக்கிட்டு இருக்கோம். இங்கேயும் இடைஞ்சல் பண்ண வந்திருவானுவ”.
யோசித்தான் ராஜ துரை. “இரண்டு பெருசும் பேசுது. நான் நல்ல விசயங்களை தான் சொல்லுது. ஆனால் என்ன பேசுது. எதுக்கு பேசுதுன்னு தெரியலை. என்ன முடிவு சொல்ல போவுதுன்னுதான் தெரியலை”.
கேட்டுருவோம் என ராஜதுரை இரண்டு பேரையும்நோக்கி கேட்டான். “பெருசு இரண்டு பேரும் என்ன சொல்ல வாறீய”.
“என்னத்தை சொல்ல பெத்த அப்பனை விட்டுட்டு மத்த அப்பன் கிட்ட போவக்கூடாதுன்னு சொல்லுதேன்”.
“அப்படின்னா. ஏலே நாம வணக்கிற தெய்வமே பெரியதெய்வம் . இதை விட்டுட்டு வேறே தெய்வத்துக்கிட்டே போக வேண்டாமுன்னு சொல்லுதேன்.”
“ இல்லை. இப்போ இருக்க சூழ்நிலையில அது முடியுமா?” இது தான் ராஜ துரை கேள்வி.
“ஏன்டே முடியாது. ஒரு விசயம் தெரியுமா? நான் நம்ம பகுதியில நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுதேன். நம்மள அவனுவ பெருமாளை கூம்பிட விடமாட்டுகானுவ. ஆனா நம்ம வணங்கிற கள்ளவாண்ட சாமியே விஷ்ணு அவதாரம் தான் தெரியுமா?. அதுவும் நம்ம சாதிக்காரங்க மட்டும்தான் கும்பிடுதோம். அப்படின்னா நாம சாதிக்காரங் என்ன சாதரண பிறவியா?.
உலக்க நாடார் சொல்வதில் ஒன்று மட்டும் புரிந்தது. பெருந்தெய்வம் என்று அந்த கோயிலுக்கு போகக்கூடாது என்று யார் தடுத்தாலும் அதே கோயிலில் உள்ள தெய்வத்தினை மற்றொரு பெயரில் நம் மக்கள் வைத்து கும்பிட்டுக்கொண்டு வருகிறார்கள். அதுவும் சுதந்திரமாய் கும்பிடுகிறார்கள். இவ்வளவு சுதந்திரம் யாருக்கும் வராது . பிறகு ஏன் மதம் மாற வேண்டும்.
இது போக பெருந்தெய்வம் என்கிற தெய்வங்கள். இந்த இனத்து மக்களை தேடி தானே வந்து இருக்கிறார்கள். இந்த ஊரில் அமர்ந்து அதே நாமத்தில் அருள்பாலித்தும் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் பல உதாரணங்கள் உண்டு.
ராஜதுரை கேள்வி பட்ட ஒரு சம்பவம் அவர் மனக்கண்ணில் விரிந்தது. அது விஷ்ணு என்னும் பெருந்தெய்வம் பனைத்தொழில் செய்யும் கிராமத்துக்கு வந்து குடியிருந்து அருள்பாலித்த அற்புத வரலாறு. அந்த வரலாறு தான் என்ன?.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அழகான கிராமம் கருங்குளம். பிராமணர்கள் நிறைந்த ஊர். மிக நீளமான அக்ரஹாரம். இருபுறமும் ஆச்சாரமாய் பிராமணர்கள். இந்த தெருவுக்குள் எந்த நாடாரும் நுழைய முடியாது. ஏன் இந்த பக்கம் திரும்பி கூட நிற்க முடியாது. இந்த தெருவில் இருந்து மலையை நோக்கி படிக்கட்டுக்கள் கட்டப்பட்டிருக்கும். அதன் மேலே வெங்கடசலாபதி திருக்கோயில், மிகப்பிரமாண்டமாக இருக்கும்.
வெங்கடேசபெருமானின் உற்சவரை ஸ்ரீனிவாச பெருமான் என்றழைப்பர். இந்த கோயிலை தென் திருப்பதி பெருமாள் என்று அழைப்பார்கள். திருப்பதியில் நேர்ந்ததை இக்கோயிலில் செய்யலாம். ஆனால் இந்த கோயிலுக்கு நேர்ந்தால் இங்குத்தான் செய்யவேண்டும். அந்த அளவுக்கு திருமலைக்கு நிகரான தலம். அதுமட்டுமா? மதுரையில் எப்படி அழகர் வைகை ஆற்றில் இறங்குவாரோ அதுபோலவே சித்ரா பௌர்ணமி தோறும் மலைமேல் இருக்கும் ஸ்ரீனிவாசர் தாமிரபரணி ஆற்றில் இறங்கி மீன் வெட்டு விளையாடுவார். இது கண்கொள்ளா காட்சியாகும். இந்த காட்சியை காண உலகம் முழுவதும் உள்ளவர்கள் காத்துக்கிடப்பார்கள். எங்கு பார்த்தாலும் வெள்ளை வெள்ளை என்று பூணூல் போட்ட பிராமணர்கள் தான் நிற்பார்கள். பெருமாள் அருள் தங்களுக்கு மட்டும்தான் என தோள் போட்டு ஸ்ரீவாசர் சப்பரத்தினை மலை மீது இருந்து தங்களது தோளில் தாங்கி இறக்குவார்கள். யாரையும் தொட விடமாட்டார்கள்.
இரவு பொன்னிற சப்பரத்தில் நிலா வெளிச்சத்தில் மினுங்கிய படியே சப்பரத்தில் இறங்கும் ஸ்ரீவாசரையும், மறுநாள் தாமிரபரணியில் இறங்கி நீராடிவிட்டு பச்சை சாத்தி மலை மீது ஏறும் ஸ்ரீவாசரையும் காண கண்கோடி வேண்டும். ஏறும் போம் சப்பரத்தினை யாரையும் தொடவிட மாட்டார்கள்,பிராமணர்கள். மற்ற சாதி காரர்கள் தீவட்டி பிடிக்கவும், எடுபிடி வேலை செய்ய மட்டுமே. அந்த அளவுக்கு பகவானை அவர்கள் நேசித்தார்கள். ஆனால் பகவானோ வேறு மாதிரி நேசித்தார்.
இந்த ஊருக்கு வடபகுதியில் கிளாக்குளம் என்னும் அழகிய கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் மார்த்தாண்டன் நாடார் என்பவரின் வாரிசுகள் வசித்து வந்தனர். அவர்கள் பனையேறி ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவகையில் நமது ராஜ துரையின் முன்னோர்களுக்கு அவர்கள் எல்லோரும் உறவினர்களாகத்தான் இருந்தார்கள். தற்போதும் இவர்கள் ஊருக்கும் அவர்களுக்கும் பெண் கொடுப்பது வாங்குவது எல்லாம் உண்டு.
அந்த வகையறாவில் வந்தவர் தான் முப்பிடாதி நாடார். இவரை “கள்ளிகாட்டான் மகன்” என்று கூறுவர். அது என்ன கள்ளிக்காடு என்று கேட்கீறீர்களா?. ஆரம்ப காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கள்ளிகாடு என்ற ஊரில்தான் இவர்களின் முன்னோர்கள் வசித்து வந்தார்கள். ஆற்று வெள்ளத்தில் அடிக்கடி இந்த ஊர் அழிந்த காரணத்தினால், இங்கிருந்த மக்கள் எல்லாம் கருங்குளம், கொங்கராயகுறிச்சி, புதுக்குளம் என பல்வேறு இடங்களுக்கு தங்களது இருப்பிடத்தினை மாற்றிக்கொண்டு அங்கேயும் பனையேறும் தொழிலை செய்து தங்களது வாழ்வை நடத்திக்கொண்டிருந்தனர். அந்தக்காலத்தில் செல்வின் என்கிற கிறிஸ்தவ பிரசங்கியார் கருங்குளம் பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர் கள்ளிக்காட்டில் வாழ்ந்த மக்களுக்கு கருங்குளத்தில் உள்ள பரம்பு பகுதியில் உயரமான இடத்தில வீடு கட்டி கொடுத்தார். அந்த தெரு இப்போது கூட செல்வின் தெரு என்று தான் அழைக்கிறார்கள்.
அது ஒரு புறம் இருக்கட்டும் வரலாற்றுக்கு வருவோம். முப்பிடாதி நாடார் வெங்கடேச பெருமான் மீது தீவிர பக்தி கொண்டவர். இவருக்கு அஷ்ட தேவதையை வணங்குவது அறவே பிடிக்கவில்லை. ஆனால் இவரது உறவினர்கள் எல்லோரும், இந்த ஊரில் இல்லிமாடன் என்னும் தேவதையை வணங்கி வந்தார்கள். அதற்கு கொடை திருவிழாவின்போது ஆடு, கோழிகளைப் பலியிடுவது வழக்கம். இதை வன்மையாக முப்பிடாதி கண்டித்தார். இது மத்தவர்களுக்கு பிடிக்கவில்லை. முப்பிடாதியை பைத்தியக்காரன் என்று அந்த பகுதி மக்கள் துரத்தி அடித்து வந்தார்கள்.
இவர் போடும் நாமத்தைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். “ இவன் என்னடா கோமாளி மாதிரி இருக்கான். நெத்தியில பாரு எவ்வளவு பெரிய பட்டை போட்டு இருக்கான். பையித்தியகாரன்” என்றும் கிண்டலடிப்பார்கள். ஆனால் முப்பிடாதி எதையும் சட்டை செய்யவில்லை. அவர்கள் கிண்டல் செய்வதை காதுகொடுத்து கேட்பதும் இல்லை. அவர் முழுக்க முழுக்க கருங்குளம் மலை மீது இருக்கின்ற வெங்கடேச பெருமானை நோக்கியே வணங்கி நின்றார். “எங்க பெருமான் என்னை தேடி ஒரு நாள் வருவாரு. இந்த மக்களை நல்வழிப்படுத்துவாரு” என அவர் நினைத்துக்கொண்டே பையித்தம் பிடித்தவர் போலவே ஊரை சுற்றிச்சுற்றி வந்தார்.
ஒருநாள் இல்லிமாடன் கோவில் கோடை விழா மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் எல்லோரும் கொடையை கண்டு கழிக்க தயராகி விட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் கோயிலில் பொங்கலிடல் உள்பட சடங்குகள் நடந்தது. நடுராத்தியில் ஏரளமான ஆடு கோழிகளை கொண்டு வந்தனர். அவற்றை எல்லாம் கோயில் பூடம் முன்பு வைத்து நேர்ச்சையாக பலியிட்டார்கள். அலறிய ஆடுகள் ஒரு நிமிடத்தில் பலியானது. எதற்க்கா இங்கே வந்தோம். நம் எஜமான் கூப்பிட்டார் என நம்பிக்கையோடு வந்தோமே நம்மை, நம்மை வளர்த்தவரே பலியாக்கி விட்டார்களே என்று நினைக்க கூட முடியாமல் இறைவனுக்காக பலியிடப்பட்டனர்.
பலியிட்ட ஆடுகள் அம்பாரமாக குவிந்து கிடந்தன. அங்கு வந்த முப்பிடாதி அதை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழுத்தார். ஊர் தலைவரைப் பார்த்து, “ஐயா, ஏன் ஜீவன்களை இப்படி கொலை செய்கிறீர்கள்? இப்படியா இறைவன் கூறியிருக்கிறான்” என்று கேட்டார். 21 கூட்டுறவு தெய்வங்களை கொண்ட அந்தக் கோவில் தர்மகர்த்தாவிடம் பலியிடக்கூடாது என்று சொன்னால் அவர் சும்மா அவர் விடுவாரா?. வருடத்துக்கு ஒரு நாள்தான் கொடை கொடுக்கோம். நாளைக்கு வாய்க்கு ருசியா சாப்பிட போறோம். இதையும் கெடுத்துபுடுவான் போல என நினைத்தவர் முப்பிடாதியை ஏச ஆரம்பித்துவிட்டார்.
“ஏலே இந்த கிறுக்கனை ஏம்ல உள்ள விட்டீய” என்று கத்தினார். ஆனால் முப்பிடாதி விடவில்லை.
“ஐயா ஆடுகளைப் பலியிடுவதாக இருந்தால் முதலில் என்னைப் பலியிடுங்கள்” என்று கூறி விட்டு அவர் கழுத்தை கொண்டு போய் ஆடு வெட்டுவர் முன்னால் நீட்டினார்.
தர்மகர்த்தாவுக்கு கோபம் வந்தது. அதோடு மட்டுமல்லாமல் பூசாரிக்கு அதை விட கோபம் வந்தது.
பூசாரி சாமி வந்து ஆடினார். “டேய் என்னை இவன் தூற்றுகிறான். இவனை உடனே ஊரைவிட்டு விரட்டுங்கள் அல்லது இவனை நரபலியிடுங்கள். இல்லையென்றால் நான் வைசூரி பேதியை மக்கள் மீது ஏவிவிட்டு விடுவேன்” என்று மக்களை நோக்கி ஆவேசமாக குரல் கொடுத்தார்.
அவ்வளவு தான் மக்களுக்கு பயம் வந்தது. நாம கஷ்டப்பட்டு வரி பிரிச்சு கொடை கொடுக்கோம். இந்த முப்பிடாதி பய அதை கெடுக்கான். சாமியாடி கோபத்தை வேறே தூண்டுதான். சாமி சொன்ன மாறி வாந்தி பேதி வந்தா நம்ம பொண்டாட்டி பிள்ளையள யாரு காப்பாத்துவா?
ஊர் மக்கள் அனைவரும் ஒன்று போலவே எழுந்தனர். முப்பிடாதியை உள்ளே விட்டு விட்டால் அவ்வளவு தான் நம்மை படாத பாடு படுத்தி விடுவான் என முடிவு செய்தனர்.
முப்பிடாதியை கழுத்தை பிடித்து இழுத்து தர தரவென்று கொடை விழா பந்தலை விட்டு வெளியே இழுத்து வந்தனர். அனைவரும் கையில் கிடைத்ததை கொண்டு அவரை அடிக்க ஆரம்பித்தனர். முப்பிடாதி அடியைப் பொறுக்க முடியாமல் கத்தினார். ஆனாலும் தங்கள் உறவு காரர்கள் அறியாமையாக உயிரை பலிக்கொடுக்கிறார்களே என வருந்தினார். “எந்த தெய்வம் பலி கேட்கும். நம்மை காப்பாற்றும் தெய்வம், மற்ற உயிர்களை பலியை கேட்குமா?” என மக்களை புரிய வைக்க முயற்சித்தார்.
ஊர் மக்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு, “உயிர் பலி வேண்டாம். இதை விட்டுறுங்க. அய்யோ பாவம் வாயில்லாத ஜீவன்” என கத்தினார். ஆனாலும் யாரும் கேட்க வில்லை. மிக அதிகமானவர்கள் கூடி விட்டனர். பையித்தியகாரன் என்று முப்பிடாதியை அடித்து துவைத்தனர். அடி தாங்க முடியாமல், கருங்குளம் ஊரை நோக்கி ஓடினார் முப்பிடாதி.
பொதுமக்கள் விடவில்லை. விரட்டி விரட்டி அடித்தனர். ஆனால் அவர் “ இதை யாரிடம் சொல்வேன். யாரிடம் சொல்லியும் பிரயோசனம் இல்லை. நம் கடவுள். நீதி தெய்வம் வெங்கடேச பெருமானிடம் சொல்லுவேன்” என் சத்தம் போட்டுக்கொண்டே ஒடினார்.
அந்த இருட்டுக்குள் அவருக்கு முள்ளும் கல்லும் புல் மெத்தையாகவே தெரிந்தது.
அதோடு மட்டுமல்லாமல் “ராமா, கோவிந்தா” என்று கத்திக்கொண்டே ஓடினார். ஊருக்கு பக்கத்தில் ஓடி வரும் வாய்க்காலை நோக்கி ஓடினார். பின்னால் துறத்தி வந்த கூட்டத்தினால் அவரை தொடர இயலவில்லை. இருட்டு சூழ்ந்த காரணத்தினால் முப்பிடாதியை விட்டு விட்டு, அனைவரும் கொடைப்பார்க்க வேண்டும் என்று ஊருக்குள் திரும்பினார்கள்.
அந்த காலத்தில் மும்மாரி பொழிந்த காலம். வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எதிர் கரையில் இருந்து கருங்குளம் வகுளகிரி மலையை பார்க்கிறார் முப்பிடாதி.
“ஆகா. என்ன அருமையாக என் தெய்வம் குடி கொண்டு இருக்கிறது. நான் அங்கே செல்ல முடியாதே. என் பகவானை அருகில் சென்று பார்க்க முடியாதே. மற்ற சாதிக்காரன் எல்லாம் தொட்டால் தான் தீட்டு என்று இந்த அய்யர்மாருக ஒதுக்குவாவ. ஆனால் சாணான் சாதிக்காரங்க பார்த்தாலே தீட்டு என நம்மை துரத்துவார்களே. மனித ஜென்மங்கள் நடத்தும் இந்த மோசங்கள் எல்லாம் என் பெருமானுக்கு தெரியாமலா இருக்கும். இவியளுக்கு புத்தி புகட்ட மாட்டாரா” என்று எண்ணினார்.
இங்கே நான் பிறந்த என் சாதி மக்களோ அறியாமை என்னும் இருட்டில் சுற்றி திரிகிறார்கள். இவர்கள் தெய்வப்பிறவி என்று அறியாமல் இருக்கிறார்கள். சாமி கேட்பார் என்று ஆடுகளை பலியிடுகிறார்கள். நம்மை காக்கும் தெய்வம் ஒரு துரும்புக்கு கூட தீங்கு நி¬ன்க்க மாட்டாரே. அவரா பலிகேட்பார்: இது ஒரு புறம் இருந்துட்டு போகட்டும். அந்த அக்கரஹார மக்கள் இதைவிட கொடுமை படுத்துகிறார்கள். என்னை போன்ற ஜுவ ராசிகளை அவர்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. என் பகவான் சீனிவாசன் சித்திரா பௌர்னமி தோறும் மலையில் இருந்து பொன்னிற சப்பரத்தில் இறங்கி தாமிரபரணி ஆற்றுக்கு செல்வாரே.அந்த பொன்னான நேரத்தினையும், அன்று இரவு ஆற்றங்கரையில் இருந்து விட்டு, அதி காலையில் தாமிரபரணியில் வெள்ளை சாத்தி இறங்கி விளையாடி மீனை வெட்டி விளையாடுவாரே. என்னா கண்கொள்ளா காட்சி. அதையெல்லாம் காண விட மாட்டேன் என்கிறார்கள். அதன் பிறகு என் பகவான் பச்சை சாத்தி என் பகவான் சீனிவாசன் மலை மேல் ஏறும் கண்கொள்ளா காட்சி நடைபெறுமே. அந்த காட்சியை மணக்கண் முன்னால் தானே காண்கிறேன். நேரில் காண முடியாமல் தவிக்கிறேனே. நான் சாணன் குலத்தில் பிறந்த காரணத்தினால் என்னை பிரமாணக்குடிக்குள் விட மாட்டேன் என்கிறார்களே. என் பகவானை பார்க்க முடியாமல் தடுக்கிறார்களே.
“இறைவா என் தெய்வமே. நீ உண்மையான தெய்வமாக இருந்தால் என்னை எப்படியாவது உன்னை பார்க்க அனுமதி கொடு” என்று சொல்லி அப்படியே அமர்ந்தார்.
அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. கடவுளே. “இந்த இரண்டு மக்களிடம் இருந்து என்னை காப்பாற்று. என்னை காண , என் குடிசைக்கு வா அரசே”. என வெங்கடேச பெருமானை நோக்கி கை நோக்கி குவிந்து நின்றார். இவரை இப்போது யாராவது பார்த்தால் உண்மையிலேயே இவர் பையித்திய காரன்தான் என்று நினைப்பார்கள்.
முப்பிடாதி வகுள கிரி மலையை நோக்கி கத்தினார் “நாராயணா, வெங்கடேசா. இவர்களைக் காப்பாற்ற வழியே இல்லையா?” என்று வேதனையோடு சொன்னார். இனி உயிரோடு இருக்க கூடாது. என் மக்களை அறியாமையில் இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. என் பகவானை காண பிரமாணக்குடிக்கு செல்ல முடியவில்லை. இந்த இரண்டு காரியமும் செய்யாமல் இந்த உலகில் நான் இருந்து என்ன பயன். நான் சாகவேண்டும். நரகத்திலோ, சொர்க்கத்திலோ என் பகவானை காணவேண்டும் என்று நினைத்த அவர் கண்ணை மூடிக்கொண்டு அந்த வெள்ளத்தில் இறங்கினார்.
இனி நாம் உயிரோடு இருக்க கூடாது. இந்த வெள்ளத்தில் இறங்கி உயிரை விட்டு விட வேண்டும் என்று நினைத்து இறங்கியவர் கண்ணை மூடிக்கொண்டு அந்த நீரோட்டம் மிகுந்த தண்ணீரில் நின்றார். எப்படியும் சிறிது நேரத்தில் வெள்ளம் அடித்துச்சென்று விடும். நமது உயிர் போய் விடும் என்று நினைத்தார். ஆனால் என்ன ஆச்சரியம் இவரை யாரோ தூக்கி கொண்டு வைத்தார் போல் மறுகரையில் விட்டு சென்றது போல் உணர்ந்தார். ஆம் . இப்போது முப்பிடாதி எதிர்கரையில் எந்தவொரு பாதிப்பும் இன்றி நின்றார்.
“இது என்ன மாயம். வெங்கடேசா. எனக்கு சாகவும் விதி இல்லையா?” என்று தவித்தார்.
அப்போது அங்கே ஒரு பிராமணச் சிறுவன் ஒருவன் தோன்றினான். தொப்பை வயிறு: பூணூல் போட்டு இருந்தான். ஏர் நெற்றி. அதன் மேலே இழுத்து வாரி பிண்ணியிருந்தான். பின்னால் ஒரு குடும்பி: இவரைப் பார்த்து சிலிர்த்து நின்றது. பூஜை வைக்கும் பிராமணர்கள் வேஷ்டி கட்டியிருபபது போலவே கட்டியிருந்தான். அது ம்ட்டுமல்லாமல் வெற்று மார்பில் சந்தனம் பூசியிருநதான். அவன் அருகில் வந்த போதே நறுமணம் மூக்கை துளைத்தது. தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த குழந்தையோ என எண்ணத்தோன்றியது.
இவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே நின்றான் அந்தச் சிறுவன்.
முப்பிடாதிக்கு ஆச்சரியமாக இருநதது. “இந்த நடு ராத்திரியில் குழந்தை பிரமாண சாமி இந்த கரையில் வந்து நிற்கிறார். இவிய ஊருக்கும் நமக்கும் கிட்டத்தட்ட மூனு மைல்தூரம் இருக்குமே. இவியளுக்கு இங்க என்ன ஜோலி” என்று நினைத்தார்.
முப்பிடாதி அருகில் சென்று, “சுவாமி தாங்கள் சிறுவர், நீங்கள் ஏன் இந்த வேளையில் இங்கு வந்தீர்கள், உங்கள் சொந்த ஊர் எது, நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளைச் சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் சிறுவனோ சிரித்துக்கொண்டே “எனக்கு சொந்த ஊர் ஏழுமலை. நான் தற்சமயம் கருங்குளம் வருளகிரியில் குடியிருக்கிறேன். அதோ கிளாக்குளம் தெரியுதே அந்த ஊரில் எனக்கு நிலம் இருக்கு. நிறைய பனைமரம் இருக்கு. நான் அங்கேதான் போகனும். எனக்கு அங்கே வேண்டப்பட்ட ஒருவர் இருக்கிறார் அவரைப் பார்க்க போகிறேன்” என்றான்.
முப்பிடாதி ஆச்சரியத்தோடு பார்த்தார். பிராமணருக்குக் கிளாக்குளத்தில் இடம் ஏது, அங்குள்ள மக்களோ மாமிச பிரியர்கள். பனையேறி வாழ்க்கை நடத்துபவர்கள். அங்கு கோயிலுக்கு சொந்தமான நிலம் உண்டு. அங்கே இருக்கிற பனை மரங்களில் பனை ஏறி பயினி இறக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த மக்கள். ஆனால் தனிப்பட்ட பிரமாணர்களுக்கு அங்கு இடமோ, வயலோ, தோட்டம் துறவோ இல்லையே. அது மட்டுமல்லாமல் இந்த பிராமணரோ சைவம். குழந்தையாக இருக்கிறார். இவருக்கு எப்படி அங்கே நிலம் இருக்க முடியும்?. அப்படியே இடம் இருந்தாலும் இவியலோட அப்பாவோ உழவனோ பார்க்க வாரம இந்த குழந்தை சாமி பாக்க வருது. ஆச்சரியமா இருக்கே” என்று யோசித்தார்.
அதே நேரம் அவருக்கு அந்த சிறுவன் மேல் சந்தேகம் வந்தது. “இந்த இரவில் வந்து இந்த பொடி சாமி வெள்ளத்து கரையில் நிக்கே. உள்ளே விழுந்தால், நீச்சல் தெரியுமோ? தெரியாதோ? உயிர் போயிருமே. அப்படி உயிர் போனா அக்கிரஹாரத்து மக்களுக்கு யார் பதில் சொல்லுவா” என தவித்தார்.
இதனால் திக் பிரமை பிடித்தவர் போலவே நின்றார். “இந்த பையனை பிடித்து போய் அக்ராஹரத்தில் கொண்டு விட வேண்டும் என்று ஆசை. ஆனால் தொட முடியாதே. தொட்டால் தீட்டு அல்லவா?” என நினைத்தார்.
அப்போது அந்த குழந்தை சாமி முப்பிடாதியைத் தொட்டு, “என்ன வோய் நாடார். அசந்து போய் நிக்கிறாய். என்னை அந்தக் கரையில் கொண்டு விடும்வோய்?” என்றான்.
முப்பிடாதி அதிர்ந்தே போய் விட்டார். “இந்த சிறுவன் நம்மை தொடுகிறான். பெரிய பிராமணர்கள் பார்த்தால் நம்மை உண்டு இல்லை என பண்ணி விடுவார்களே. அதுவும் பிரமாணத் தீ அல்லவா. நாம் பிரமணர்களை தொட்டாலோ அவர்கள் நம்மை தொட்டாலோ எவ்வளவு பெரிய தீட்டு. அந்த தீட்டை இந்த சிறுவன் சாமி செய்து கொண்டு இருக்கிறாறே. பிராமணர்களை தொட்டால் நெருப்பை தொட்டது மாரின்னுலா சொல்லுவாங்க” என தவித்தார்.
“ஐயா, சாமி என்னைத் தொடாதீங்க தீட்டு” என்று கையை உதறினார் முப்பிடாதி. ஆனால் சிறுவனோ சிரித்துக் கொண்டே முப்பிடாதி உடலை இறுக்கப்பிடித்துக்கொண்டு மறு நிமிடர் சர் என்று அவர் தோளில் மீது ஏறி விட்டான்.
“ஐயா சாமி நான் கீழ்சாதியைச் சேர்ந்தவன். நீங்களோ மேல் ஜாதி காரவிய என்னை நீங்கள் தொடக்கூடாது. சாமி இறங்குங்க. நல்லா இருப்பிய இறங்குங்க. உங்க வீட்டில இருக்கிற பெரிய சாமிக பாத்தா எம் பாடு திண்டாட்டமாகி விடும் ” என்று பதறினார்.
“சரிதான் அப்பா. எனக்கு என் அப்பன் தோளில் ஏறுவதை விட, உன் தோளில் ஏறுவது தான் ரொம்ப பிடித்து இருக்கு. என்னைக் கொண்டு அக்கரையில் விடப்பா” என்று பிடிவாதமாக பேசினான் பிராமண சிறுவன். அதோடு மட்டுமல்லாமல் தோளில் உட்கார்ந்து கொண்ட அவன் உச்சி முடியை இறுக்கப்பிடித்துக்கொண்டான்.
“சாமி வேண்டாம் சாமி. வாய்க்கால் வெள்ளம் கரை புரண்டு ஓடுது. உமக்கு நிச்சல் தெரியாது. நீர் பாட்டுக்கு வாய்க்காலில போயிட்டா உங்க அப்பா அய்யருக்கு நான் எப்படி பதில் சொலலுவேன்” என்றார்.
“வரும் போது மட்டும் நிச்சல் அடிச்சா வந்தீருவே. நல்ல நியாயமா இருக்கு. உமக்கு மட்டும் ஒரு நியதி. எனக்கு ஒரு நியதியா? இறங்குவே வாய்க்கால் குள்ளே” என கட்டளையிட்டவுடன், அதிர்ந்தார் முபபிடாதி.
அந்த சிறுவனின் கட்டளையை மறுக்கவும் முடியவில்லை.
வேறுவழி தெரியாமல் முப்பிடாதி தோளில் சிறுவனை சுமந்தபடி வாய்க்காலில் இறங்கினார். தண்ணீர் இழுத்துக்கொண்டு சென்றது. நிச்சல் அடித்து எதிர்கரைக்கு வந்தார். தூரத்தில் இல்லிமாட்ன் கோயில் கோமரத்தாடி ஆதாழி வந்து வேகமாக ஆடிக்கொண்டிருந்தார். அந்த சத்தம் இவர்கள் இருவர் காதையையும் பிளந்தது.
எதிர்கரைக்கு வந்தவுடன் சிறுவன் மிகவும் கனக்க ஆரம்பித்து விட்டான். இவரால் பாரம் தாங்க முடியவில்லை. எனவே தடுமாறி கரையில விழுந்தார். “அப்படா ஒரு மட்டுக்கும் சாமியை சுமந்து தண்ணீரில விடமா இந்த பக்கம் கொண்டு வந்துட்டோம்” என பெரும் மூச்சு விட்டார்.
“என்ன கனம் கனக்காரு குழந்தை அய்யர். நெய்யா சாப்பிட்டு கொழுத்துபோய் இருப்பாரோ?” என மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
அதன் பின் தட்டுத்தடுமாறி விழுந்த அவர் எழுந்து தன் தலைப்பாகை கட்டினார். அதன் பின் திரும்பி பார்த்தார். சிறுவனை விட்ட இடத்தில் அவனை காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார்.
“அடப்பாவே நிறைய புதர் இருக்குமே. உள்ளே பாம்பு கீம்பு இருக்குமே இந்த குழந்தை சாமி எங்க போனாரு. அய்யோ” உடன் வந்த சிறுவனை தேடினார்.
அவருக்கு பயம் கொடுத்தது.
“அய்யோ சாமி. குழந்தை சாமி எங்க போனிய?”
முப்பிடாதி தவிக்க ஆரம்பித்து விட்டார்.
“ஐயோ வாய்க்காலில் சிறுவன் தவறி விழுந்து விட்டானோ” என்று கரையெல்லாம் தேடிப்பார்த்தார் சிறுவனைக் காணவில்லை.
சிறுவனைக் கரையில் இருந்து மறுகரைக்குக் கடத்தி கொண்டு வந்து கடைசியில் தொலைய வைத்து விட்டோமே என்று வருத்தப்பட்டடார்.
இனி என்ன செய்ய. ஊருக்குள் போனாலும் அடிப்பார்கள். அய்யமார் பிள்ளையை ஆத்தில விட்டதால மறுகரைக்கு போனாலும் உதைப்பார்கள்.
“வெங்கடேசா இது என்ன சோதனை” என தவித்தார்.
அங்கே ஒரு பனைமரம் இருந்தது. அதன் அடியில் அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார். அதன் பிறகு கதறி அழுதார். “என்னப்பா வெங்கடேச என்னை ஏன் இப்படி சோதிக்க” என குமுறினார்.
இதற்கிடையில் ஊருக்குள் சிவராமன் என்ற முப்பிடாதியின் நண்பர் இருந்தார். அவர் ஊரில் இருந்து அடித்து விரட்டியவர் என்ன ஆனாரோ என்று தேடி வந்தார். இருட்டில் அழுது கொண்டிருந்த முப்பிடாதியை பார்த்தார். அடி தாங்க முடியாமல் தான் அழுகிறார் என நினைத்தார். முப்பிடாதியை பார்த்து சிவராமன் ஆறுதல் சொல்லி ஊருக்குள் அழைத்தார்.
ஆனால் அவரிடம் சிறுவனை தூக்கி வந்த கதையையும், தன்னிடம் இருந்து அவன் காணாமல் போன கதையை முப்பிடாதி கூறினார்.
அப்போது தான் சிவராமனுக்கு நினைவுக்கு வந்தது. சற்று நேரத்துக்கு முன்னால் தன் எதிரே ஒரு பிராமணச்சிறுவன் சென்றான். இது யாருடா நம்ம ஊருல என கேட்ட போது, “என்ன பாக்குற இனிமே எனக்கு இதுதான் ஊருன்னு” சிரித்துக்கொண்டே போனான்.
“ஒருவேளை பக்கத்து ஊருல எதுவும் நாடகம் நடக்குதோ. கூத்து நடக்குதோ. தெரியலை அதுக்கு வந்த சிறுவனா இருக்குமோ. அவன் எதுக்கு நம்ம ஊருக்கு! அதுவும் கோயில் கொடை நடக்கிற ஊருக்கு வந்துருக்கான்” என நினைத்துக்கொண்டே முப்பிடாதியை பார்க்க வந்தான். தற்போது முப்பிடாதி சொன்னவுடன். அதிர்ச்சி அடைந்தான்.
“ முப்பிடாதி. “ஏடே அந்த சிறுவன் ஊருக்குள் போவதை நான் பார்த்தேன் டே” என்று சிவராமன் கூறினான். இருவரும் சிறுவனைத் தேடி ஊருக்குள் ஒடினார்கள். அங்கு பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. கடைசியில் ஓலைகள் குவித்து வைத்திருக்கும் ஒரு இடத்தில் சிறுவன் சிரித்துக்கொண்டே இருந்தான். அதைப் பார்த்தவர்கள் ஓலைகுவியல் அருகே ஓடினார்கள்.
ஆனால் அருகில் சென்றவுடன் அங்கிருந்த சிறுவனைக் காணவில்லை. தீடீரென்று மறைந்தான்.
“சாமி. சாமி”. என அலறினார் முப்பிடாதி.
ஓலைகுவியலுக்குள் தேடி பார்த்த போது அங்கு “கிளாக்குளம் ஸ்ரீவெங்கடஷேபெருமான்” என்ற வாசகம் மட்டும் இருந்தது. அதிர்ச்சி அடைந்தார். முப்பிடாதி ஆவேசம் கொண்டவரானார். சித்த பிரமை பிடித்தவர் போல சத்தமாக இறைவனை நோக்கி வேண்டினார்.
“ஓம் அரிஹரஹரி, கோபாலா, முரளிதரா, ராதா மனோகரா, திருராமா, ரகுரமா, பரசுராமா, பல ராமா, நரசிங்கா, கஜபதி, ரகுபதி, கிருஷ்ணா ஆதிமூலம் என்ற யானைக்கு அபயம் காத்த கஜேந்திரா, ராமா” என்று ஆவேசமாகச் சத்தம் போட்டார். இந்தச் சத்தம் கேட்டு கிளாக்குளம் கிராமம் அதிர்ந்தது.
இந்த சம்பவம் காட்டு தீ போல ஊருக்குள் பரவியது.
இல்லி மாடன் கோவிலில் நின்ற அனைவரது காதிலும் அசரீரி ஒலித்ததுபோல இவரது வார்த்தை ஒலித்தது. வீடு தோறும் ஆள் சென்று எழுப்புவது போல அதன் எதிரொலி இருந்தது. ஊர் மக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். உடனே மூப்பிடாதி அருகில் இருந்த பனை ஒலைகளை அம்பாராமாகக் குவித்தார். அந்த குவியலுக்குள் இறங்கினார். உடனே அவரது நண்பர் சிவராமனைக் கூப்பிட்டு அம்பாரத்தில் தீயை கொளுத்த கூறினார். அதன்படி சிவராமன் முப்பிடாதி இருந்த ஒலை குவியலைத் தீயிட்டு கொளுத்தினார்.
என்ன ஆச்சரியம் அக்னி சுவாலையில் கருகிவிடுவார் முப்பிடாதி என்று நினைத்த மக்கள் அனைவரும் ஆச்சரித்தோடு பார்த்தனர்.
ஆனால் தீ எரிந்து முடிந்த பிறகு பொற்தாமரை குளத்தில் குளித்துவிட்டு வெளியே வந்தவர் போலவே முப்பிடாதி வெளியே வந்தார். அவருக்கு எந்தவொரு காயமும் இல்லை.
ஆச்சரியத்துடன் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். உடனே வெறி வந்தவர் போல் கிளம்பினார். அப்போது அங்கே கிடந்த கடப்பாரையைத் தூக்கி கொண்டு முப்பிடாதி இல்லிமாடன் கோவிலை இடித்து தரைமட்டமாக ஆக்கினார். “நான் ஒருவனே தெய்வம். நானே கிளாக்குளம் ஸ்ரீவெங்கடேச பெருமான்” என்று கத்தினார்.
யாருமே எதிர்த்து பேசவில்லை. அவர் செயலை கண்டிக்கவும் இல்லை. அவர்கள் அனைவருக்கும் புரிந்தது. கருங்குளம் வெங்கிடாசலபதி நம்ம ஊருக்கு குழந்தை ரூபமாக வந்து விட்டார். இங்கே காணாமல் போனதால் இங்கேயே தங்கி விட்டார். இனிமே நம்மை காக்கும் தெயவம் வெங்கடேச பெருமான் தான். முப்பிடாதி நாடார் தோளில் ஏறிவந்தவர் வெங்கடேச பெருமான் தான் என உறுதி செய்தனர்.
பிரமாணர்கள் மட்டுமே வணங்கிய தெய்வம். இப்போது இங்கே வந்து விட்டார். நாம் தொடவே முடியாது என்ற இறைவன் தானே முப்பிடாதி நாடாரை தொட்டு எங்கள் தெய்வமாக மாறி விட்டார். தீண்டாமையை விரட்டிய ஸ்ரீவேங்கடேசபெருமான் நமது ஊருக்கு வந்து விட்டார்.
இங்கு ஸ்ரீவெங்கடேச பெருமான் கோவில் கட்டப்பட்டது. காக்கும் தெய்வமாக இக் கோயில் போற்றப்படுகிறது. இங்கு ஆவணி மாதம் மிக விமர்ச்சையா திருவிழா கொண்டாடப்படுகிறது. முப்பிடாதியையும் இவ்வூர் மக்களை தெய்வமாக போற்றினார்கள். முப்பிடாதி அன்று கூறியபடியே இதுவரை குழந்தை பெற்ற பெண்கள் பச்சை தண்ணீரில் தான் குளிப்பார்கள்.
குழந்தைகளுக்குச் சேனை என்று சொல்லக்கூடிய முதல் தண்ணீரையே பச்சை தண்ணீர்தான் கொடுப்பார்கள். அது கார்த்திகை, மார்கழி குளிர்காலமாக இருந்தாலும் சரி. இந்த ஊர் பெண்கள் வெளியூரில் வாழ்க்கைபட்டுச் சென்றாலும் இதையே பின்பற்றி வருகின்றனர். அதுமட்டுமல்ல இந்த கோயிலில் கருங்குளம் வெங்கிடாசலபதி கோயிலில் என்ன வைபவம் நடக்குமோ. அந்த வைபவங்கள் எல்லாம் இங்கே நடக்கிறது.
புரட்டாசியில் கருடசேவை. வைகுண்டஏகாதசி விழா, சித்திராபௌர்ணமி விழாவுடன் ஆவணி மாதம் கொடை விழாவும் நடக்கும்.
ஆக பெருந்தெய்வம் என்று போற்றப்படக்கூடிய தெய்வமே நம் மக்களை தேடி வந்திருக்கிறார். அப்படியிருக்கும் போது நாம் ஏன் மற்ற தெய்வங்களை தேடி போகவேண்டும்.
ராஜதுரை தன் நிலைக்கு வந்தான். “தாத்தா எல்லாம் சரித்தான். இனிமே நாம கூரை வீடு கட்டக்கூடாது. நம்ம கிட்ட பொன்னும் இல்லை பொருளும் இல்லை. ஆனால் உழைக்க உடம்பு மட்டும் இருக்கு. நாம காரை வீடு கட்டணும். என்ன செய்யலாம்” என்றான்.
“ஏடே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படக்கூடாதுடே” உலக்க நாடார் சொன்னார்.
“ஏன் ஆசைப்படக்கூடாது தாத்தா. முயற்சி பண்ணுவோம்”
அவனை திரு திருவென பார்த்தனர் இருவரும்.
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவாள்)


