தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதி என்று அழைக்கப்படும் அவைகளில் முதலாவதாகவும் சூரிய அம்சமாகவும் ஸ்ரீவைகுண்டம் திருக்கோவில் விளங்குகிறது. மூலவா¢ ஸ்ரீவைகுண்டநாதன். தாயார் வைகுண்டவல்லி பூதேவி. கால தூஷகன் என்னும் திருடன் ஒருவன் இப்பெருமானை வழிபட்டு திருடச் செல்வானாம். திருடிய செல்வத்தில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாகவும் தருவான். இவன் கூட்டத்தினர் அரண்மனையில் திருடுகையில் பிடிபடும் பொழுது கால தூஷகன் வைகுண்ட நாதனிடம் சரண் அடைய பெருமாளே காலதூஷகன் வேடத்தில் அரண்மைனைக்கு வந்து தன் சுயரூபத்தை காட்டியருள அடிபணிந்து நின்ற மன்னன் மகிழ்ந்து கள்ளபிரான் என்று கூறி வழிபடலானார்.
கள்ளபிரானாக காட்சிதரும் மூலவருக்கு சித்திரை பிரம்மோட்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமி கள்ளர்பிரான் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், ஷேஷ வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி வீதி உலா நடைந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் திருவிழாவான இன்று திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமி கள்ளபிரான் திருத்தேரில் எழுந்தருளினார். தீபாராதனைக்கு பின்னர் கோவிந்தா கோபாலா கோஷத்துடன் தேரடி வீதிகளில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்துள்ளனர்.


