திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு க்யூ ஆர் கோடு மூலம் காணிக்கை செலுத்தும் முறையை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு எளிதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிட், விரைவு பதில் குறியீடு (QR Code) மூலமாக நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கையை திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலுக்கு செலுத்தும் முறையை அறிமுகம் செய்தது. விழாவில் வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளர் சுந்தரேஷ்குமார் வரவேற்றார்.
திருக்கோவில் வளாகத்தில் வங்கியின் தலைமை நிதி அதிகாரி கிருஷ்ணன், அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், குலசை முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராம சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் QR Code வசதியை துவக்கி வைத்தார்.
வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் பணம் எண்ணும் இயந்திரத்தை திருக்கோவிலுக்கு வழங்கினார். விழாவில் வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள், திருக்கோவில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


