தமிழ் வருடப்பிறப்பு சித்திரை தினத்தை முன்னிட்டு விவசாயிகள் சிந்தலக்கரை கிராமத்தில் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நல்ல மழை பெய்து, இருபோகம் விளைந்து, நீர்நிலைகள் பெருகி, மகசூல் செழித்து, அனைத்து உயிர்களுக்கும் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விளைந்த மகசூலுக்கு உரிய விலை கிடைத்திடவும், கால்நடைகளுக்கு பசுந்தீவணங்கள் கிடைத்திடவும், விவசாய பணியின் போது இயற்கை இடர்பாடுகள் இல்லாமல் இருக்கவும் ஊர் பொது கோவில் நிலங்களில் அனைத்து டிராக்டர்களும் சென்று கிழக்கு நோக்கி வன்னிமரத்தடியில் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விதைவித்துக்கள், விவசாய கருவிகள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து டிராக்டர்களுக்கு தீபாராதணை காண்பித்து சூரியனை வழிபட்டு சிந்தலக்கரை கிராம கமிட்டி தலைவர் எல்.சுப்பையா தலைமையில் பொன்னேர் எனப்படும் நாளேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் உழவு செய்துவிட்டு வீடு திரும்பிய ஆண்களுக்கு ஆரத்தி எடுத்து பானக்காரம் என்னும் பானம் கொடுக்கப்பட்டது. விழாவில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் உள்பட ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.


