தூத்துக்குடியில் கருணை அடிப்படையில் 7 பேருக்கு சமூக நலத்துறையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் இன்று தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 7 பேருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணி நியமன ஆணைகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, நகர்ப்புற ஊட்டச்சத்து அலுவலர் ரூபி, திருச்செந்தூர் நகர ஊட்டச்சத்து அலுவலர் காயத்ரி,மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
நிதியுதவி
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், தூய்மை பாரத இயக்க, வட்டார ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்த இராதாகிருஷ்ணன் சாலை விபத்தில் மரணமடைந்தார். அன்னாருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவரது குடும்ப எதிர்காலத்தினை பாதுகாக்க தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து பங்களிப்பாக ரூ.3.00 லட்சம் பெறப்பட்டது. இத்தொகையினை அமைச்சர் இன்று இராதாகிருஷ்ணன் மனைவி வளர்மதி என்பவரிடம் ரூ.3.00 லட்சம் மற்றும் தன்னுடைய பங்களிப்பாக ரூ.10,000 வழங்கினார்.
கணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கி அவரது குடும்பத்தை பாதுகாத்திடுமாறும், மேலும் இதுபோன்று (தொகுப்பூதியம்) தற்காலிக பணியாளர்கள் பணியிடை காலமாகும் நிகழ்வில் அவர்தம் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து குறைந்தபட்சம் ரூ.5.00 லட்சம் வழங்கிடவும், குழுக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பயன்பெற அரசுக்கு பரிந்துரை செய்திடவும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


