தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பெபின் செல்வ பிரிட்டோ மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநாபமங்கலம் குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (20), வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர்களான பேச்சித்துரை (23), அடைக்கலம் (26) மற்றும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த பொன்இசக்கி (19) என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே போலீசார் தேவராஜ், பேச்சித்துரை, அடைக்கலம் மற்றும் பொன்இசக்கி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட தேவராஜ் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 7 வழக்குகளும், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


