இன்று முதல்(28.03.2023) நெல்லை – திருச்செந்தூர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டது. அதிகாலை 6 மணிக்கு இந்த வழியாக முதல் முதலாக செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரை நோக்கி மின்சார ரயிலாக சென்றது. அதன் பின் மற்ற ரயில்களும் மின் எஞ்சின் பொறுத்தப்பட்டு இயக்கப்பட்டது. இந்த ரயில்களை செய்துங்கநல்லூரில் வைத்து பயணிகள் வரவேற்றனர். பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். நிலைய அதிகாரி சித்திரைபுத்திரன், ரயில் எஞ்சின் ஓட்டுனர் ராம்குமார், சிவகுமார், கார்டு ராஜாராமன் ஆகியோரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் கிராசிங் ரயில் நிலையமாகும். தற்போது நாங்கள் வரவேற்பு கொடுக்கும் போது கூட திருச்செந்தூர் பாஸஞ்சர் ரயிலும் , செந்தூர் எக்ஸ்பிரசும் கிராசிங் செய்கிறது. அனைத்து எக்ஸ் பிரஸ் ரயிலும் இந்த ரயில் நிலையத்தில் நின்றுசெல்கிறது. எனவே நெல்லைக்கு அடுத்த படியாக பெரிய ரயில்வே ஸ்டேசன் ஆன செய்துங்கநல்லூரில் நாங்கள் பயணிகள் சார்பில் மின்சார ரயிலுக்கு வரவேற்பு கொடுத்துள்ளோம் . ஆனால் இந்த ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்வதில்லை. எனவே அந்த ரயிலை நின்று செல்ல வேண்டி இன்று முதல் 1 ந்ததி வரை செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் தங்கள் செல் போன் வாயிலாக வாட்ஸ் அப், இன்ஸ்ராகிராம், முகநூல், டிவிட்டர் போன்ற இணையம் வாயிலாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்லவேண்டும் என கோரிக்கை வைக்கும் பேராட்டத்தினை பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் துவக்கி வைத்துள்ளார். பயணிகளின் இந்த கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நயினார், பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், வார்டு உறுப்பினர் சுப்பையாபாண்டியன், தி.மு.க.வை சேர்ந்த அப்துல், தவ்கீத் ஜமாத்தை சேர்ந்த அப்துல் கனி, காங்கிரஸ் சித்திரை பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


