ஸ்ரீவைகுண்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மனு அளித்த திருநங்கைகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ சேவை மையம், ஆதார் மையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலக வளாகம் ஆகிவற்றை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று (29.03.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 27.03.2023 அன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டம் வசவப்பபுரம் கிராமம் இந்திராநகர் திருநங்கைகள் காலணியில் வசிக்கும் திருநங்கைகள் ஷிவானி மற்றும் பொன்னி ஆகியோர் திருநங்கைகள் உதவித்தொகை வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் உடனடியாக பரிசீலனை செய்து, திருநங்கைகள் 2 பேருக்கும் மாதம்தோறும் ரூ.1,500 உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பொறியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். பின்னர், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்பபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தினை ஆய்வு செய்தார். வசவப்பபுரம் ஊராட்சி இந்திராநகர் பகுதியில் திருநங்கைகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், வசவப்பபுரம் ஊராட்சி அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் வகுப்பறைகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, தலைமை ஆசிரியர் அவர்களிடம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். ஆய்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


