ராசுக்குட்டிக்கு அன்றும் ஆச்சி சொன்ன கதை கொஞ்சம் போரடித்துவிட்டது. எனவே புதிய கதை கேட்க ஆசைப்பட்டான்.
“ஆச்சி பழைய கதையா சொல்லுதியே. வித்தியாசமா ஏதாவது புதுக்கதை சொல்லேன்” ராசுக்குட்டி கேட்டவுடன் ஆச்சிக்கு கோபம் வந்தது.
“வெறுவாக்கெட்ட பயலை. நான் எவ்வளவு நல்ல நல்ல கதை சொல்லுதேன். அது உனக்கு போதலை. வித்தியசமாக கேக்குதாக்கும்” என்றாள்.
“ பின்னே என்ன ஆச்சி. எப்ப பாத்தாலும் பழைய பாடதி கதையே சொல்லுத. கொஞ்சம் நல்ல கதையாத்தான் சொல்லேன்”. ராசுக்குட்டி சிரித்தான்.
“படுவா ராஸ்கோல். கேலியா பண்ணுற . தோலை உறிச்சி புடுவேன், தோலை”. ஆச்சிக்கு கோபம் வந்தது.
“அய். தோலை உறிச்சி புடுவாளாம். நான் என்ன ஆட்டுக்குட்டியா தோலை உரிக்க”
ராசுக்குட்டிககு சிரிப்பு வந்தது.
அடக்கி கொண்டான். “ஆச்சி மனுசன் தோலை எங்கையாவது உரிப்பாவளா. நான் கேள்வி படலையே”.
“ஆமாம் இவரு 50 வயசு கிழவன். இவரு கேள்விபடாதது இங்க இருக்கு”. “சின்ன பய பேசுற பேச்சை பாரு” என மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
ஆச்சி அமைதியா இருந்தாள். தோலை உறிச்சிபுடுவேன்னு சொல்றது எவ்வளவு பெரிய தண்டனை.
சின்ன பையன். விவரம் புரியாமல் கேட்கிறான். அந்த காலத்தில களவு செஞ்சா தண்டனையே தோலை உறிக்கிறதுதான் என இவனுக்கு எங்க தெரிய போவுது.
ஆச்சி மௌமாக இருந்தாள்.
“ என்ன ஆச்சி அமைதியா இருக்க. கேட்க கேள்விககு பதில் சொல்லலை”
ஆச்சி முறைத்து பார்த்தாள்.
“ம். முதலில உன்னை தோலை உறிக்கணும் அப்ப தான் தெரியும் அருமை”.
“அதைத்தான் சொல்லுதேன் ஆச்சி. தோலை உறிக்க முடியுமா? நான் என்ன ஆட்டுக்குட்டியா?” ராசுக்குட்டி தடுத்து சொன்னான்.
ஆச்சி சிரித்தாள்.
“ஏலேய் உனக்கு ஒரு கதை சொல்லுதேன் கேளு. அந்த கதையில அங்க மனிசன் தோலையே உறிச்சி புடுவாவ”.
ஆச்சரியப்பட்டான் ராசுக்குட்டி “என்ன ஆச்சி சொல்லுத”
ஆமாம். ஒரு ஊருல தப்பு பண்ணினா மனிசன் தோலை உரிச்சி புடுவாவ”
“அப்படியா எங்க ஆச்சி”. ராசுக்குட்டி ஆர்வமாக கேட்டான்.
“நாம தாமிரபரணி ஆத்தகரையில சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு போவுமுலா யாபகம் இருக்கா”.
“ஆமா ஆச்சி ஆடி அமாவாசை அன்னைக்கு நாம போமுல்லா. அங்க ராஜா மாரி ஒருத்தரு இருப்பாவளே”. சிங்கம்பட்டி ராஜா தர்பாருல இருப்பதை நினைவு படுத்தினான் ராசுக்குட்டி.
“ஆங் நல்லா நியாபகம் வச்சிருக்க. அவுக தான் சிங்கம்பட்டி ராஜா”.
“ராஜாவா”சிரித்தான். “இப்ப ராஜா இருக்காவுல சினிமாவில தான் பாத்து இருக்கேன். நேரில அங்கத்தான் பாத்தேன்”
“ஆமாம் நம்ம ஊருல பட்டங்கட்டுன ராஜா. அவுக சாமி மாரி. அதனாலத்தான் தீ குழி இறங்குற சுடலைமாட சாமியாடிக. ராஜா உததரவு ராஜா உத்தரவுன்னு ராஜா கிட்ட உத்தரவு வாங்கி கிட்டு இறங்குவாவ”.
“ஆச்சி. ராஜான்னா அரண்மனை மாளிகை எல்லாம் இருக்கணுமே”.
“இருக்கே அவுகளுக்குதான் ஊருக்குள்ள அரண்மனை இருக்கே. அந்த மலையில 80 ஆயிரம் ஏக்கர் நிலமும் உண்டு. அதை சேர நாட்டு ராஜா கொடுத்து இருக்காரு”.
ஆச்சி பழங்காலத்து கதையெல்லாம் நினைவு படுத்தினாள்.
“அய் ஆச்சி. ராசா கதைன்னான எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆச்சி எனக்கு ராஜா கதை சொல்லு ஆச்சி”. ராசுக்குட்டி பிடிவாதம் பிடித்தான்.
ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“அந்த காலத்தில கேரளா பக்கம் மார்த்தாண்ட வர்மான்னு ஒரு ராஜா இருந்து இருக்காவ. அவுகளுக்கு அவுக சொந்தகாரங்க எட்டு வீட்டு பிள்ளைமாருக்கும் பயங்கரமா சண்டை வந்து இருக்கு. ஒரு காலகட்டத்தில ராஜா செத்து போயிட்டாவ. அவுக வாரிசு சின்ன குழந்தை தான் இருந்து இருக்கு. அந்த கொழந்தையையும் கருவருத்துடனுமுன்னு துடியா துடிச்சு நின்னுருக்காவ எட்டு வீட்டு பிள்ளைமாரு”.
“அடப்பாவமே”. அதிர்ச்சியானான் ராசுக்குட்டி.
“அதனால ராணி குழந்தையை தூக்கிட்டு பொதிகை மலை காட்டுக்குள்ள வந்து ஒளிஞ்சு கிடந்துருக்காவ. கடைசியில சிங்கம்பட்டி ராஜாவை பாத்து இருக்காவ. யாரு நீங்க என்ன விவரமுன்னு கேட்கும் போது, அவுக தான் சொந்த கதை சோக கதையெல்லாம் சொல்லியிருக்காவ”.
கதையை கேட்க ஆச்சி அருகில் உட்கார்ந்தான் ராசுக்குட்டி.
“எவ்வளவு பெரிய ராஜா. எவ்வளவு ராஜ்ஜியம் ஆண்டவிய. அவுக வாரிசுக்கே இந்த நிலையான்னு வருதப்பட்ட சிங்கம்பட்டி ராஜா அந்த ராணிக்கு எல்லாம உதவியும் செஞ்சு இருக்காவ. கடைசியில குழந்தைக்கு வில்வித்தை மொதக்கொண்டு எல்லா வித்தையையும் கத்து கொடுத்து இருக்காவ. ஒரு காலகட்டத்தில நிறைய படையை திரட்டிக்கிட்டு எட்டு வீட்டு பிள்ளைமாரை எதித்து சண்டை போட்டு ஜெயிச்சி இருக்காவ. அந்த சண்டையில சிங்கபட்டி ராஜாவோட மூத்த பிள்ளை, அதான் இளவரசன் வேல் கம்பு குத்தி இறந்து போயிட்டாவ”.
“யய்யாடி” ராசுக்குட்டி ரசித்து கேட்டான். ஆச்சி தொடர்ந்தாள்.
“அவ்வளவு தான் மார்த்தாண்ட ராஜா வெலவலத்து போயிட்டாவ. நமக்கு ஒத்தாசையா வந்தரு உயிரு போயிட்டே. சிங்கம்பட்டி ராஜாவுக்கு என்ன பதில் சொல்லப்போறோமுன்னு தவிச்சு போயிட்டாவ. ஆனாலும் மனம் தளராம சிங்கம்பட்டி ராஜா வை சந்திச்சாரு”.
“ராஜா வெற்றி நமக்கு தான் கிடைச்சுது. ஆனா உங்க பிள்ளை போருல நெஞ்சில அம்பு பாஞ்சு செத்து போயிட்டாவ. அவுக இழப்பு தாங்க முடியாது தான் ஆனாலும் உங்களுக்கு நான் என்ன வேணுமுனாலும் செய்றேன்னு சொல்லியிருக்காவ. கொஞ்ச நேரம் யோசிச்சு பாத்தாவ சிங்கம்பட்டி ராஜா. அப்புறம் மனசை தேத்திககிட்டாவ”
“அவுகளும், சரி நம்ம மவன் புறமுதுகிட்டு ஒடலையே நேருக்கு நேர் மோதிதான் செத்துபோயிட்டான். அதுனால தப்பு ஒண்ணுமில்லை. இதுக்கு போய் இழப்பு என்ன செய்ய மகராஜா. அப்படின்னு சொல்லிட்டாவ. ஆனா சேர மன்னர் விடலை. இல்லை. நீங்க ஏதாட்டும் கேளுங்க. நான் உங்களுக்கு செஞ்சே தீரணுமுன்னார். சிங்கம்பட்டி ராஜாவும், சரி இந்த காட்டுக்குள்ள எங்களுக்கு குச்சி ஒடிக்க காடு வேணுமுன்னு கேட்டு இருக்காவ. உடனே மார்த்தாண்ட ராஜா உம்ம வாரிசே என் வெற்றிக்காக கொடுத்துறுக்கீரு. குச்சி ஒடிக்க காடு என்ன காடு. 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வச்சிகாருமுன்னு பொதிகை மலையையே எழுதி வைச்சிபுட்டாவ”. ஆச்சி மூச்சு விட்டு நிறுத்தாள்.
“அடேங்கப்பா. 80 ஆயிரமா. அப்படின்னா எத்தனை சைவரு”. ராசுக்குட்டி அசடு வழிந்தான்.
“அது இருக்கட்டுமுடே. நான் சொல்ற கதையை கேளு. கடைசியில ராஜாவுக்கு கொடுத்த இடத்தில நிறைய தீர்த்த கட்டம் இருந்துருக்கு. அதான் பாணதீர்த்த்ம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தமுன்னு இருந்து இருக்கு. அந்த தீர்த்தத்துக்கு அதிபதி தீர்த்தபதி ராஜான்னு இவுகளுக்கு வடக்க இருந்து வந்த சாமியாரு பட்டத்தை கொடுத்து ட்டு போயிட்டாரு”.
ஆச்சியின் கதை நீண்டு கொண்டே இருந்தது. ராசுக்குட்டி இடைமறித்தான்.
“ஆச்சி. இந்த ராஜாவுக்கும் தோலை உறிச்சி புடுவேன்னுக்கும் என்ன சம்பந்தம்”.
“சொல்லுதேன் கேளு”.
“சிங்கம்பட்டி ராஜா ரொம்ப கெடு பிடியான ஆளு. ஜமீன்குள்ளே யாரும் களவு செஞ்சு புடககூடாது. அப்படி செஞ்சாச்சான்னா அம்புடுத்தான்”.
“என்ன செய்வாவ?”.
“ஒரு சணல் சாக்கை எடுத்து விரிப்பாவ. அது மேலே உப்பை பரத்துவாவ. அப்புறம் அந்த களவாணி பயலை அதுல விடியவிடிய படுக்க வைப்பாவ. காலையில எழுந்து சாக்கையும் அந்த களவாணி பயலையும் பிரிச்சா தோலு உறிஞ்சுகிட்டு வந்துரும்”.
“யம்மா வலிக்குமே”.
“வலிக்கத்தான் செய்யும். சும்மாவா களவாணிக்கு இதுதான் தண்டனை தோலை உறிச்ச பொறவு எவனாவது திருடுவான. திருடவே மாட்டான்”.
“எம்மாடியோவ். எவ்வளவு பெரிய தண்டனை”.
“ஆமாம் இதுதான் இங்க யாராவது சேட்டை பண்ணினா தோலை உறிச்சி புடுவேன்னு சொல்லுவாவ. ஆமாம்”.
“ஆச்சி. தோலை உறிச்சி புடுவேன்னு சொல்லுறத்துக்கு இப்படியா கதை”.
“ஆமாம். சிங்கம்பட்டி ராஜா தீர்த்தபதி ராஜா அடி அமாவாசை அன்னைக்கு ராஜ தர்பாருல சொரிமுத்து அய்யனார் கோயில இருப்பவா. நீயும் தான் பாத்து இருக்கீயே. அவுக முன்னோர்கள் எல்லோரும் பெரிய ஆளாத்தான் இருந்தாவ. ரொம்ப பேமசாவும் இருந்து இருக்காவ”.
“அப்படியா ஆச்சி. அவுக அப்படி என்ன செஞ்சாவ”.
“அவுகளை பத்தி ஒரே ஒரு கதை மட்டும் சொல்லுதேன் கேளு”
ஆச்சி ராசுக்குட்டியிடம் பேசி விட்டு கதையை சொல்ல ஆரம்பித்தாள்.
“ராஜாவோட தாத்தா ஒருத்தரு காட்டுக்கு வேட்டைக்கு போயிருக்காரு. அங்க ஒரு யானையை வேட்டையாடி இருக்காரு. அவருக்கு ஒரு ஆசை. நம்ம இவ்வளவு பெரிய யானையை கொன்னுருக்கோம். இது ஊருகாட்டுக்கு தெரியணுமே என்ன செய்யலாமுன்னு யோசிச்சு இருக்காரு . உடனே அவருக்கு ஒரு ஐடியோ தோணுயிருக்கு. உடனே அவுக மலையை விட்டு கீழே இறங்கி வந்தாவ. நேரா திருநெல்வேலி பஜாருக்கு போய் அங்க ஒரு போட்டோ காரரை பிடிச்சு இருக்காவ. அவுகளை அம்பாசிட்டர் காருல கூட்டிட்டு வந்து அரண்மனையில தங்க வச்சியிருக்காவ . மறு நாளு விடிஞ்சும் விடியாமலும் அவுகள கூட்டிட்டு நடைபயணமா மலைக்கு போயிருக்காவ. இரண்டு நாள் கழிச்சி யானை கிடந்த இடத்திலபோய் பாத்துருக்காவ. யானை செத்து அழுகி போய் கிடந்து இருக்கு. சும்மா ஊதி முகம் வீங்கி கிடந்துருக்கு. அது மேலே ராஜா ஏறி, துப்பாக்கியை வச்சிக்கிட்டுபோஸ் கொடுத்து போட்டோ எடுத்துருக்காவ”.
ராசுக்குட்டிக்கு சிரிப்பாக இருந்தது. ஆனாலும் எவ்வளவு மெனக்கெட்டு இருக்காரு ராஜா என ஆச்சரியப்பட்டான்.
“இப்பவும் அரண்மனையில இந்த போட்டோவை பிரேம் பண்ணி போடடுருக்காவ ராஜா”.
சிரித்தாள் ஆச்சி.
ராசுக்குட்டி கேட்டான். “நல்லா இருக்கே. ஆனா இப்படியெல்லாம செய்யவாவளா?”.
“செஞ்சிருக்காவளே. இதைதான் நம்ம ஊருல இருந்து அரண்மனைக்கு வேலைக்கு போறவிய பாத்துட்டு எங்கிட்ட வந்து சொன்னவா”. என்றாள் ஆச்சி.
ஆச்சி சொன்ன கதை வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது போலவே இருந்தது.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)


