திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சன்னதி தெருவை சேர்ந்த மாசானம் மகன் சுடலை (29) இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக உள்ளார். அதேபோல் பாளையங்கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் ரங்கராஜன் இவர் பேருந்து நடத்துனராக இருந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று பயணிகளை ஏற்றுக் கொண்டு திருச்செந்தூருக்கு தனியார் பேருந்தை இயக்கி சென்றனர். பேருந்து ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்க பேருந்தில் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பேருந்தில் பிரேக் நிற்கவில்லை. பிரேக் உடைந்ததை அறிந்த ஓட்டுநர் சுடலை என்ன செய்வதென தெரியாமல் தவித்தார். பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கருங்குளம் பேருந்து நிலையத்திற்கு கீழ்பகுதியில் சாலையோரம் இருந்த அறிவிப்பு பலகையின் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் சுடலைக்கு மட்டும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
ஓட்டுநர் சுடலையில் சாதுர்யத்தால் 40க்கும் மேற்பட்ட பயணிகள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியதால் ஓட்டுநர் சுடலையை அப்பகுதியில் நின்ற பொதுமக்களும், தனியார் பேருந்தில் வந்த பயணிகளும் பாராட்டினர்.


