ஒட்டு மொத்த உயிரினங்களாலும் போற்றப்படத்தக்க இனம் ஒன்று உண்டெனில் அது பெண்ணினமே…! உயிரினத்தை உலகில் தொடர்ந்து உயிர்வாழ வைக்கும் பணியில் அதிகளவில் பங்கெடுப்பதும் பெண்ணினம் தான் எனில் மிகையல்ல.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட பெண் என்றாலே சாபக்கேடான ஒன்றாக கருதப்பட்டு உலகெங்கும் பெண்ணடிமைத்தனம் தலைவிரித்தாடிய சமூகத்தில்….
மங்கையா ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ – இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!
என்று கவிமணி தேசிய விநாயகம் என்ற கவிஞர் பெண்ணின் பெருமையை எடுத்துரைத்து மக்களை விழிப்படைய செய்தார், தமிழகத்தில்.
பெண்களின் இயல்பான உணர்வுகளை நசுக்கி , அடிமைகளாக்கி அதில் பெருமிதமடையும் இழிநிலமை நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நிலைப்பாடாகவே இருந்து வருகிறது.
விடுதலைப் புரட்சி
முதன்முதலில்
1789-ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பெண்கள் போராடினர் . இதுவே பெண்களின் விடுதலை வேட்கைக்கான செயல்பாட்டின் தொடக்கம் .இதனைத் தொடர்ந்து இப்பெண்ணுரிமைப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்குள் வேகமாகப் பரவியது.
பின்னர் பிரான்சில் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று பெண்கள் அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. இந்த நாள் தான் மகளிர் தினமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது .
ஆக , மகளிர் தினம் 19 ஆம் நூற்றாண்டுமுதல் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழிப்புணர்வு திருவிழா. அதிலும் சமீப காலமாக சமூக ஊடகங்களின் பெருக்கம் இந்தத் திருவிழாவை பரவலாக அனைவரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது.
எந்த ஒரு கொண்டாட்டமானாலும் பெரும்பாலும் ஏதோ ஒன்றின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காகவே முன்னெடுக்கப்படும்.
கோவில் திருவிழாக்கள் அத்தெய்வங்களின் சிறப்பை நினைவுகூரவும் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவுமே கொண்டாடப்படுகிறது. சமூகத் திருவிழாக்களும் அவ்வாறே அவற்றின் சிறப்பியல்புகளை வெளிக்காட்டும் நோக்குடன்தான் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் மகளிர் தினமும் பெண்களின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உள்ளபடி உணர்ந்து
பெண்ணினத்தின்மீது சமூகத்தின் பழையக் கட்டமைப்பினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனப்பான்மைகளை மாற்றியமைக்கும் நோக்குடன் ஆண்டுக்கொருமுறை உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
மகளிர்தினம் தேசியதினமானது
*************
மகளிர் தினம் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்படுவதற்கு கிளாரா ஜெட்கின் என்ற ஜெர்மானிய பெண்ணிய செயற்பாட்டாளரே மூலக் காரணமாக விளங்கினார்.
ஆண் ,பெண் என்ற இரு பாலினமும் ஒருமித்த ஆற்றலும் ஒன்றிற்கொன்று அவசியமான தேவையுமாக இயங்கி கொண்டிருப்பினும் ஆதிக்கப்போதையினால் திட்டமிட்டு அடிமைகளாக்கப்பட்ட பெண்ணினம் இந்த அதிநவீன அறிவியல் வளர்ச்சிக் காலகட்டத்திலும் பல நூற்றாண்டுகளாக ஆணினத்தின் மரபணுக்களில் கடத்தப்பட்டு வரும் ஆதிக்க உணர்வும் அடிமைத்தனத்தில் பழகிப் போன பெண்ணினத்தின் சிந்தனைகளின் தாக்கமும் மனித இனத்தின் மீண்டு எழ முடியாத அறியாமையின் வெளிப்பாடுகளே..!
இயற்கை இருவரையும் சரிபாதியாகவே படைத்திருந்தாலும், இயற்கையின் நியதியை மீறி பெண்ணினத்தை ஆணினம் தன்னினமாகக் கருதாமல் தனக்கான உடமையாக மட்டுமே கருதிச் செயல்படும் போக்கு ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வளர்ச்சியையும் முடக்கி போட்டுக் கொண்டிருக்கும் அறியாமையின் உச்சம்.
இத்தகைய அவலத்தை மனித இனம் அடையாதிருந்திருந்தால் இன்றைய மனிதயின வளர்ச்சி நிலைகளைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகம் அடைந்திருக்கும். அல்லது இன்னும் பல நூறாண்டுகளில் நாம் அடைய இருக்கும் அதீத வளர்ச்சி நிலையை இன்றே நாம் கண்டிருக்க முடியும்.
சிந்தனையாற்றலிலும் செயல்திறனிலும் ஆணிற்கு எவ்விதத்திலும் சளைக்காத பெண்ணினத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயல்பட விடாமல் அடக்கி வைக்கப்பட்டிருந்த கொடுமைதான் இந்த இழப்பிற்கு காரணம் என்பதை இன்றையப் பெண்களும் ஆண்களும் உணர்ந்து விட்டால் போதும், முழுமையான சமத்துவத்தை எளிதில் நடைமுறையாக்கி விடலாம்.
பெண் கடத்தல், கொலை, பாலியல் வன்புணர்வு, வரதட்சணை கொடுமை, போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
முற்றிலும் களையப்படும் வரை மகளிர் தினம் மேலும் மேலும் சிறப்பாக கொண்டாடப்பட்டே ஆக வேண்டும் .அதுவும் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமல்ல தினம் தினம் கொண்டாடப்பட வேண்டும்.
பாலின சமத்துவம் என்பது தங்கள் எதிர்பாலினத்தவரிடம் அன்பாகவோ வலுக்கட்டாயமாக அதட்டியோ கேட்டுப் பெற இயலாத ஒன்று. ஆண்களுக்கு இணையான தங்களது ஆற்றலையும் திறமைகளையும் நிரூபித்து உணர்த்தப்பட வேண்டிய சவால்.
அதைத் தான் பெண்கள் இன்று அறிவுப்பூர்வமாக செய்து வருகிறார்கள்.
பெண்களுக்கான பணிகளாக வீட்டுப் பராமரிப்பு பணிகளை மட்டுமே ஒதுக்கி கொடுத்திருந்தது இச்சமூகம். ஆனால் இன்று ஆண்களின் பணிகளாக ஒதுக்கப்பட்ட அனைத்துத் துறை பணிகளிலும் பெண்கள் துணிச்சலுடன் இறங்கி சாதிப்பதோடு ,குடும்ப பணிகளையும் தாங்களே செய்து தங்களது மிதமிஞ்சிய வலிமையை நிரூபித்து வருகிறார்கள்.
புரிதலே நாகரீக நகர்வு
**********
பெண்கள் அலுவலகப் பணிகளில் ஈடுபட தொடங்கிய பிறகு குடும்ப பணிகள் மெல்ல மெல்ல இருபாலரும் இணைந்து பகிர்ந்து செய்ய வேண்டிய நிலையும் நிலவி வருகிறது. இதுவே இன்றைய வாழ்க்கைமுறையில் அத்தியாவசியமான நாகரீகமாற்றங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பெண்களின் வேலைகளை ஆண்கள் செய்வது அநாகரிகமாக பார்க்கப்பட்ட நிலமை இன்று தலைகீழாக மாறி வருவது பெண்களின் சாமார்த்தியத்தினால் மட்டுமல்ல ஆண்களுக்குள் ஏற்பட்டிருக்கும் ஓரளவு சரியான புரிதலும் பாலின சமத்துவம் பற்றின விழிப்புணர்வும் தான்.
ஆனால் இந்த முதல் தலைமுறையினரின் இத்தகைய அறிவார்ந்த மாற்றம் முந்தையத் தலைமுறையினரின் முரணான கருத்துக்களாலும் பார்வைகளாலும் நசுக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் அதேநேரத்தில் புத்தெழில் பெற்றும் நகர்ந்து கொண்டும் தான் இருக்கிறது. நிச்சயம் அடுத்த தலைமுறையினருக்கு இப்புதிய நாகரீகமாற்றம், வாழ்க்கைமுறையை எளிமையாக்க கைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சமத்துவத்தை நோக்கிய பயணம்
பல்வேறு காரணங்களால் பறிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடந்துவரும் இப்பாலின போரின் வெற்றி என்பது பாலின பாகுபாடுகள் நீங்கி சமத்துவம் நிலைபெறல் என்ற ஒற்றை பலனை எதிர்பார்த்துதான்.
பெண்களின் நலனுக்காகவும் சமத்துவத்தைக் கொண்டுவரவும் அரசு, பல்வேறு சட்டத்திட்டங்களை அறிவிக்காமல் இல்லை.
ஆட்சி அதிகாரத்தில் இட ஒதுக்கீடு,அரசியல்,சமூக,
பொருளாதார நிலைகளில்… என்று பாலின சமத்துவ நடவடிக்கைகளுக்கு இன்றைய மக்களாட்சி, பெயரளவில் கைக் கொடுத்தாலும் செயலளவில் அதன் பயனை முழுமையாக இன்னும் எட்ட முடியவில்லை என்பதே உண்மை. காரணம் பழமையில் ஊறிப்போன நம் மக்களின் மனமாற்றம் ,பெண்கள் மீதான பார்வைமாற்றம் என்பவை சமூகத்தில் ஆண்களிடம் இன்னும் முழுமையாக ஏற்பட வில்லை என்பது தான்.
இம்மாற்றம் சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பங்களிலிருந்து ஏற்பட வேண்டும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் ஆண்பெண் என்ற இருபாலினத்தின் சமத்துவத் தன்மையை ஒருவருக் கொருவர் உணர்த்தியாக வேண்டும். குழந்தைகள் மனதில் பாலின பேதம் பார்ப்பது முற்றிலும் அறிவீனம் என்ற உண்மையை விதைக்க வேண்டும். அவ்விதைகளை உள்வாங்கிய பிஞ்சு இதயங்கள் தங்கள் வாழ்வின் அடுத்தப் படிநிலையான, பள்ளி என்ற சமூக வெளிக்குள் காலெடுத்து வைக்கும் போது கல்வியின் பயனால் அவ்விதை வேர்விட தொடங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பள்ளிகளில் சமத்துவ சிந்தை மேலும் வளர்க்கப்படும்போது ஒரு அறிவார்ந்த இளைய தலைமுறை
மலிவான எண்ணங்களுக்கு அடிமையாகாமல் பாலின சமத்துவத்தை எளிதாக ஏற்கும் என்பதில் அய்யமில்லை.
மகளிர் தினம் என்பது மகளிருக்கு வாழ்த்து தெரிவிக்கும் தினமாக மட்டுமல்லாமல் மகளிரின் சுயமரியாதையையும் உரிமைகளையும் தடுக்கும் விதத்தில் முட்டுக் கட்டைகளாக செயல்படும் இருபாலினருக்கும்
புத்திப் புகுட்டி விழிப்படைய செய்யும் தினமாக பரிணமிக்க வேண்டும். அப்போது தான் நகர்ந்து கொண்டிருக்கும் பெண்ணின முன்னேற்றம் வேகமெடுக்கும்.


