தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட சிறுபாடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கான மூன்றாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ், இன்று (01.03.2023) தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடைகள் நோய் தடுப்பூசித் திட்டத்தின்கீழ், 3 மாதங்களுக்கு குறைவான கன்றுகள் மற்றும் கன்று ஈனும் பருவத்தில் உள்ள கால்நடைகள் தவிர அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் பணி இன்று 01.03.2023 முதல் 21.03.2023 வரை அனைத்து கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கால் மற்றும் வாய் நோய் வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவதால் விவசாயிகளுக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாத்திட தேசிய கால்நடைகள் நோய் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தகுதியான கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
எனவே, இந்நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். நமது மாவட்டத்தில் உள்ள பசுவினம் மற்றும் எருமையின கணக்கெடுப்பான 1,22,365இல் மூன்று மாதத்திற்குட்பட்ட கன்றுகள் மற்றும் கன்று ஈனும் தருவாயில் உள்ள கால்நடைகளைத் தவிர்த்து 1,10,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிக்காக கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 43 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏதுவாக 1,28,000 ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசிகள், 65,000 சிரிஞ்ச்கள் மற்றும் 1,10,000 டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது நடைபெறவுள்ள மூன்றாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாமில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அனைவரும் தவறாது கலந்துகொண்டு அனைத்து மாட்டினங்களுக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று சிறுபாடு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 300 கால்நடைகளுக்கு மூன்றாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) எஸ்.சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) ஆர்.இராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் வி.சங்கரநாராயணன், ஏ.ஜோசப்ராஜ், அரசு அலுவலர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பலர் கலந்துகொண்டனர்.


