வல்லநாடு சிவன் கோவிலில் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபை சார்பில் உழவாரப் பணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடைஅம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவில் மகா சிவராத்திரி நாளில் தரிசனம் செய்ய வேண்டிய நவலிங்கபுர சிவாலயங்களில் தலைக்கோவில் ஆகும்.
சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ள இக்கோவில் மூலவர் மீது வருகிற மார்ச் மாதம் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி நேரடியாக விழும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. முப்பீட தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தக் கோவிலில் சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபைத் தலைவர் சுப்பிரமணியன் செயலர் சண்முகவேலம்மாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உழவாரப் பணி செய்தனர்.
கோவில் சுற்றுப்பிரகாரம் நந்தவனம் மற்றும் வெளிப் பிரகாரப் பகுதிகளில் புல் புதர்களை வெட்டிச் சுத்தம் செய்தல் சுவர்களில் முளைத்துள்ள செடிகளை வெட்டி அகற்றுதல் போன்ற பணிகளைச் செய்தனர். பணிகளை முடித்த பின் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தித் தரிசனம் செய்தனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் மற்றும் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.


